கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label இன்று ஒரு தகவல். Show all posts
Showing posts with label இன்று ஒரு தகவல். Show all posts

26 July, 2013

சொர்கம் நரகமா..? அங்கு செல்ல எவ்வளவு செலவு செய்யவேண்டும்



ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான்.


ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான்.


அங்கே போன பிறகுதான் தெரிந்தது... சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது.


மூடிய கதவின் முன்னால் போய் நின்றான்.

‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை.

‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு!’’

சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான்.

உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான்.

‘‘இந்தா... இதை வெச்சுக்கோ... சீக்கிரம் கதவைத் திற... நான் உள்ளே போகணும்!’’

சித்ரகுப்தன் சிரித்தான்.

‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறைகள்--! லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது... அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது!’’

‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’

‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனு மதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’

‘‘அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’

‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது!’’

‘‘வேறே எப்படி வாங்கறது?’’

‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’

‘‘என்ன சொல்றே நீ?’’

‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள்தான் சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு!’’


‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’

‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது... ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’

பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான்.

பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன்.... அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’

‘‘கொஞ்சம் பொறு!’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான்.

கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான்.

‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்!’’

‘‘என்ன உத்தரவு?’’

‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்!’’

‘‘அப்புறம்?’’

‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வெச்சுடச் சொன்னார்!’’ பெரிய மனிதன் மயங்கி விழுந்தான்.

ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம்:


காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது; ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்!


இன்று ஒரு தகவல்- தென்கச்சி கோ.சுவாமிநாதன

30 April, 2013

ஆன்மீகத்தில் தவறான பற்றுக்கொண்டால் இப்படித்தான் ஆகும்...!

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?

இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.
 
அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான். இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது.

விளைவு இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு. கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.

ஆன்மிகம் என்ன சொல்கிறது தெரியுமா? நீங்கள் கரை சேர விரும்புகிறீர்களா? அப்படியானால் எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள். ஏற்கெனவே பற்றிக் கொண்டிருப்பதை எல்லாம் விட்டு விடுங்கள்!

ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது. உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ஒருத்தன் நீந்திச் சென்று அதைப் பற்றுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை. நடு ஆற்றில் போராடிக் கொண்டிருக்கிறான். கரையில் நின்று கொண்டிருக்கிற நண்பர்கள் கத்துகிறார்கள்...
 
‘‘நண்பா...
 
கம்பளி மூட்டையை இழுத்துக் கொண்டு உன்னால் வர முடியவில்லை என்றால் பரவாயில்லை... அதை விட்டுவிடு! ’’ஆற்றின்நடுவே இருந்து அவன் அலறுகிறான்: ‘‘நான் இதை எப்பவோ விட்டுட்டேன்... இப்ப இதுதான் என்னை விடமாட்டேங்குது ஏன்னா, இது கம்பளி மூட்டை இல்லே. கரடிக் குட்டி!’’

தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகிறார்கள்.
சரியாகப் பற்றுகிறவர்கள் கரையேறி விடுகிறார்கள்.
பற்றையே விடுகிறவர்கள் கடவுளாகி விடுகிறார்கள்!
Related Posts Plugin for WordPress, Blogger...