கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label பாலா. Show all posts
Showing posts with label பாலா. Show all posts

15 January, 2016

தாரை தப்பட்டை - சினிமா விமர்சனம்.. Tharai Thappattai review



சினிமா என்ற கனவுத்‌ தொழிற்சாலையில் பூத்துவிடும் அத்தனை மலர்களும் மனம் வீசுவதில்லை. கடந்த ஆண்டு 200-த் தாண்டி தமிழ் திரைப்படங்கள் வந்தாலும் ஒரு சிலப்படங்கள் தான் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்ற படமாக மாறியிருக்கிறது.... அப்படி இடம் பிடிக்கும் படத்தின் கதாபாத்திரங்களையும் அந்த இயக்குனரையும் நாம் பாராட்டாமல் இருப்பதில்லை. 

ஒரு சாதாரண கடைநிலை ரசிகனை  திருப்திப்படுத்தும் எந்த கதையானாலும் அதை கோபுரத்தில் வைக்கும் குணம் தமிழ் ரசிகர்களுக்கு கட்டாயம் உண்டு... அப்படி எதிர்பார்த்த அளவு இல்லை என்றால் அதை புறந்தள்ளிவிட்டு போகவும் துணியமாட்டார்கள்.


ஒரு இயக்குனர் மட்டுமே ஒரு படத்தின் உயிர் நாடி. அவர் அசைக்கிறபடி மட்டும் மற்றக்கலைஞர்கள் அ‌சைகிறார்கள்... ஒற்றை உத்தரவுக்கு கட்டுப்பட்டு அத்தனை கதாபாத்திரங்களும் அசைந்தால் அதுதான் ஒரு உயிரோட்டமான திரைப்படமாக ஏற்றுக்கொள்ளபடுகிறது... 

ஒரு படத்தின் தோல்வி என்பதை முழுக்க முழுக்க இயக்குனர் மட்டுமே ஏற்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து...  ஒரு இயக்குனர் வைத்துள்ள கதைக்கும் அந்த கதாபாத்திரத்திற்கும் அந்த இயக்குனர் மட்டுமே உயிர்கொடுக்க முடியும் மாறாக மற்றவர்கள் தன்னுடைய ஹீரோயிஷத்தை காட்ட நினைத்தால் அது உயிரற்ற கதையாக மாறிவிடுகிறது...


கோடம்பாக்கத்தில் கண்டிப்பான இயக்குனர் என்ற பெயர் எடுத்திருக்கும் இயக்குனர் யார் என்றால் அது பாலா தான்... எப்போதும் என்னால் உயிரோட்டாமன கதைகளை இந்த தமிழ் சினிமாவுக்கும் கொடுக்க முடியும் என்று மறுபடியும் ஒருமுறை நிறுபித்திருக்கிறார். எதார்த்தம், காதல், நகைச்சுவை, கொடுமை, பாசம், வலி, சோகம் என அத்தனையையும் ஒருசேர ஒற்றைக்கோட்டில் நிறுத்தும் திறமை பாலாவிடம் மட்டுமே உள்ளது... அந்தவகையில் தாரை தப்பட்டை என்ற ஒரு சிறப்பான படத்தை கொடுத்ததற்கு பாலா அவர்களுக்கு ஒரு சபாஷ்...


கதைக்குள்...!

தஞ்சாவூரில் “சன்னாசி தாரை தப்பட்டை குழு“ என்ற ஒரு தப்பாட்ட நடனக்குழுவை நடத்தி வருபவர் சன்னாசி என்ற சசிக்குமார்... தன்னுடைய தந்தையான சாமி புலவரிடம் (ஜி.எம்.குமார் ஐயா) அனைத்து வித்தையையும் கற்றுக்கொண்டு இந்த நடனக்குழுவை நடத்திவருகிறார்.

அதில் பிரதான நடனக் நாட்டியக்காரியாக சூறாவளி. (சூறாவளி கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார்) சிறந்த தாரை தப்பட்டை குழுவாக இருக்கும் இவர்கள் பல்வேறு நடன நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார்கள்...


சசிக்குமாரை உயிருக்கு உயிராக விரும்பும் வரலட்சுமி... அவருக்காக எதையும் செய்யும் துணிச்சல் மிக்கவராக இருக்கிறார்.. நடனக்குழுவில் அப்படிஒரு ஆட்டம்... இவரை ரசிக்கவே குவிகிறது ஆர்டர்கள்...

 
பெண்களை வைத்து விபச்சாரம், வாடகைத்தாய் என தவறான வழியில் பணம் சம்பாதிக்கும் கொடுர வில்லனான சுரேஷ்.. நான் அரசு ஊழியன் என்றும் கூறி. ரொம்ப நல்லவன் போல் நாடகமாடி  அனைவரையும் ஏமாற்றி வரலட்சுமியை மணந்துக்கொள்கிறார்...

வரலட்சுமி போனப்பிறகு நடன நிகழ்ச்சிகள் ஏதும் வராததால் வறுமையில் தள்ளப்படுகிறது சன்னாசி நடன குழு... வறுமையை போக்க  துக்க வீட்டில் ஆடும் அளவுக்கு இவர்கள் தள்ளப்படுகிறார்கள்...

அ‌ரசுவேலை  மாப்பிள்ளை.. இவளாவது நல்லாயிருக்கட்டும் என்றுதான் சசிக்குமார் தன்னுடைய காதலை மறைத்து இந்த திருமணத்தை நடத்திவைக்கிறார். ஆனால் வரலட்சுமியை தவறான வழியில் பயன்படுத்தப்படுகிறார் என்று சசிக்குமாருக்கு தெரியவரும்போது அவளை கொடுமைப்படுத்திய அனைவரையும் துவம்சம் செய்கிறார்...

வரலட்சுமி எவ்வாறு ஏமாற்றப்பட்டார் அவர் அனுபவிக்கும் கொடுமைகள் என்ன...? இறுதியில் என்னவாயிற்று என்று.... சோகமும், நெருடலும் மட்டுமே என்னுடைய படத்தின் கிளைமாக்ஸ் என்பதை மீண்டும் ஒருமுறை நிறுபித்து படத்தை நிறைவு செய்கிறார் பாலா...!


படம் முழுவதும் நடன கலைஞர்களின் வாழ்க்கை முறை அவர்களின் பேச்சுவழக்கு.... ஆடை அணிகலன்கள்... அவர்களுடைய துயரங்கள் அனைத்தையும் அழகாக நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் பாலா...

சசிக்குமார் ஒரு தாரை தப்பட்டை நடன கலைஞனாகவே வாழ்ந்திருக்கிறார்... சன்னாசி கதாபாத்திரத்தில் மிகவும் சிரமப்பட்டு தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து  கதைக்கு வலுசேர்க்கிறது சசிக்குமாரின் நடிப்பு....


அனைத்துக்கும் சிகரம் வைத்தார்போல் சூறாவளி கதாபாத்திரத்தில் தன்னை நடிப்பின் சூறாவளி என்று நிறுபித்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்... அப்படி ஒரு நடிப்பு... மாமா என்று சசிக்குமாரை சுற்றிவரும்போதும்... நாட்டியக்காரியாக குட்டைப்பாவடை அணிந்து நடனம் ஆடும்போதும், காதலுக்காக எதையும் செய்ய துணியும்போதும்... குடித்துவிட்டு குமார் ஜயாவிடம் அலப்பரை செய்யும்போதும் இறுதி காட்சிகளில்... என அத்தனை இடத்திலும் நல்லதொரு ஸ்கோர்... சபாஷ் வரலட்சுமி... (போடா போடி படத்தை பார்த்து எதற்கு இதற்கு சினிமாவெல்லாம் என்று திட்டியிருந்தேன்...)

ஜி.எம்.குமார் ஜயா அவன் இவன் படத்திற்கு பிறகு இந்த படத்திலும் சிறப்பாக பயன்படுத்திருக்கிறார் பாலா. சாமி புலவன் என்ற கதாபாத்திரத்தில் நல்லதொரு நடிப்பு.. மேலும் படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் தங்களுக்காக பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்....


இசைசார்ந்த கதை என்பதால் இசைஞானி சரியான தேர்வு... இளையராஜா தன்னால் எப்போதும் எந்தகாலத்துக்கும் நின்று நிலைக்கமுடியும் என்று 1000-மாவது படத்திலும் நிறுபித்திருக்கிறார்.. பாடல்கள் பிண்ணனி என அத்தனையும் அற்புதம்...

வரலட்சுமி அடிக்கடி தண்ணியடிக்கும் காட்சிகளைத்தவிர குறைஎன்று கூற வேறுஎதுவும் தெரியவில்லை...


ஹீரோ ஹீரோயினை ஒன்று சேர்த்து படம்முடிக்கும் தமிழ் சினிமாவின் பார்முலாவுக்கு விதிவிலக்கு பாலா... எப்போதும் இவர் படத்தில் கடைசியில் சுபம் எதிர்பார்க்கமுடியாது.. இதிலும் அப்படித்தான்... சுபம் இல்லை என்றாலும் பாலாவின் முடிவுகள் அனைவரையும் கனத்த இயதத்துடன் ஏற்றுக்கொள்ள வைத்து விடுகிறது...

தாரை தப்பட்டை - அமர்க்களம்...

13 April, 2013

சிவாஜியை அடுத்து பாலாவை கலாய்த்த விவேக்..!

 
வயிறு குலுங்க சிரிக்கக்கூடிய காமெடி காட்சிகளில் நகைச்சுவை நடிகர் விவேக் நடித்து பல நாட்களாகிவிட்டன. எனவே இழந்த மார்கெட்டை மீண்டும் பிடிக்க ’மச்சான்’ திரைப்படத்தில் தீயாய் வேலை செய்துகொண்டிருக்கிறாராம் விவேக்.


சமீபத்தில் ’நடிகர் திலகம்’ சிவாஜியைப் போல் வேஷமிட்டு நடித்து கிண்டல் செய்ததற்காக பெரும் எதிர்ப்பை சந்தித்த விவேக் மச்சான் படத்தில் யார்யாரை கிண்டல் செய்கிறாரோ, அவர்களிடமெல்லாம் பர்மிஷன் வாங்கி வருகிறாராம். மச்சான் படத்தில் பெரிய பணக்காரராக இருக்கும் விவேக் தான் செய்யும் சில காரியங்களால் பிச்சைக்காரனாகி விடுவாராம்.

அவர் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவன், ’யோவ், நீ பாலா படத்துல நடிக்க போவலாம்ல. கெட்டப் அப்படியே இருக்கு! என்று ஐடியா கொடுக்க, 'பாலா படத்துலயா, நானா, நடிக்க சொல்றீயா? அடப்பாவி. பாலா படத்துல நடிச்சவங்க ரொம்ப பேரு இப்ப இப்படிதானேடா திரியுறாங்க' என்பதுபோல் வசனம் வைத்திருக்கிறாராம்.

மறுபடியும் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காக டீசண்டாக இயக்குனர் பாலாவுக்கு ஃபோன் செய்து “சார் உங்கள கலாய்க்கிற மாதிரி வசனம் வெச்சிருக்கேன். உங்களுக்கு சங்கடம்னா எடுத்துறலாம். இல்லன்னா பேசிடலாம்” என்று கூறினாராம்.

இதற்கு பாலா “ அதெல்லாம் பரவால்ல பேசுங்க. இன்னும் எவ்வளவு வேணும்னாலும் கலாய்ச்சிக்கோங்க” என்று முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். விவேக் பொதுவாகவே மற்றவர்களை கிண்டலடித்து தான் காமெடி காட்சிகளில் நடிப்பார். தமிழ் சினிமாவில் விவேக் கிண்டல் அடிக்காத ஆளே இல்லை எனலாம்.

17 June, 2011

அவன் - இவன் திரைவிமர்சனம்


பாலாவின் இயக்கத்தில் கல்பத்தி அகோரம் தயாரிப்பில் இன்று திரைக்கு வந்துள்ள அவன் இவன் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம். கமுதிக்கோட்டை ஜமீன்தார் திரிபாதியாக ஜி.வி. குமார். அவரது 60-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஷால் பெண் வேடமிட்டு ஆடிப் பாடுகிறார்.பெண்களே தோற்றுப்போகும் அளவிற்கு நடனமாடியிருக்கும் விஷாலா இது என்று நம்பமுடியவில்லை. அவரது நடிப்பும், நடனமும் கனகச்சிதம்.

விஷாலின் பரம்பரை குலத் தொழிலே திருடுவதுதான். விஷாலின் அப்பாவிற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி முன்னாள் நடிகை அம்பிகா. அவரது மகனாக மாறு கண் கொண்ட விஷால் வருகிறார். திருடுவது பிடிக்காமல் இவர் ஒரு நாடக நடிகராக முயற்சிக்கிறார். இவரது தந்தையின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர் ஆர்யா. திருட்டுத் தொழில் செய்வதில் மன்னனாக வருகிறார். ஜட்ஜ் வீட்டில் இருக்கும் லாக்கரின் சாவி தொலைந்து போய்விட, அதை திறக்க ஆர்யாவை கூட்டிச் செல்கிறார்கள். அவரது திருட்டுத் திறமைக்கு இதை சான்றாக காட்டுகிறார் பாலா.

விஷால் திருடப் பிடிக்காமல், நாடகத்தில் நடித்து கொண்டிருக்கிறார். திருடனான ஆர்யாவோ பல வழிகளில் திருடி சம்பாதிக்கிறார். “நம்ம குலத் தொழிலே திருடுவதுதான். இல்லையெனில் அது சாமி குத்தமாகிவிடும்’’ என்று அம்மாவின் தூண்டுதலால் விஷாலும் திருடனாகிறார். தானும் ஒரு திருடன் என்பதை நிரூபிக்க விஷால் ஒரு வீட்டிற்குள் திருட நுழைகிறார். அங்கு கான்ஸ்டபிளாக இருக்கும் அவரது கதாநாயகியான ஜனனி ஜயரை சந்திக்கிறார். அங்கு நடக்கும் சில நிகழ்வுகளால் இவர்களுக்குள் காதல் மலர்கிறது.

இதனிடையே டுடோரியல் கல்லூரியில் படிக்கும் மாணவி தேன்மொழியாக வருகிறார் மதுஷாலினி. இவருடைய அழகால் மயங்கும் ஆர்யா, அவரை விரட்டி விரட்டி காதலிக்கிறார். மதுவும் காதலிக்கிறார். இதனிடையே அந்த ஊரில் இருக்கும் பாரஸ்ட் ஆபிஸர், ஜமீன்தார் திரிபாதியை அவமானப்படுத்தி விடுகிறார். அவரை பதிலுக்கு அவமானப்படுத்த வேண்டும் என்று திரிபாதி ஆர்யாவிடமும், விஷாலிடமும் சொல்கிறார்.

அதன்படி பாரஸ்ட் ஆபிஸரை அவமானப்படுத்த இருவரும் மலைக்கு செல்கின்றனர். பாரஸ்ட் ஆபிஸரோ 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தன மரங்களை மலையிலிருந்து அலுவலகத்திற்கு கொண்டு வருகிறார். அந்த நேரத்தில் விஷாலும், ஆர்யாவும் வந்து சண்டையிடுகிறார்கள்.

போலிஸார் இந்த ஒரு கோடி சந்தனமரத்திற்குதான் இவர்களிருவரும் சண்டையிடுகிறார்கள் என மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விடுகிறார். ஒரு கோடி சந்தனமரம் இருக்கும் லாரியை எடுத்துக் கொண்டு விஷால் தப்பித்து விடுகிறார். ஆர்யா போலிஸிடம் சிக்கிக் கொள்கிறார். பிறகு விஷால் லாரியைக் கொண்டு வந்து வனத்துறையிடம் ஒப்படைக்க, இருவரும் ரிலீஸ் செய்யப்படுகிறார்கள்.

அந்த ஊரில் இருக்கும் மாடுகளை கடத்திச் சென்று இறைசிக்காக விற்கும் வேலையை செய்து வருகிறார் ஆர்.கே.  இதை திரிபாதி கண்டறிந்து தடுப்பது மட்டுமின்றி காவல் துறை, பத்திரிகை என அனைவருக்கும் தெரிவித்து விடுகிறார். இதனால் சிறைக்குப் போகும் ஆர்.கே, திரும்பி வந்து ஜமீன்தாரை கொடூரமாக கொலை செய்து விடுகிறார்.


 ஹைனஸ் என்று அந்த ஊர் மக்களால் அழைக்கப்படும் ஜமீன்தார் மேல் பற்று கொண்டுள்ள ஆர்யாவும், விஷாலும் இதற்கு பழிவாங்க முனைகிறார்கள். இதில் யார் ஜெயித்தார், யார் தோற்றார் என்று காட்டி சுபம் போட்டிருக்கிறார் பாலா. 

தனது வழக்காமன படங்களிலிருந்து நகைச்சுவை கலந்த படத்தை வழங்கியிருக்கும் பாலாவிற்கு விஷாலின் அட்டகாசமான நடிப்பு உறுதுணையாக நிற்கிறது. 

மாறுகண்ணை கொண்டு நடித்திருக்கும் விஷாலின் துணிச்சல் பாராட்டப் படவேண்டிய ஒன்று. மாறுகண்ணுடையவராகவே வாழ்ந்திருக்கிறார். அகரம் பவுண்டேசன் சார்பில் அந்த கிராமத்திற்கு வரும் நடிகர் சூர்யாவிடம் நாடக நடிகராக இருக்கும் விஷால் நடித்துக் காட்டும் ஒரு காட்சி போதும் அவரது திறமையை பறைசாற்ற... விஷாலா இப்படி நடிப்பது என்று நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார். பாலா சொன்னது போல் இவருக்கு விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அசால்டான பேர்வழியாக வரும் ஆர்யாவின் நடிப்பும் பிரமாதம். தன் காதலியான மதுஷாலினியை மறந்து விடு என்று திரிபாதி சொல்லும் போது “மலத்தை திங்க சொல்லு திங்கறேன்... அவளை மறந்துடுன்னு சொன்னா எப்படி” என்று நறுக்கென தெறிக்கிறார்.

ஜனனி ஐயருக்கு நல்ல வாய்ப்பு. அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். மதுஷாலினி சில காட்சிகளில் வந்து போனாலும் மனதில் நிற்கிறார்.

வில்லனாக வரும் ஆர்.கே வழக்கமான பாலாவின் படங்களில் வரும் கொடூரத்தனத்தை கண்முன்னே நிறுத்துகிறார். திரிபாதியை மலைமேல் அம்மணமாக அடித்துக் கொல்வது, மரத்தில் கட்டி தொங்க விடுவது என குரூரமாய் காட்சியளிக்கிறார்.

ஹைனாஸாக வரும் ஜி.வி.குமாரின் நடிப்பு இப்படத்திற்கு மற்றொரு பலம். இவரைச் சுற்றித்தான் இப்படத்தின் கதை நகர்கிறது என்றே சொல்லாம். அந்த அளவிற்கு இவரது நடிப்பு வெகு இயல்பு.

இப்படத்தின் மேக்கப் மேனுக்கு ஒரு சபாஷ் போட்டே ஆகவேண்டும். அவ்வளவு நேர்த்தி. யுவனின் இசையைமைப்பை பாலாவின் அட்டகாசமான திரைக்கதை முந்திச் சென்றுவிடுகிறது. (பிலிமிக்ஸ்)

இத்தனை பேரையும் நேர்த்தியாக வேலைவாங்கியிருக்கும் பாலாவை எத்தனை பாராட்டினாலும் தகும். மொத்ததில் பாலாவின் மற்றொரு ஆணித்தரமான படைப்பு இந்த ‘அவன் இவன்’

மார்க் உங்க இஷ்டம் போல...  ரேங்க் ஏதோ போட்டுகுங்க... தியாட்டரில் நீங்க பார்க்கிற வரை ஓடும்.. வேறஏதாவது டவுட் இருந்தா படம்பார்த்து தீர்த்துக்கங்க...

Related Posts Plugin for WordPress, Blogger...