கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label எம்.ஜி.ஆர்.. Show all posts
Showing posts with label எம்.ஜி.ஆர்.. Show all posts

24 December, 2013

இந்த சம்பவம் கூட எம்.ஜி.ஆர். வாழ்வில் நடந்ததுதான்..

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த சமயம் ,

ஒரு நாள் அலுவல்கள் முடிந்து வந்த அவர் இரவு 11 மணிக்கு ராமபுரத் தோட்டத்தில், நாயை உடன் அழைத்துக்கொண்டு தோட்டத்தில் சுற்றி வந்தார் . அப்போது தூங்கிக் கொண்டிருந்த வேலைக்காரரின் 5 வயது சிறுவனை எழுப்பி, அவனிடம்

" பள்ளிக்கூடம் போனயா ?"
" போனேன் "
" சாப்பிட்டாயா ?"
"ம்... சாப்பிட்டேன் "
"என்ன சாப்பிட்ட கண்ணா ?"
 
சிறுவன் தான் சாப்பிட்டதை எல்லாம் ஒப்புவிக்கிறான். சிறுவனுக்கு முத்தம் தந்துவிட்டு அவனை தூங்க சொல்கிறார் மக்கள் திலகம் .

தோட்டத்தை சுற்றி முடித்த பின் , தன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சமையல் காரர் மணியை எழுப்பி, " டேய் மணி , நீ இங்கு வேலை செய்ய வேண்டாம் . கிளம்பு " சமையல் காரர் காரணம் எதுவும் கேட்கவில்லை. கேட்டால் அடிவிழும். மணியும் அந்நேரத்தில் வெளியே கிளம்பிவிடுகிறார். அவருக்கு காரணம் எதுவும் புரியவில்லை. ஆனால் மணிக்கு தெரிந்திருந்தது, தலைவரின் கோபம் சற்று நிமிடத்திற்கு தான்.

தினமும் தலைவர் வெளியே கிளம்பும்போது, மணி நிற்பார். எம்.ஜி.ஆர் முகத்தை திருப்பி கொள்வார். இப்படியே மூன்று மாதங்கள் ஓடின

எம்.ஜி.ஆர் கண்டுகொண்டபாடில்லை. ஆனால் சம்பளம் மட்டும் அவர் வீட்டுக்கு சென்றுவிடும். ஒருநாள் ஆனது ஆகட்டும் என்று நேரே அவர் இடத்திற்கு சென்று தலைவர் காலில் விழுந்துவிட்டார் மணி. "அண்ணே நான் என்ன தப்பு செஞ்சேன்னு எனக்கே தெரில . என் மீது கோபம் ன்னா நாலு அடி கூட அடிச்சிருங்கண்ணே." என்றார்.

எம்.ஜி.ஆர் புன்னகையுடன், மணியிடம் "டேய் மணி, நான் உன்கிட்ட என்ன சொல்லியிருக்கேன், நான் சாப்பிடறது தான் வேலைக்காரர்களும் சாப்பிடனும் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன், ஆனா அந்த பையனுக்கு ஏன் நான் சாப்பிட்ட மீனை வைக்கல? "

மணிக்கு ஒன்று புரியல. எப்போ தலைவர் மீன் சாப்பிட்டார், நாம எப்போ அதை மறந்தோம் ன்னு எதுவும் நினைவில் இல்லை. இருந்தாலும் சமாளிப்பதற்கு "அண்ணே மன்னிச்சிடுங்கண்ணே. வேலை இருந்ததால அதை மட்டும் மறந்திருப்பேன், என்ன மீண்டும் இங்க வேலை செய்ய விடுங்கண்ணே" என்று கேட்டுக்கொண்டார்.
 
"சரி போய் வேலையை செய். திரும்பவும் இந்த மாதிரி தவறு இருக்க கூடாது" - தலைவர் உத்தரவிட்டுவிட்டார். மணிக்கு ஏக சந்தோஷம்

மணி மீண்டும் வேலைக்கு சேர்ந்த விதம் இன்னும் சுவாரஸ்யம். மணி வெளியே அனுப்பிவிட்டு, தன் உதவியாளரிடம் எம்.ஜி.ஆர், "அந்த சமையல்காரர் மணியை கோபத்துல வெளிய அனுப்பிட்டேன். அவனை தினமும் நம் தோட்டத்து கேட் அருகே நான் புறப்படும்போது நிற்க சொல்லு" என்று உத்தரவிடுகிறார்.

அதன்படி தான் மணியும் நின்றார். தலைவர் காரில் புறப்படும்போது, மணி எம்.ஜி.ஆரை பார்த்து வணங்குவார். உடனே தலைவர் சட்டென முகத்தை திருப்பிகொள்வார் அதான் கோபமாம். இப்படி மூன்று மாதங்கள் தன் கோப நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் புரட்சி தலைவர். அதன் பின் தான் மணியை வீட்டுக்கு வரச்சொல்லி வேலைக்குசேர்த்துள்ளார் தலைவர்

இது என்ன மாதிரியான சாமார்த்தியம், மனிதநேயம் என்றே கணிக்க முடியவில்லை. இவருக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை வாரியார் ஒப்புக்கு தந்துவிடவில்லை என்பதை இந்த நிகழ்விலேயே அறியலாம் . (எம்.ஜி.ஆரின் வாழ்க்கை குறிப்புகளிலிருந்து)

***********************
அது எப்படி...
இன்று வரை நீ
ஏழைகளின் தலைவனாகவே
இருக்கிறாய்...
தலைவா...!

19 July, 2013

கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர்., நண்பரா? அரங்கேரும் புதிய நாடகம்...!



"நண்பர் எம்.ஜி.ஆர்., விரும்பிய திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா ஒதுக்குகிறார் என்றால், எம்.ஜி.ஆரையே ஒதுக்குகிறார் என்று தான் அர்த்தம்' என்று, கருணாநிதி கூறுகிறார். 
 
திடீரென்று எம்.ஜி.ஆரின் விருப்பத்தின் மீது, இவருக்கு, இவ்வளவு அக்கறை எப்படி வந்தது?
 
ஒழுங்கீனம் நடப்பதை அறிந்து, கணக்கு கேட்டதால், வெறுத்து ஒதுக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., மீது, தற்போது, "நண்பர்' என்ற இனமான பாசமும், அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதே, தன் குறிக்கோள் என்பது போலவும் கூறியுள்ளார், கருணாநிதி. சேதுக் கால்வாய் திட்டம் நிறைவேற, கருணாநிதி இப்படி பேசுகிறார்.
 
எம்.ஜி.ஆர்., ரசிகர்களின் மனதில், அ.தி.மு.க.,வில், அவர்களுக்குள்ள நம்பிக்கையை கலைத்து, தன்வசப்படுத்தும், "கலை' முயற்சியோ இது? ஒரு காலக்கட்டத்தில், ஒரு கருத்தை விரும்பி, அதை அடைவதே வாழ்வில் லட்சியம்; அடைந்தே தீருவோம் என்று வீரவசனம் பேசி, பிறகு அதை கைவிடுவதும்; அதற்காக "கொள்கை' விளக்கக் கூட்டம் போட்டு நிதி வசூலிப்பதும்; அந்தத் தொகை கோடிக்கணக்கில் இருந்தாலும், அது கட்சித் தொண்டர்களின், டீ செலவுக்குத் தான் பயன்பட்டது என்பது போல பேசுவதும், கருணாநிதிக்கு கை வந்த கலை. 
 
ஒரு காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆரோ, இன்றைய முதல்வர் ஜெயலலிதாவோ, சேது கால்வாய் திட்டத்தை ஆதரித்தாலும் கூட, தற்போது உள்ள நிலையில், வல்லுனர்கள் அறிக்கை மற்றும் நடைமுறை சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, இத்திட்டத்தின் அடக்கச் செலவுக்கு ஏற்ப, நன்மையோ பயனோ ஏற்படாது என்ற கருத்தின் காரணமாக, தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 
 
இத்திட்டத்தால், கப்பல் போக்குவரத்து மூலம் வரும் பண்டங்களின் விலைவாசியில், போக்குவரத்து செலவினத்தில், எந்த அளவு குறையும், மக்களுக்கு நன்மை ஏற்படும் போன்ற பல கோணங்களில் சிந்தித்து, ஒரு வெள்ளை அறிக்கை விட வேண்டியது தானே? அதை விடுத்து, மத்திய அமைச்சர் வாசனும், "சுப்ரீம் கோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்' என்று கூறுவது, வேடிக்கை தான்!
 
இத்திட்டத்தில், இதுவரை செலவழித்து நடந்த செயல்கள் என்ற அது, ஒழுங்கான முறையில் நடந்ததா என்பது போன்ற பிரச்னைக்குரிய கேள்விகள், பிற்காலத்தில் எழக் கூடாது.
 
கடிதம் : என்.குப்புசாமி, சென்னை

27 April, 2013

எம்.ஜி.ஆர் தொடங்கி குஷ்பு வரை!!! திமுக-வும் தமிழ் திரையுலமும்..!


அரசியலில் நடிகர்கள் இணைவது ஒன்றும் புதிய விசயமில்லை. நடிகர்களை வைத்து அவர்களின் ரசிகர்களை ஈர்க்கும் அரசியல் கட்சியினர், நடிகர்களுக்கு ஓரளவிற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.


கூட்டம் சேர்க்கத் தேவை என்பதால் கட்சியில் ஓர் ஓரத்தில் நடிகர்களை வைத்து அழகு பார்க்கும் அரசியல் தலைவர்கள், கட்சியை வைத்து நடிகர்கள் வளர்கிறார்கள் என்று தெரிந்தாலே ஓரங்கட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.


சைலண்டாக நடக்கும் இந்த உள்குத்து நடவடிக்கைகள் எல்லா கட்சியிலும்தான் இருக்கும் என்றாலும் திமுகவில் இது கொஞ்சம் அதிகமாகவே நடக்கும். நடிகராக இருந்த எம்.ஜி.ஆர் தொடங்கி இன்றைய குஷ்பு வரை யாரும் இதற்கு விதி விலக்கல்ல. திமுகவில் நடிகர்களுக்கு ஏற்பட்ட மனச்சங்கடங்களைப் பற்றியும், அதனால் ஏற்பட்ட விலகல் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
எம்.ஜி.ராமச்சந்திரன்
*******************
எம்.ஜி.ஆர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன் அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்தார். அண்ணாவின் மறைவிற்குப் பின்னர் கருணாநிதியை முதல்வராக்க முன் நின்றார். பொதுக்குழுவில் கணக்கு கேட்டார் என்பதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அ.இ.அ.தி.மு.க உதயமானது. தொடர்ந்து 3முறை முதல்வராக தமிழகத்தை ஆட்சி செய்தார்.
நடிகர் எஸ்.எஸ்.ஆர்
*******************
லட்சிய நடிகர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன், இந்தியாவிலேயே அரசியலில் நுழைந்து எம்.எல்.ஏ ஆன முதல் நடிகர் என்ற பெருமையோடு இருந்தவர். பொதுக்குழுவில் கருணாநிதிக்கு எதிராக கருத்து கூறியதாக அவரை அடித்து துவைக்க பாய்ந்தனர் தொண்டர்கள். இந்த கசப்பினால் கட்சியில் இருந்து விலகினார் எஸ்.எஸ்.ஆர்.
டி.ராஜேந்தர்
***********
சினிமாவில் டி.ராஜேந்தருக்கு என்று தனி ரசிகர் வட்டம் ஒரு காலத்தில் இருந்தது. அதனாலேயே திமுகவில் இணைந்தார். ஒருமுறை எம்.எல்.ஏ கூட ஆனார். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது எல்லோரும் அடக்கி வாசிக்கையில் அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்தவர் டி.ராஜேந்தர். இலங்கைப் பிரச்சினைக்காக கட்சியில் இருந்து விலகினார்.

ராதாரவி
********
எம்.ஆர்.ராதா காலத்தில் இருந்தே அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் திமுகவில்தான் இணைந்தனர். ராதிகா, ராதாரவி ஆகியோரும் திமுகவிற்காக பிரச்சாரம் செய்தனர். அவர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் இல்லை என்பதால் விலகிவிட்டனர்.
எஸ்.எஸ்.சந்திரன்
*****************
கட்சியின் நீண்ட நாளைய பிரச்சார பீரங்கி. நீண்ட நாட்களாக தம்பியாகவே வைத்திருந்தார் கருணாநிதி. திமுகவை உதறிவிட்டு அதிமுகவில் இணைந்தார். நாடாளுமன்ற எம்.பியாக உயர்ந்து டெல்லிக்குப் போனார்.
நடிகர் சரத்குமார்
***************
திமுகவில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினராக டெல்லிக்குப் போனார். கட்சியில் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று எம்.பி பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இருந்து விலகினார்.
நடிகர் தியாகு
************
ஆரம்ப காலம் தொட்டே திமுக உறுப்பினராக இருந்தவர். கட்சியில் சிலர் தனக்கு எதிராக செயல்படுகின்றனர் என்று திமுகவிற்கு முழுக்குப் போட்டுவிட்டு அதிமுகவில் இணைந்தார்.
இயக்குநர் கே. பாக்கியராஜ்
*************************
எம்.ஜி.ஆர் இருந்தபோது அவரின் வாரிசு என்று அறிமுகம் செய்யப்பட்டவர். 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் இணைந்தார். கடந்த 2011 தேர்தல் வரை கட்சிக்காக பிரச்சாரம் செய்தார். உரிய முக்கியத்துவம் இல்லை என்று அவரும் புலம்புகிறார்.

நடிகை குஷ்பு
************
காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக பேச்சு அடிப்பட்டது. ஆனால் திடீரென்று திமுகவில் ஐக்கியமானார். கட்சித் தலைவர் பற்றி பேட்டி புயலைக் கிளப்பியது. இதனால் அதிருப்தி நிலையில் இருக்கும் குஷ்பு திமுகவில் இருந்து விலகப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
விஜயகாந்த் உள்பட இன்னும் நிறைய நடிகர்கள் திமுக-வில் உள்ளேயும் வெளியேயும் மாறிமாறி இருந்துக்கொண்டு இருக்கிறார்கள்...

24 December, 2012

பிரபாகரன் எம்.ஜி.ஆருக்கு அளித்த பரிசு..! எம்.ஜி.ஆர். பற்றிய அறிய தகவல்கள்


எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).

பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும். ‘உரிமைக்குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம் !

எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி !


எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் ! 

சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம் !

முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார் !

‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் ! 

நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ். வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார்

எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா !

எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது ! 

காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார்.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது !

நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷ்ன் செய்த படங்கள் !

சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !

எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா !


தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 - ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான் ‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்’.

‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை !

அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார் !



ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார் !

ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே !’ என்றுதான் அழைப்பார் !
அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !

எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர் !

 

முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம் !

அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார் !

‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர். அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. 

அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள் !   நன்றி சினிமா இணைய தளங்கள்:
 
எம்.ஜி.ஆரின் 25-வது நினைவு நாளில் அவரை நினைவுகூர்வதில் நான் பெருமைக்கொள்கிறேன்.

.ஜி.ின் கை வரலாறு
Related Posts Plugin for WordPress, Blogger...