கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label உண்மை சம்பவம். Show all posts
Showing posts with label உண்மை சம்பவம். Show all posts

08 June, 2020

இப்படியும் சில... ஓஷோ -நகைச்சுவை கதைகள்....




தியானம்

ஒரு பெண்மணி தன் தோழியிடம் சொன்னாள், ”இன்றைக்கு உன்னிடம் ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன். இதுவரை எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்த என் மகன் இன்று தியான வகுப்பில் சேர்ந்துள்ளான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 

”தோழி சொன்னாள், ’விபரம் தெரியாமல் பேசாதே. தியானம் என்பதே சும்மா இருப்பதுதான். உன் மகன் இதுவரை தனியே சும்மா இருந்தான். இப்போது கூட்டத்தோடு சும்மா இருக்கப் போகிறான். அவ்வளவு தான் வித்தியாசம்.’ 

**********************




தையல்காரன். 

தையல்காரன் ஒருவன் இருந்தான் அவன் பெயர் சம்பாச்சு. அவனிடம் மேல் சட்டை தைக்கக் கொடுத்திருந்த ஒருவன் வந்து சட்டையைப் போட்டுப் பார்த்ததில் ஒரு கை  குட்டையாக இருந்தது. அதை சரி செய்ய வேண்டும் என்று அவன் சொன்னபோது சம்பாச்சு சொன்னான், 

”இந்த துணி கலை நயம்வாய்ந்த துணி. இதைத் திரும்பத் தைத்தால் அதன் நயம் கெட்டுவிடும். கையைக் கொஞ்சம் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டால் சரியாகிவிடும். ”சரியென்று பார்த்தால் முதுகுப் பக்கம் துணி அதிகமாக இருந்ததால் மிக லூசாக இருந்தது. இதற்கென்ன செய்வது என்று கேட்டதற்கு, ”கொஞ்சம் கூனிக் கொள்ளுங்கள். சரியாக இருக்கும். இவ்வளவு நல்ல துணியை மீண்டும் பிரித்து அதன் அழகைக் கெடுக்க விரும்பவில்லை.” என்றான் சம்பாச்சு. 

வேறு வழியின்றி அவன் சொன்ன மாதிரியே அந்த சட்டையைப் போட்டுக் கொண்டு சற்றுக் கூனியவாறு நடந்து கொண்டு கடையை விட்டு வெளியேறினான். வழியில் ஒருவன் அவனைப் பார்த்து, ’இந்த சட்டைமிக அழகாக இருக்கிறது. இதை சம்பாச்சு தான் தைத்திருக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்கிறேன் என்றான். சட்டைக்காரனுக்கோ மிக ஆச்சரியம். ”எவ்வாறு இவ்வளவு சரியாகச் சொன்னாய்?” என்று கேட்டான். வந்தவன் சொன்னான், 

”எனக்கு எப்படித் தெரியும் என்றா கேட்கிறீர்கள்? சம்பாச்சுவால் தான் உங்களைப் போன்ற கூனனுக்கு இவ்வளவு அழகாக ஆடையை தைக்க முடியும்.”


**********************



சந்தர்ப்பம் 

ஒரு வியாபாரி பகல் உணவுக்காக விடுதியை நோக்கி சென்றான். எதிரே வந்த ஒருவன் அவனை நிறுத்தினான். ”என்னை உங்களுக்கு நினைவு இருக்குமா என்று தெரியவில்லை. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த நகரத்திற்கு நான் வந்தேன். அப்போது உங்களிடம் கொஞ்சம் பணம்கேட்டேன். நீங்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினீர்கள். ஒரு மனிதனை வெற்றிப்பாதையில் செல்ல இது வழி வகுக்கட்டும் என்று வாழ்த்திக் கொடுத்தீர்கள், ”என்று சொன்னான். 

அந்த வியாபாரி சிறிது யோசித்துவிட்டு, ”ஆமாம், எனக்கு ஞாபகம் வந்து விட்டது. அப்புறம் சொல்லுங்கள்” என்று ஆவலுடன் கேட்டான். அதற்கு அவன், ”நல்லது, இப்போதும் அதைப் போல ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கொடுக்க விரும்புகிறீர்களா?” என்று கேட்டான். 

**********************



ரொம்ப நல்லது 


மாக்கி என்பவள் தன பழைய சினேகிதி டோரவைக் காண மிக ஆவலுடன் வந்தாள். 

மாக்கி: ஹே டோரா, என்ன ஆச்சரியம்! உன்னைப் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன! என்ன சமாச்சாரங்கள்? 

டோரா: ஒன்றுமில்லை, உன்னைக் கடைசியாகப் பார்த்த பின் கல்யாணம் செய்து கொண்டேன். 

மாக்கி: கல்யாணம் ஆகி விட்டதா! ரொம்ப நல்ல செய்தி தான்! 

டோரா: அப்படி ஒன்றும் பிரமாதமான வாழ்க்கை அமைய வில்லை. அவன் மிகவும் மோசமானவன். 

மாக்கி: என்ன மோசமானவனா? நான் மிகவும் வருத்தப்படுகிறேன். 

டோரா: அப்படி ஒன்றும் மோசமில்லை. அவனிடம் நிறைய பணம் இருந்தது. 

மாக்கி : பரவாயில்லையே, பணத்தோடு கணவனை அடைந்திருக்கிறாய் என்று சொல். ரொம்ப நல்லது. 

டோரா: அப்படி ஒன்றும் நல்லதாக இல்லை. அவன் ஒரு கஞ்சன். 

மாக்கி: பணம் இருந்தும் கஞ்சன் என்கிறாய். வருத்தமாக இருக்கிறது. 

டோரா: இது ஒன்றும் பெரிய வருத்தமில்லை. அவன் சொந்தமாக ஒரு பெரிய வீடு கட்டியிருக்கிறான். 

மாக்கி: சொந்தமாக வீடா! ரொம்ப நல்ல செய்தி தான். 

டோரா: அப்படி ஒன்றும் நல்ல செய்தி இல்லை. அந்த வீடு எரிந்து விட்டது. 

மாக்கி: என்ன எரிந்து விட்டதா? கேட்கவே சங்கடமாக இருக்கிறதே? 

டோரா: இதல் சங்கடப்பட ஒன்றும் இல்லை. அந்த வீடு எரிந்த போது என் கணவனும் உள்ளே இருந்தான்!


**********************

09 April, 2018

சில ஆசிரியர்கள் இப்படியா....


அரசு பள்ளியில் தையல் ஆசிரியையாக பணியாற்றி, ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரின் வீட்டுக்கு, திருமண அழைப்பிதழ் கொடுக்க, நண்பருடன் சென்றிருந்தேன்...

வீட்டில் இருந்த மூன்று தையல் மிஷின்களில், பள்ளி மாணவியர் சிலர் தையல் கற்றுக் கொண்டிருந்தனர். ஆசிரியையின் உறவினரான என் நண்பர், 'வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பின், சும்மா இல்லாமல், தையல் சொல்லிக் கொடுத்து, மாதம் ஒரு தொகையை சம்பாதிக்கிறீங்க போலிருக்கே... கூடவே, பென்ஷன் பணம் வேறு; செம குஷி தான்...' என்றார்.

அதற்கு அந்த ஆசிரியை, 'தம்பி, வீட்டில் நானும், என் கணவர் மட்டும் தான் இருக்கோம்; மகனும், மகளும் திருமணமாகி வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் இருக்கிறாங்க. எங்களுக்கு பேச்சுத் துணைக்கும், மன ஆறுதலுக்காகவும், வீடு சற்று கலகலப்பாக இருக்கவும், நாலு பேருக்கு உதவியாய் இருக்கலாம்ன்னு தான், இந்த தையல் மிஷின்கள வாங்கிப் போட்டிருக்கேன். 

'பள்ளிக் கூடத்து பிள்ளைக மட்டுமின்றி, ஏழைப் பெண்களுக்கும், இலவசமாக தையல் வகுப்பு நடத்துறேன்; கட்டணம் வாங்குறதில்ல. பென்ஷன் பணம் வருது; அது போதும்...' என்று, 'நச்'சென்று பேசி, மனதில் உயர்ந்து விட்டார்.

ஓய்வு காலத்தை, மகன், மகள், பேரக் குழந்தைகளுடன் செலவிட வாய்ப்பில்லாதோர், இதுபோன்று, தாம் கற்ற கல்வி மற்றும் கைத்தொழிலை பிறருக்கு கற்றுக் கொடுப்பதால், ஓய்வு காலம் நிம்மதியாய் கழிவதுடன், தனிமை உணர்வும் ஏற்படாது!  (திண்டுக்கல் ராமு அவர்களின் கடிதம்...)


பணி ஓய்வுக்கு பிறகு பல்வேறு ஆசிரிய பெருமக்கள்  தன்னுடைய நிறைவு காலத்தை இதுபோன்ற மனநிறைவு தரும் பணியை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்..

எனக்கு தெரிந்த ஆசிரியர்களில் ஒரு ஆசிரியர் அவர் பணி நிறைவுக்கு பிறகு  அந்த பகுதியில் உள்ள ஏழை மாணவர்களுக்கு என்று இயங்கிக்கொண்டிருக்கும் இரண்டு விடுதிகளுக்கு சென்று அங்கு இருக்கும் மாணவ மாணவர்களுக்கு இலவசமாக மாலை நேர வகுப்புகள் எடுத்துவருகிறார்கள்... அவர்களுக்கு தேவைப்படும் போது தன்னுடைய செலவிவேயே பல்வேறு கல்வி உதவிகளை செய்து வருகிறார்...

மேலும் ஒருவர்... நகரில் இருக்கும் வங்கி, தபால் நிலையம், காவல் நிலையம், வட்டாச்சியர் அலுவலகம் என ஒரு நாளைக்கு ஒரு இடம் என சென்று அமர்ந்துக்கொண்டு அங்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு படிவங்கள் புர்த்தி செய்வது அவர்களுக்கு மனு எழுதிக்கொடுப்பது என்று தன்னுடைய சேவையை செய்துக்கொண்டிருக்கிறார்...

ஏன்சார்... வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டியதுதானே என்று ஒருநாள் கேட்டே விட்டேன்... அதற்கு அவர்.. வீட்டில் தனியாக இருப்பதை விட இதுபோன்ற செயல்கள் தான் என் மனதுக்கு நிறைவை தருகிறது..  மேலும் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்க நேர்கிறது... சில சமயம் தன்னுடை ய நண்பர்கள்.. முன்னாள் மாணவர்கள் ஆகியோரை சந்தித்து உரையாடுகிறேன்.. இந்த வசதி வீட்டில் இருந்தால் கிடைக்காது என்ற விளக்கமும் கொடுத்தார்... வாழ்த்துக்கள் என்று சொல்லி அவர் பணியை பாராட்டிவிட்டு வந்தேன்

இதுபோன்ற நீங்கள் சந்தித்த வித்தியாசமான ஆசிரியர்களை பற்றிச் சொன்னால் மகிழ்வாக இருக்கும்...

26 July, 2016

இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள...!


வீதியில்
போவோர் வருவோரை

ஏக்கத்தோடு 
பார்த்துக்கொண்டிருந்தது...

தன் துயர்துடைக்க
யாராவது உதவுவார்களா என்று...

சரியாய் மூடப்படாத
குழாய் ஒன்று...!

***********************************


விடிந்துவிட்டன என்று
கரைந்துவிட்டு சென்றன 
காகங்கள்....

கனவு குதிரையை விட்டு
இறங்க மறுக்கின்றன 
என் நம்பிக்கைகள்...

படுக்கையில் 
கேட்பாரற்றுக்கிடக்கிறது
என் மெய்...!

***********************************



இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள...

என்றே 
முடிக்கவேண்டியுள்ளது...

பொய்யாக காரணம் சொல்லி
விடுப்பு எடுக்கும்
அத்தனை
விடுப்பு விண்ணப்பத்திலும்....!

***********************************
எனது முகநூலிலிருந்து....!

03 February, 2014

இதுவும் என் படுக்கையறை அனுபவமே



பகல் முழுக்க 
உன்னைவிட்டு பிரிந்தாலும்
இரவில் மட்டும் முடிவில்லை...
 

இரவெல்லாம் தொடர்ந்து
விடிந்தப்பிறகுதான் முடிகிறது
 உனக்கும் எனக்குமான தொடர்பு...
 

நான் விட்டாலும்
முழுதாய் உன்னை வெறுத்தாலும்
நீ விடுவதாயில்லை என்னை...


எப்படியாவது முயன்று 

நிறைவேற்றிக்கொள்கிறாய்
உன் விருப்பத்தை...


உன் உதடுகளால்
முத்தமிட்டு உதிரம் ருசிக்கையில்
துடித்துப்போகிறேன் நான்...


உன்னிடம் இருந்து தப்பிக்க
நான் எவ்வளவு முயன்றாலும்
தப்ப முடியவில்லை ஒருநாளும்...


உனக்கும் எனக்குமான விரோதங்கள்
எனக்கும் உனக்குமான அடிதடிகள்
கட்டிலில்தான் அதிகம் நடக்கிறது...


காதோரம் கிசுகிசுத்து விட்டு

மறைந்த உன்னை தேடி 
அலையும் என் கரங்கள்...

மனிதம் வீசிய வலையில்
விதியெனச் சிக்கிவிடுகிறது
உலகத்தில் எல்லாம்...


உன்னிடம் மட்டும்தான் 

விதிவிலக்காய் மனிதகுலமே 
வலைக்குள் ஒளிகிறது...


(ஒரு இரவில் கொசுக்கள் கொடுத்த இம்சையை
அப்படியே உங்களுக்கு கொடுத்திருக்கிறேன் கவிதையாய்...)


12 October, 2013

இப்படியும் மாணவிகளா..! மனதை கிழிக்கும் ஒரு உண்மைக் கதை


அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர்.

ரெடி, ஸ்டார்ட் , கோ

விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு குழந்தைகள் ஓட தொடங்கினர்.

ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடிரென்று கீழே விழுந்தது.

அடிபட்ட காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது.

ஏதோ சத்தம் வரவே ஓடி கொண்டிருந்த அணைத்து குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை நோக்கி ஓடி வந்தனர்.

அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு கேட்டது.

“இப்போ வலி போயிடிச்சா”

அதை பார்த்த மற்ற குழந்தைகளும் அவளை முத்தமிட்டனர்.

பின்னர் எல்லோரும் அந்த குழந்தையை தூக்கினார்கள்.

பின்னர் அந்த குழந்தையை தூக்கியவாறே வெற்றி இலக்கை நோக்கி ஓடிணார்கள்.

அதை பார்த்த விழா குழுவினரும், பார்வையளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எல்லோர் கண்களிலும் கண்ணீர். அந்த பரவசத்தால் எழுந்து நின்று கை தட்டி பாரட்டினார்கள். கண்டிப்பாக அந்த ஒலி கடவுளுக்கும் கேட்டு இருக்கும்.

ஆமாம். இது உண்மை. இது நடந்தது வேறு எங்குமில்லை. நம் இந்தியாவில், அதுவும் ஹைதராபாத்தில் நடந்த உண்மை.

அந்த விழாவை நடத்தியது மனநலம் குன்றியவர்களுகான தேசிய நிறுவனம்.

அதில் கலந்து கொண்ட குழந்தைகள் மனநலம் குன்றியவர்கள்.

ஆம். அவர்கள் மனத்தால் குன்றியவர்கள்.

ஆனால்... குணத்தால்?

இதிலிருந்து அவர்கள் உலகத்திற்க்கு சொல்வது என்ன?

மனித ஒற்றுமை

மனித நேயம்

மனித சமத்துவம்
(படித்து நெகிழ்ந்த சம்பவம் உ
ங்களோடு)

வெற்றி பெற்ற மக்கள், தன்னை விட தாழ்ந்தவர்களுக்கு உதவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தாழ்வு மனபான்மைக்கு ஆளாக மட்டார்கள்.


அன்பு மட்டுமே இந்த உலகை நிற்காமல் ஓட வைக்கும்.

தூய்மை, பொறுமை, விடா முயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும் . அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும் . –சுவாமி விவேகானந்தா …

17 September, 2013

கல்யாண நாளில் சினிமாவுக்கு போகக்கூடாதா....?

இந்த சமூகம் நமக்கு வாழ்க்கையின் பல்வேறு ரகசியங்களை கற்றுக்கொடுக்கிறது. இங்கிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்கிறோமோ அதையே நாமும் இந்த சமூகத்திற்கு திருப்பிக்கொடுக்கிறோம். இதில் சில சின்னசின்ன விஷயங்கள்கூட நம் வாழ்க்கையை வடிவமைக்கும் சிற்பியாக மாறிவிடலாம்.

ஒருவன் “பாரீஸிலிருந்து பரங்கிமலைவரை நடந்துச் சென்று... இந்த சமுதாயத்தை உற்றுநோக்கினால் ஆக்ஸ்போட்டு பல்கலைக்கழகத்தில் படித்த அனுபவம் அவனுக்கு வாய்த்து விடும்..” என்று ஒருமுறை அறிஞர் அண்ணாதுரை அவர்கள் செல்லியிருக்கிறார்கள்.

நமக்கு தேவையான வாழ்க்கை பாடங்களை நமக்கு நம்முன்னோரே விட்டுச்சென்றிருக்கின்றனர். அதுமட்டுமின்றி நம்மை சுற்றியிருப்பவர்களை உற்றுநோக்கினால் நமக்கு பல்வேறு அனுபவங்கள் நமக்கு வாய்க்கும்... அப்படி வாய்த்த ஒரு சிறு நகைச்சுவை அனுபவம்தான் இது.

திருவள்ளூர் நகரில் அச்சப்பணியில் இருப்பவர் திரு. ராகவன்... அவர்எனக்கு குரு போல... அவர் சிறுவயதில் இருந்தே அச்சகபணியை மேற்கொண்டுவருபவர்... (இன்று வரை)  அச்சகப்பணி சார்ந்த நிறை சந்தேகங்களை எனக்கு நிவர்த்தி செய்தவர் அவர்தான்... அவர் சொல்லும் அறிவுறைகள் அனைத்தும் ஏதோ வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள் கூறுவதுபோல் இருக்கும்.  அவ்வளவு வாழ்க்கை அனுபவம் அவருக்கு... சிலபேர் என்ன இவர் வகுப்பு எடுக்க ஆரம்பித்துவிட்டார் என்றுகூட சொல்வார்கள்... ஆனால் பின்னர் யோசித்தால் அதன் மகிமைபுரியும்.


அவரிடமிருந்து நிறைய தகவல்கள், வாழ்க்கை தத்துவங்கள் கேட்டிருக்கிறேன். கிட்டதட்ட 10 ஆண்டுகள் அவரோடு பழக்கம் இருந்து வருகிறது... அவர் ஒரு அதிதீவிர எம்.ஜி.ஆர். ரசிகர்... ஒருவேளை அறிவுரைகூறும் பழக்கம் அதனால் வந்ததோ என்னவோ...?


அவரோடு பழக்கம் ஏற்பட்ட காலத்தில்.. ஒருமுறை அவருடைய வீட்டுக்கு சென்றிருந்தேன்.. அப்போது அவர்களின் பேரக்குழந்தைகள் அவரிடம் வந்து தாத்தா சினிமாவுக்கு போகலாம் என்று கேட்க... இவர் இன்றைக்கு வேண்டாம்... இன்று கல்யாண நாள் என்று சொன்னார். அந்தகுழந்தைகளும் சரியென்று சொல்லிவிட்டார்கள்.

ஓ.. இவருக்குதான் இன்று கல்யாண நாள் போல... என்று நானும் அமைதியாக இருந்துவிட்டேன்... ஒரு மாதம் கழித்து மீண்டும் அதே சம்பவம்... அவருடைய பேரக்குழந்தைகளிடம் இன்று கல்யாண நாள் சினிமாவுக்கு வேண்டாம் என்றார். எனக்கு ஆச்சரியமும் கோவமும் வந்தது.. போன மாதம்தான் இவருக்கு கல்யாண நாள் என்றார். இப்போது... இன்றும் கல்யாணநாள் என்கிறாறே.... ஒருவேளை குழந்தைகளை ஏமாற்ற இப்படி சொல்கிறாரா என்று எனக்கு ஒரு சந்தேகம் வந்தது.

எதுக்கு சந்தேகம் என்று.. அவரிடம் கேட்டே விட்டேன் என்னங்க.. போனமாதம்தான் கல்யாண நாள் என்றீர்கள்... இன்றும் கல்யாண நாள் என்கிறீர்கள்.. அப்படி என்தனை நாள்தான் உங்களுக்கு கல்யாண நாள் என்று கேட்க அவர் புன்னகையோடு ஒரு விளக்கம் அளித்தார்.


தம்பி... கல்யாண நாள் என்று சொன்னது எங்களுக்கு அல்ல.. இன்று முகூர்த்த தினம்.. நகரில் அனைத்து திருமண மண்டபங்களிலும் திருமண விழா நடக்கிறது. இன்றைய நாளில் சினிமாவுக்கு சென்றால் திரையரங்கங்கள் கூட்டமாக இருக்கும். நிறைய பேர் குடித்துவிட்டுவேறு சினிமாவுக்கு வருவார்கள். குடும்பமாக செல்வர்களுக்கு சீட்டும் சரியாக கிடைக்காது. படத்தையும் சரியாக பார்க்க முடியாது... அதனால் தான் என்றெல்லாம் முகூர்த்தநாளாக இருக்கிறதோ அன்றைதினம் குடும்பத்தோடு சினிமாவுக்கு போவதில்லை.

மற்ற நாட்களில் சென்றால் கூட்டமும் குறைவாக இருக்கும். சீட்டும் நமக்கு வசதியாக கிடைக்கும் பிரச்சனைகளும் இருக்காது என்று விளக்கமளித்தார்.

பாருங்கள் ஏதோ ஒரு முகூர்த்த நாளில் சினிமாவுக்கு சென்று அவர்பட்ட இன்னல்கள்தான் அவர் வாழ்க்கையில் அப்படியொரு நாட்களில் குடும்பத்துடன் சினிமாவுக்கு செல்லக்கூடாது என்று உணர்த்தியிருக்கிறது.

நாமும் இதை பின்பற்றுவோம். எந்தநாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களோ அன்றைய தினத்தில் திரையரங்குகளுக்கு குடும்பத்தோடு செல்வதை தவீர்க்கவும்... தனியாக வேண்டுமானால் செல்லலாம் அதில் பிரச்சனையிருக்காது.. குழந்தைகள், பெண்கள், பெரியோர்கள் என குடும்பத்தோடு போகும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்தால் நல்லது.

சிங்கம்-1 படத்தில் ஒரு காட்சி வரும் பாருங்கள்... அப்படி நடந்தால் என்னசெய்வது... நாம என்ன சூர்யாவா.. உடனே வண்டியை எடுத்துக்கொண்டு சண்டைக்கு புறப்பட...!
Related Posts Plugin for WordPress, Blogger...