கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

24 January, 2014

பணத்தை ஆற்றில் எறியும் தைரியம் உண்டா..?


ஒரு நாள் பெரிய பணக்காரன் ஒருவன், ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஆயிரம் காசுகளை அன்பளிப்பாக அளிக்க விரும்பினான்.

ஆனால் பரமஹம்சர் அதை வாங்க மறுத்தார். பணக்காரனோ விடாமல் வற்புறுத்தினான்.

சரி, உன் மன நிம்மதிக்காக பெற்றுக் கொள்கிறேன். இனி, நான் விரும்பியபடி இதைச் செலவழிக்கத் தடையில்லையே? என்று கேட்டார் பரமஹம்சர்....

ஒரு தடையும் இல்லை! என்றான் செல்வந்தன்.

“இந்த ஆயிரம் காசுகளையும் கொண்டு போய் கங்கையில் எறிந்துவிட்டு வா!” என்றார் அந்த மகான். பணக்காரன் அதிர்ந்து போனான். ஆனாலும் அவருடைய கட்டளைப்படி கங்கைக் கரைக்குச் சென்றவன் மிகுந்த துயரத்துடன் ஒவ்வொரு பொற்காசாக எடுத்து நீரில் எறிந்தபடி நின்றான்.

அரை மணி நேரம் கடந்தும் அவன் திரும்பாததால் ராமகிருஷ்ணர் கரைக்குச் சென்று பார்த்தார். ஒவ்வொறு காசாக நீரில் எறிந்து கொண்டிருந்தவனிடம், “என்ன முட்டாள்தனம் இது? ஒரே முறையில், ஒரு கணப்பொழுதில் வீசியெறிந்து விட்டு, விரைவாகத் திரும்பாமல் ஏன் ஒவ்வொன்றாக எண்ணி எறிகிறாய்?” என்று கேட்டார்.

“ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக நான் சேமித்த நாணயங்களை ஒரே கணத்தில் வீசி எறிந்து விட மனம் வரவில்லை”. அதனால்தான் ஒவ்வொன்றாக நீரில் எறிந்தபடி நிற்கிறேன் என்றான் செல்வந்தன்.

அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்ட பரமஹம்சர், “இழப்பதற்கு முடிவெடுத்து விட்டால், ஒரே கணத்தில் இழந்துவிட வேண்டும்” என்றார்.

ஆனால், இன்று பலரும் பணம் ஒன்றுதான் வாழ்க்கை என்று பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பணம் எவ்வளவு சேர்த்தாலும் அவர்களுக்குப் போதுமென்ற மனமே இருப்பதில்லை. தனக்கு மட்டுமில்லாமல், தன் பிள்ளைகளுக்கு மட்டுமில்லாமல், தனக்குப் பின்னால் வரும் தலைமுறைகளுக்கும் தானே பணத்தைச் சேர்த்து வைத்துவிட வேண்டும் என்கிற தவறான நோக்கத்தில் அவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்தப் பணம் அவர்கள் கடைசிக் காலத்தில் நிம்மதியைத் தந்து விடாது. ஆன்மிகம், தர்மமும், மனித ஒழுக்கமுமே உண்மையான மன நிம்மதியைத் தரும்.

02 September, 2013

நான் நாத்திகனல்ல...



‌
கட்டும் காவியும்
சூட்டும் குல்லாவும்
நெய்யப்பட்டது ஒரே நூலில்தான்
மனம் இதனை ஏன் மறந்துபோயிற்று...!


நானும் கடைப்பிடிக்க கற்றுக்கொண்டிருப்பேன்
சாதியின் பெயரை இரத்த அணுக்களில்
அடைக்கப்பட்டிருந்தால்...


பசிக்காத வயிறும்

கரையாத கண்களும்
கலங்காத மனமும்
இன்னும்  காணமுடியவில்லை இந்த மண்ணில்...


இழக்க எத்தனையோ இருக்கிறது
சாதி மதக்கல்வெட்டுக்கள்
இந்த தேசத்தில்...


தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!

25 August, 2013

உலகின் முதல் ஞானப்பழம்....




திருமுருக கிருபானந்த வாரியார் சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். அருள்மொழி அரசு, என்றும் திருப்புகழ் ஜோதி என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது பிறந்தவர் இவர். செங்குந்த வீர சைவ மரபினர்.

ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார். வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமியை தனது 19-வது வயதில் கல்யாணம் புரிந்தார்.

இவரது தந்தையார் இசையிலும் இயலிலும் வல்லவர். மாபெரும் புராண வல்லுநர். தந்தையாரே வாரியாருக்கு கல்வி, இசை, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.

வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை யானைக்கவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார். தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார்.

19-ம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது ஆன்மிக மொழி பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர்.

அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக்கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும். சுவாமிகள் 1936-ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து திருப்புகழ் அமிர்தம் என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி கைத்தல நிறைகனி என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது.

சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின.

வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, ராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன. குழந்தைகளுக்கு தாத்தா சொன்ன குட்டிக்கதைகள் என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.

தமிழ் இசைச் சங்கம் இசைப்பேரறிஞர் என்ற விருதை 1967-ம் ஆண்டு வழங்கியது. 1993 அக்டோபர் 19-ம் தேதி வாரியார் சுவாமிகள் லண்டன் பயணமானார். ஆன்மிகத்துக்காகவே பாடுபட்ட வாரியார் சுவாமிகள் 1993-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி விமானப் பயணத்திலேயே காலமானார்.

இன்று அவருடைய பிறந்த தினம்...
இந்த தினத்தில் அவரை நினைவு கூறுவது எனக்கு மகிழ்ச்சியே....!

03 August, 2013

இப்படியும் ஒரு கணவரா..?



ஒரு மனிதன். நீண்ட நாளைக்குப் பிறகு கல்யாணம் பண்ணிக் கொண்டான். ‘மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி?’ அவன் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.

ஒரு நாள் கடை வீதிக்குப் போனான். கடையில் ஒரு பொருளைப் பார்த்தான். இதுவரையில் அவனுக்குப் பரிச்சயம் இல்லாத ஒரு பொருள் அது. ஆகவே, தனக்குத் தெரியாதது எல்லாமே தன் மனைவிக்கும் தெரியாது என்கிற ஒரு முடிவுக்கு வந்து விட்டான்.

‘‘அது என்னங்க?’’ என்று விசாரித்தான்.

‘‘அதன் பெயர் தர்மாஸ்ஃபிளாஸ்க்!’’ என்றார் கடைக்காரர்.

‘‘அப்படின்னா என்னங்க... அது எதுக்கு உபயோகம்?’’

‘‘இதுக்குள்ளே சூடான பொருளை வெச்சா சூடாவே இருக்கும்! குளிர்ச்சியான பொருளை வெச்சா குளிர்ச்சியாவே இருக்கும்!’’

‘‘அப்படியா சொல்றீங்க...?’’‘‘ஆமாங்க!’’ ‘‘அப்படின்னா அதுலே ஒண்ணு கொடுங்க!’’ வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.

அவனுக்குள் உற்சாகம் உற்பத்தியாயிற்று. மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பது அவன் திட்டம். அந்தத் திட்டப்படி மேலும் சில பொருள்களை வாங்கிக் கொண்டு வேகமாக நடந்து வீட்டுக்குள் நுழைந்தான்.

‘‘சீக்கிரம் இங்கே வா!’’ என்று மனைவியை அழைத்தான்.அவள் வந்தாள். கவனித்தாள்.

‘‘என்னங்க இது?’’ 
 
‘‘இது ஒரு புதுமையான பாத்திரம்!’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம்! 
 
இதன் பெயர் தர்மாஸ்ஃபிளாஸ்க்!’’

‘‘எதுக்கு இது?’’ என்று தெரியாதது போல கேட்டாள்.

‘‘இது சூடான பொருளைச் சூடாகவும், குளிர்ச்சியான பொருளைக் குளிர்ச்சியாகவும் அப்படியே வெச்சிருக்கும்! உனக்காக வாங்கிட்டு வந்திருக்கேன்!’’

கணவன் தலை நிமிர்ந்து நின்றான்.

மனைவி கேட்டாள்:

‘‘உள்ளே என்ன இருக்கு?’’

அவன் சொன்னான்:

‘‘அதுவும் உனக்காகத்தான் வாங்கி வந்தேன்!’
 
‘‘அப்படியா? என்ன அது... சொல்லுங்களேன்.’’

‘‘ஒரு கப் காபியும் ஒரு கப் ஐஸ்கிரீமும்!’’

மனைவி மயங்கி விழுந்தாள்.
 
நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன் 
 


நண்பர்களே!

ஒன்றைத் தெரிந்து கொள்வது என்பது வேறு; அதைப் புரிந்து கொள்வது என்பது வேறு!

‘‘விஞ்ஞானத்துக்கும் மெய்ஞ்ஞானத்துக்கும் என்ன வேறுபாடு?’’ என்று பெர்னாட்ஷாவிடம் கேட்டார்கள். அவர் சொன்னார்: ‘‘விஞ்ஞானம் இருக்கிறதே.... புதிதாகப் பத்துப் பிரச்னைகளை உருவாக்காமல் எந்த ஒரு பிரச்னைக்கும் அது தீர்வு கண்டதில்லை!’’

அறிவால் ஏற்படுகிற வெளிச்சம் & விஞ்ஞானம்; 
ஆன்மாவால் ஏற்படுகிற வெளிச்சம் & மெய்ஞ்ஞானம்!

02 August, 2013

தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!




ஒருவருக்கு திடீரென்று தலைவலி. உடனே மருத்துவமனைக்குப் போனார். அந்த டாக்டர், இவரை ஓர் அறையில் படுக்க வைத்தார். ஒரு மருந்துச் சீட்டு எழுதினார்.

அங்கே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்து, ‘‘இதை உடனே வாங்கி வா!’’ என்றார்.

அவர் அதை வாங்கிக் கொண்டு வெளியே ஓடினார்.
 
மருந்து வாங்கப் போன ஆசாமி வருவார் என்று காத்திருந்தார்கள். ஆனால், போனவர் வரும் வழியாகத் தெரியவில்லை.
 
மருந்து கிடைக்காமல் எங்கே அலைகிறாரோ? படுத்திருந்தவருக்குத் தலைவலி இன்னும் அதிகமாயிற்று. டாக்டர் பார்த்தார். உடனடியாக இன்னொரு மருந்தின் பெயரை எழுதினார்.
 
‘‘இது கிடைத்தாலும் பரவாயில்லை!’’ என்று அந்தச் சீட்டை இன்னொருவரிடம் கொடுத்து வாங்கி வரச் சொன்னார்.
 
அவரும் அவசரமாக வெளியே ஓடினார். ஆனால், வந்து சேரவில்லை.
 
படுத்திருந்தவரை தலைவலி பாடாகப்படுத்துகிறது. டாக்டரும் தவித்துக் கொண்டிருக்கிறார்.
 
இந்த சமயத்தில் அந்த மருத்துவமனையின் வாசல் புறத்தில் ஏதோ கூச்சல் கேட்கிறது. அங்கே ஒரு சுழலும் வழி...
 
ஒருவர் பின் ஒருவராகத்தான் உள்ளே வர முடியும். கால்நடைகள் நுழையாமல் இருக்க அந்த ஏற்பாடு.
 
அங்கே இரண்டு பேர், ‘நான்தான் முதலில் உள்ளே நுழைவேன்!’ என்று இருவரும் நின்று கொண்டு தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். விளைவு& இரண்டு பேருமே செல்ல முடியவில்லை.
 
இவர்கள் போடுகிற சத்தத்தைக் கேட்டு டாக்டர் வெளியே ஓடி வந்து பார்க்கிறார். அந்த இரண்டு பேருமே உள்ளே படுத்திருக்கிற தலைவலிக்காரருக்காக மருந்து வாங்கப் போனவர்கள்.
 
இருவரின் கையில் இருப்பதும் ஒரே நோய்க்கான மருந்துதான் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.
 
உள்ளே படுத்திருப்பவரோ, தலைவலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கான மருந்தை வைத்திருப்பவர்களோ வெளியே சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
 
விளைவு? தலைவலி தொடர்ந்து கொண்டிருக்கிறது! இதுதான் இன்றைய ஆன்மிகம்!
 
மனித குலம்தான் அந்த நோயாளி. கடவுள்தான் அந்த மருத்துவர். மதவாதிகள்தாம் அங்கே சண்டை போடுகிறவர்கள்.
 
சரி... இப்போது கதையைத் தொடரலாம். டாக்டர் அவசரமாக வெளியே ஓடி அவர்கள் கையில் இருந்த இரண்டு மருந்தையும் வாங்கிக் கொண்டு உள்ளே ஓடுகிறார்.
 
ஒரு பாட்டில் மருந்தை அந்த நோயாளிக்குக் கொடுக்கிறார். இன்னொரு பாட்டில் மருந்தை அவசரமாகத் தானே சாப்பிட்டு விடுகிறார்! 
ஆமாம்!
 
இப்போது டாக்டருக்கும் தலைவலி!
 
மதவாதிகளே!
 
தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!
 
நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்




நம் தேசம் எதிர்நோக்கியிருக்கும் மிகப்பெரிய பிரச்சனை இதுதான். இங்கு கடவுள் இல்லை என்று சொல்பவர்களால் கூட எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் கடவுள் இருக்கிறார் என்று சொல்லும் மதவாதிகளால்தான் அதிகமான பிரச்சனைகள் ஏற்ப்பட்டுக்கொண்டிருக்கிறது.


தன் கடவுள்தான் இந்த சமூதாயத்தில் சிறந்ததாகக் கருதப்படவேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் உழைக்கும் உழைப்பு இருக்கிறதே. முடியவில்லை. தற்போது இவர்களின் விளம்பரம் செயற்கைகோளையும் தாண்டி விரிவடைந்துக் கொண்டிருக்கிறது. விளம்பரப்படுத்தி கடவுளை வளர்க்க அவர் என்ன உற்பத்திபொருளா...?


இந்த பதிவு மதவாதிகளை இழிவுப்படுத்தவோ அல்லது குறைகூறவோ அல்ல... கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் என்று அறிவுரைக்கூறத்தான்... நமக்கு ஏன் இந்த வம்பு என்று ஒதுங்கிக்கொள்ளலாம்... அநத பாதிப்பு சமுதாயத்திற்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றால்.

06 May, 2013

அந்த நாலு பேர் யாருன்னு தெரியுமா..! இதுல நீங்க எந்த வகை..?

 
மனிதர்களில் நான்கு வகையான மனிதர்கள் இருக்கின்றனர் என்று இந்து சமயப் புராணக்கதைகள் தெரிவிக்கின்றன.

1. உண்டு, உண்டு வகையினர்

2. இல்லை, இல்லை வகையினர்

3. உண்டு, இல்லை வகையினர்

4. இல்லை, உண்டு வகையினர்


உண்டு, உண்டு வகையினர்


இவ்வகையினர் உழைத்துச் செல்வம் சேர்த்த வள்ளல்கள். அவர்களிடம் செல்வம் இருக்கிற காரணத்தால், இம்மையில் அடையக் கூடிய தார்மிகத்திற்குப் புறம்பில்லாத அனைத்து சுகங்களையும் அடைகிறார்கள்.


அதே சமயம், தானதர்மம் செய்து வள்ளல்களாகவும் அவர்கள் இருப்பதால், அந்தப் புண்ணியத்தின் மூலம் அவர்களுக்குச் சொர்க்கமும் கிடைக்கிறது.


எனவே, இவர்களுக்கு இம்மை, மறுமை ஆகிய இரண்டு சுகங்களும் இவர்களுக்கு உண்டு.


இல்லை, இல்லை வகையினர்


இவ்வகையினர் செல்வமுள்ள கஞ்சப் பிரபுக்கள். அவர்களிடம் செல்வம் இருந்தும், கஞ்சத்தனமும் கூடவே இருப்பதால், இம்மை சுகங்களை அவர்கள் அடைவதில்லை.


தான தர்மம் செய்யாததால், மறுமையிலும் அவர்களுக்கு உயர்ந்த நிலை கிட்டுவதில்லை.


எனவே, இவர்களுக்கு இம்மை, மறுமை ஆகிய இரண்டு சுகங்களும் இவர்களுக்கு இல்லை.


உண்டு, இல்லை வகையினர்


இவ்வகையினர் தாசிகள். எந்த தர்ம நியாயத்திற்கும் உட்படாமல் அனைத்து சுகங்களையும் அவர்கள் தேடி அடைகிறார்கள்.


ஆனால், அவர்கள் செய்வது பாவச்செயல் என்பதால், மறுமையில் அவர்களுக்கு நற்கதி கிடைப்பதற்கு வழியே இல்லாமல் போய்விடுகிறது. மாறாக, நரகத்தில் துன்பம் அனுபவிக்க வேண்டிய கட்டாய நிலையும் அவர்களுக்கு ஏற்படுகிறது.


எனவே, இவர்களுக்கு இம்மை உண்டு; மறுமை இல்லை.


இல்லை, உண்டு வகையினர்


இவ்வகையினர், சந்ந்நியாசிகள், எளிய வாழ்க்கை நடத்தும் தர்மசீலர்கள் போன்றவர்கள். அவர்கள் இந்த உலக சுகபோகங்களைத் தாங்களாகவே விரும்பி நிராகரிக்கிறார்கள்.


ஆனால், தூய தவ வாழ்க்கையின் காரணமாக அவர்களுக்கு மறுமையில் முக்தி கிடைக்கிறது.


எனவே, இவர்களுக்கு இம்மை இல்லை; மறுமை உண்டு. (படித்தது)

30 April, 2013

ஆன்மீகத்தில் தவறான பற்றுக்கொண்டால் இப்படித்தான் ஆகும்...!

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?

இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.
 
அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான். இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது.

விளைவு இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு. கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.

ஆன்மிகம் என்ன சொல்கிறது தெரியுமா? நீங்கள் கரை சேர விரும்புகிறீர்களா? அப்படியானால் எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள். ஏற்கெனவே பற்றிக் கொண்டிருப்பதை எல்லாம் விட்டு விடுங்கள்!

ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது. உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ஒருத்தன் நீந்திச் சென்று அதைப் பற்றுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை. நடு ஆற்றில் போராடிக் கொண்டிருக்கிறான். கரையில் நின்று கொண்டிருக்கிற நண்பர்கள் கத்துகிறார்கள்...
 
‘‘நண்பா...
 
கம்பளி மூட்டையை இழுத்துக் கொண்டு உன்னால் வர முடியவில்லை என்றால் பரவாயில்லை... அதை விட்டுவிடு! ’’ஆற்றின்நடுவே இருந்து அவன் அலறுகிறான்: ‘‘நான் இதை எப்பவோ விட்டுட்டேன்... இப்ப இதுதான் என்னை விடமாட்டேங்குது ஏன்னா, இது கம்பளி மூட்டை இல்லே. கரடிக் குட்டி!’’

தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகிறார்கள்.
சரியாகப் பற்றுகிறவர்கள் கரையேறி விடுகிறார்கள்.
பற்றையே விடுகிறவர்கள் கடவுளாகி விடுகிறார்கள்!
Related Posts Plugin for WordPress, Blogger...