கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

27 July, 2016

அம்மா சொன்ன உண்மை... அப்துல்கலாம் நெகிழ்ச்சி..!


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சிறந்த துறவியான ஷேக் அப்துல் காதர் அல்-ஜிலானி வாழ்க்கையில் நிகழ்ந்த கதையை, தற்போது நான் உங்களுக்கு சொல்லப் போகிறேன். 
 
ஒரு நாள் சிறுவன் அப்துல் காதர் தனது வீட்டுக் கூரையின் மேல் ஏறிக்கொண்டான். அங்கிருந்து பார்க்கையில் ஏராளமான மக்கள் அரபி மலைக் குன்றுகளில் இருந்து திரும்பி வந்துக்கொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் அந்த இடத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மைல் அப்பால் இருக்கும் மெக்காவுக்கு ஹஜ் பயணமாக சென்று, திரும்பி வருகிறார்கள்.
 
குழப்பமடைந்த அப்துல் காதர் தனது அன்னையிடம் சென்று, அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வதற்காக பாக்தாத் செல்ல அனுமதி கேட்டான். புனித அழைப்பை அந்தத் தாய் புரிந்துகொண்டார். காதர் உடனே பாக்தாத் செல்ல அனுமதித்தார். தனது தந்தையிடமிருந்து அவன் பங்காக பெறப்போகும் நாற்பது தங்க நாணயங்களையும் தாய் அச்சிறுவனிடம் அளித்தார். 
 
அவனை வழியனுப்புவதற்காக கதவு அருகே வந்த அந்த தாய், என்னருமை மகனே! நீ போகிறாய்! இறுதித் தீர்ப்பு வரும் நாள் வரை நான் உன்னை பார்க்க போவதில்லை என்றாலும் அல்லாவுக்காக உன்னிடமிருந்து இருந்து என்னை பிரித்துக் கொண்டேன். ஆனால் என்னிடமிருந்து ஒரு அறிவுரையை நீ எடுத்துச் செல்ல வேண்டும். என் மகனே, நீ எப்பொழுதும் உண்மையை உணர வேண்டும், உண்மையே பேச வேண்டும் உனது வாழ்க்கையைப் பணயம் வைக்க நேரிடினும் உண்மையையே பரப்ப வேண்டும் என்று கூறினார்.

அப்துல் காதரும் மற்றவர்களும் சிறிய வண்டிகளில் குழுவாக பாக்தாத்தை நோக்கி பயணித்தானர். வண்டிகள் கடினமான நிலபரப்பை கடந்து செல்லும் போது, குதிரைகளில் திடீரென வந்த கொள்ளையர் கூட்டம் அவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்தது. யாரும் அச்சிறுவனை பொருட்படுத்தவில்லை. 
 
கொள்ளையர்களில் ஒருவன் அப்துல் காதரை கவனித்து ஏய் சிறுவனே, பாவம் நீ ! உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டான். அப்துல் காதர், ஆமாம். என் தாயார் 40 பொற்காசுகளை என் சட்டையின் உள்பகுதியில் தைத்து வைத்துள்ளார் என்று பதில் அளித்தான். அதை கேட்ட கொள்ளையன், நகைச்சுவைக்காக காதர் அவ்வாறு சொல்வதாக எண்ணி புன்னகைத்தான். அவனை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டுச் சென்றான். 
 
கொள்ளையர் தலைவன் அங்கு வந்தபோது, இந்த பையனை அவனிடம் கொண்டு சென்றனர். இந்த பையன் சொல்கிறான் இவனிடம் 40 பொற்காசுகள் உள்ளனவாம். பயணிகள் அனைவரையும் கொள்ளையடித்து விட்டோம். ஆனால் இவனைத் தொடக்கூட இல்லை. இவனிடம் பொற்காசுகள் உள்ளதை யாராவது நம்புவார்களா? என்று ஒரு கொள்ளையன் சொன்னான். கொள்ளையர் தலைவன் மீண்டும் அப்துல்காதரை கேட்க, அவன் அதே பதிலை சொன்னான். தலைவன் அவனை அருகில் அழைத்து சட்டையை ஆராய, சிறுவன் சொன்னவாறு பொற்காசுகள் சட்டையின் உள்பகுதியில் தைக்கப்பட்டு இருந்தன.

அதிர்ச்சியுற்ற கொள்ளையர் தலைவன், எதனால் இந்த உண்மையை சொன்னாய்? என்று அப்துல் காதரை வினவ, வாழ்க்கையை இழக்கும் சூழ்நிலை வந்தாலும் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று என் தாய் சத்தியம் வாங்கிக் கொண்டார். 40 பொற்காசுகள்தானே, போகட்டும். என் தாயாருக்கு கொடுத்த வாக்கை மீறமாட்டேன். அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன். அதனால்தான் உண்மையை கூறினேன், என்று பதில் அளித்தான். 
 
இதைக் கேட்ட கொள்ளையர்கள் விம்மி விம்மி அழுதனர். உனது தாயாரின் அறிவுரைக்கு இவ்வளவு மதிப்பளிக்கிறாயே! ஆனால் நாங்களோ, பல ஆண்டுகளாக எமது பெற்றோருக்கும், எம்மை படைத்தவனுக்கும் துரோகம் இழைத்துவிட்டோம். இன்று முதல் நீர்தான் எமது தலைவர் என்று கொள்ளையர்கள் கூறினர். கொள்ளையடிப்பதை அன்று முதல் விட்டொழித்து திருந்தி வாழ்ந்தனர். 
 
ஷேக் அப்துல் காதர் அல்- ஜிலானி என்ற ஒப்பற்ற துறவி பிறந்ததையும் உலகம் கண்டது. ஒரு தாய் தனது குழந்தைக்கு உண்மையைப் பற்றி சொன்ன செய்தியில் துறவி உருவானார். இந்த இடத்தில் இதைசொல்வதில் நான் மிகவும் நெகிழ்ச்சி அடைகிறேன்... இத்தருணத்தில் திருவள்ளுவரின் வாக்கை நினைவுகூற விரும்புகிறேன்.

மனத்தோடு வாய்மை மொழியின் தவத்தோடு
தனஞ்செய் வாரின் தலை.

அருந்தவத்தையும், வாரி வழங்கும் கொடையையும்விட சிந்தனையிலும், செயலிலும் உண்மையோடு இருப்பது அதிக சக்தி வாய்ந்தது என்பதே இக்குறளின் பொருளாகும்.
 
# 57-வது குடியரசு தின விழாவில் அப்துல்கலாம் ஐயாவின் உரையில் இருந்து...!

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...