கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label பள்ளி அவலம். Show all posts
Showing posts with label பள்ளி அவலம். Show all posts

10 April, 2018

மாணவர்கள் இப்படித்தான்.... பெற்றோரே கோடையில் உஷார்...!



சில தினங்களுக்கு முன்பு என் வீட்டுக்கு அருகிலுள்ள நண்பரின் வீட்டில் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது பள்ளி விட்டு வந்த அவருடைய 12 வயது மகன் தந்தையைக் கட்டிப்பிடித்து தொங்கியவாறு, நான் இன்று ரொம்ப சந்தோஷமாக இருக்கேன் என்றான். அவனுடைய இயல்புக்கு மாறான இந்தச் செய்கை எங்களுக்கு வியப்பாக இருந்தது. அதைக் காட்டிக் கொள்ளாத நண்பர், என்ன விஷயம் என்றார் மகனிடம்.

அதற்கு அவன், எனக்கு நாளையோட "எக்ஸôம்' முடியுது... ரெண்டு மாசத்துக்கு லீவு என்றான். மிகச் சாதாரண விஷயம்தான். ஆனால், இதன் பின்னணியில் நாம் அறிந்துகொள்ள வேண்டியவை நிறைய உள்ளன.

விவசாயிக்கு விளைச்சல் பெருகினால் மகிழ்ச்சி. தொழிலதிபருக்கு தடையற்ற உற்பத்தியும், நிறைந்த ஏற்றுமதியும் மகிழ்ச்சி, பணியாளருக்குப் பணி உயர்வும், ஊதிய உயர்வும் மகிழ்ச்சி, வியாபாரிக்கு விற்பனை அதிகரித்து லாபம் கிடைத்தால் மகிழ்ச்சி, தேர்தல் வெற்றியும், பதவியும் அரசியல்வாதிக்கு மகிழ்ச்சி.

இப்படி ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், பள்ளிக் குழந்தைகளுக்கு விடுமுறைதான் மகிழ்ச்சி.

குறிப்பாக, மழையின்போது வியாபாரிகள், விவசாயிகள், அலுவலர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரும் அவதிக்குள்ளாவார்கள்...

ஆனால், தொலைக்காட்சிக்கு முன்பாக அமர்ந்து, பள்ளி விடுமுறைக்கான அறிவிப்பு வருகிறதா என்பதைக் கவனித்து, அறிவிப்பு வந்தவுடன் துள்ளிக் குதித்து மகிழ்ந்தவர்கள் பள்ளிக் குழந்தைகள்.

தின்பண்டங்கள், புத்தாடைகள், விளையாட்டுப் பொருள்களைக் காட்டிலும் விடுமுறையால் கிடைக்கும் சந்தோஷம்தான் அவர்களுக்குப் பெரிது.

அந்த சந்தோஷம் இப்போது அவர்களுக்குக் கிடைத்தாயிற்று. அதை அவர்கள் முழுமையாக அனுபவிக்க, கொண்டாடி மகிழ பெற்றோர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இந்த விடுமுறையைக் குழந்தைகள் பயனுள்ளதாகக் கழிக்க பலவிதமான திட்டங்களை அவர்கள் தயாரித்திருப்பார்கள்.

நம்மால் நம் விருப்பத்துக்குத் தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டங்கள் குழந்தைகளைச் சந்தோஷப்படுத்துமா என்பதை ஆராய்வது மிக அவசியம்.

2 மாத விடுமுறையில் தட்டச்சு, கணினி கற்றுக் கொடுப்பது, ஹிந்தி வகுப்புகளுக்கு அனுப்புவது, முழுநேர இசை, நாட்டியப் பயிற்சி, ஆங்கிலப் பயிற்சி வகுப்பு, கணிதத் தேற்றங்களைக் கற்றுக் கொடுப்பது, அடுத்த வகுப்புக்கான பாடங்களை நடத்துவது, பொது அறிவு, நுண்ணறிவு பயிற்சி வகுப்புகள், இல்லையேல், குறிப்பிட்ட சிலர் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இப்போதுள்ள பாடத்திட்டங்களினாலோ அல்லது அவற்றைச் செயல்படுத்தும் முறையினாலோ தங்களது விளையாட்டு நேரத்தை பெரும்பாலும் இழந்துவிட்ட இந்தச் சிறார்கள், தாங்கள் சற்று இளைப்பாற நாடுவது தொலைக்காட்சியைத்தான். இதனால், மன, உடல் ஆரோக்கியங்களை இழக்கும் இவர்கள், சிறு வயதிலேயே 25 சதம் பேர் கண்ணாடி அணியும் நிலைக்குச் சென்றுவிட்டனர்.

இந்தச் சூழ்நிலையில், மீண்டும் அதே திட்டமிட்ட பாடங்கள், வகுப்பறை, வீட்டுப்பாடங்கள் போன்றவற்றை இந்த விடுமுறையிலும் திணிப்பது குழந்தைகளை மன அழுத்தத்தின் உச்சத்துக்குக் கொண்டு சென்றுவிடும். இன்று அதன் பாதிப்பை அவர்கள் உணராவிட்டாலும், எதிர்காலத்தில் இது பெரிய பிரச்னையாக உருவெடுக்கலாம்.


விடுமுறையில் அவர்களை ஊர் சுற்றவிட்டால் கெட்டுப்போய் விடுவார்களே.... என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. தனியாகவோ, பிறரோடு சேர்ந்து ஊர்சுற்றினால்தானே கெட்டுப் போவார்கள். அதற்குப் பதிலாக, பெற்றோர்களே அவர்களோடு சேர்ந்து ஊர் சுற்றினால் எப்படிக் கெட்டுப்போவார்கள். வியாபாரம், அலுவல் போன்றவற்றில் இருப்பவர்களுக்கும் இது சாத்தியமே. திட்டமிடுதல்தான் முக்கியம்.

ஏப்ரல் மாதம் தொடங்கியாயிற்று. இதில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு, தேர்தல் முடிவு என முதல் 15 நாள்களை விட்டு விடுங்கள். மீதமுள்ள 45 நாள்களை 5 அல்லது 6 வாரங்களாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.

எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் வாரத்தில் ஒருநாள் விடுமுறை உண்டு. அந்த விடுமுறை தினத்தை உங்கள் குழந்தைகளுடன் ஊர் சுற்றப் பயன்படுத்துங்கள்.

நாம் செல்லும் இடங்கள் நம் குழந்தைகளுக்குப் பொழுதுபோக்காக அமைவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் அறிவை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும்.

நம் பகுதியில் இருக்கும் ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பயணம் செய்வது, பயணச்சீட்டு முன்பதிவு செய்வது, பயணத்தின்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அங்குள்ள ரயில்வே போலீஸôரிடம் புகார் செய்வது, ரயில் ஓட்டுநர்களை அறிமுகப்படுத்தி அவர்கள் ரயிலை இயக்கும் முறை போன்றவற்றை விளக்குவது பயனுள்ளதாக இருக்கும்.

இதேபோல, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், விமான நிலையம் போன்றவற்றையும் அறிமுகப்படுத்தலாம். கோளரங்கத்துக்கு அழைத்துச் சென்று காட்டுவதோடு, அங்கு நடைபெறும் வான் நோக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கச் செய்யலாம். அருங்காட்சியகத்துக்கு சென்று அங்குள்ள அதிசயங்களைக் காட்டலாம்.

மேலும், நாம் இருக்கும் இடத்துக்கு அருகிலேயே நமக்குத் தெரியாத பல வரலாற்றுச் சின்னங்கள், கல்வெட்டுகள், கலைச் சின்னங்கள் நிச்சயமாக இருக்கும். அதுகுறித்து அறிந்து அங்கு அழைத்துச் செல்லலாம். நீச்சல் கற்றுக் கொடுக்கலாம்.

நம் ஊரில் இருக்கும் தீயணைப்பு நிலையத்தில் பல விஷயங்கள் உள்ளன. நூலகங்களில் உள்ள என்சைக்ளோபீடியா என அழைக்கப்படும் தகவல் களஞ்சியங்களில் வண்ணப்படங்களுடன் கூடிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதுதானே என நாம் நினைக்கும் பல விஷயங்கள் நம் குழந்தைகளுக்கு அதிசயமாகவும், அறிவுச் செய்திகளாகவும் இருக்கும்.

நாம் செய்ய வேண்டியது: இந்த 45 நாள்களிலும் நம் குழந்தைகளோடு எவ்வளவு அதிமான நேரத்தைச் செலவழிக்க முடியுமோ அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுதான். இதைத்தவிர, அந்த இளம் மொட்டுகளுக்கு மகிழ்ச்சி தரக் கூடியது எதுவுமில்லை.

நான் சந்தோஷமாக இருக்கேன் என்ற வார்த்தையை ஜூன் மாதத் தொடக்கத்தில் அவர்களிடம் இருந்து கேட்க வேண்டுமானால், இந்த 2 மாதங்கள் அவர்கள் சந்தோஷத்துக்கு விட்டுவிடுங்கள். இது அவர்கள் துள்ளித் திரியும் நேரம்... (கல்வி சோலையிலிருந்து....)

27 March, 2018

இப்படியா இருப்பது ஆசிரியர்கள்....


பண்படுத்துவது என்பது புண்படுத்துதல் அல்ல...
*~~~~~~~~~~~~~~~~~~~*

*"கற்களை சேதப்படுத்தக் கூடாது"* என்று சொன்னால் இங்கு சிற்பங்கள் எப்படி கிடைக்கும்...?

*"நிலங்களை சேதப்படுத்தக் கூடாது"* என்று சொன்னால் இங்கு விளைச்சல் எப்படி கிடைக்கும்...?

*"தங்கத்தை நெருப்பில் இடாதே"* என்றால் தங்க ஆபரணங்கள் எப்படி கிடைக்கும்...

*புரிதல் வேண்டும்...*

*"மாணவன் தவறு செய்தால் அடிக்கக் கூடாது,*
*திட்டவும் கூடாது...*
*மனம் புண்படும் படி பேசவும் கூடாது..."*

எனில்...
*"படிக்குமாறு அறிவுறுத்தக் கூடாது,*
*ஒழுக்கத்தை வலியுறுத்தக் கூடாது*
*இது எதுவுமே மாணவனுக்கு பிடிக்காது,*
*மாணவன் மனம் புண்படும்"*
எனில் ஆசிரியரின் வேலை தான் என்ன...?

பண்படுத்துவது என்பது புண்படுத்துவது அல்ல என்ற புரிதல் மாணவர்களுக்கு மட்டுமல்ல... மற்றவர்களுக்கும் வேண்டும்...!

ஒரு பச்சிளம் குழந்தைக்கு ஊசி போடுகிறார் மருத்துவர்...
"குழந்தைக்கு வலிக்கும் இது தவறு" என்று அவரிடம் சொன்னால்  குழந்தை நலமுடன் வாழ்வது எப்படி...?

ஒரு வீட்டில் குழந்தையின் கைகளை தந்தை பிடிக்க, கால்களை மாமா பிடிக்க.. தலையை அசைக்காமல் பாட்டி அழுத்தி பிடிக்க, குழந்தைக்கு பிடிக்காத கசப்பு மருந்தை தாய் தருகிறாள்... குழந்தையின் மீது செலுத்தப்படும் எவ்வளவு மோசமான வன்முறை இது... அவர்களுக்கான தண்டனை என்ன...?

குழந்தையின் நலன்கள் இரண்டு..
உடல் நலன்...
உள்ள நலன்...

உடல் நலனுக்காக இயங்கும் மருத்துவத்துறையின் கைகளை...
"ஊசி குழந்தைக்கு வலிக்கும்,
மருந்து குழந்தைக்கு கசக்கும்,
அறுவை சிகிச்சை அதை விட வலிக்கும்... எனவே எல்லாவற்றையும் தவிர்த்து 
குழந்தைக்கு மனம் நோகாமல் அறிவுரை மட்டும் கூறி அனுப்புங்கள்" என்று சொல்வீர்களா...?

மருத்துவ துறையின் கைகள் கட்டப்பட்டால், உடல் நலன் ஒழிந்தது என்று அர்த்தம்...

புரிதல் வேண்டும்...

அதே போல... உள்ள நலனுக்கானது தான் கல்விக்கூடங்கள்... அது கூடாது, இது கூடாது என்று இங்கே கற்பிப்பவரின் கையும், சுய சிந்தனை உணர்வும் கட்டப்பட்டுவிட்டன... விளைவு ... நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்...

ஒரு கல்விக்கூடம் மூடப்பட்டால்... அது நூறு சிறைச்சாலைகள் திறப்பதற்கு சமம் ென்பது கூற்று...

மூடும் அளவிற்கு அதிக சிரமம் வேண்டாம்... ஆசிரியரின் உடலும், உள்ளமும், கைகளும் கட்டப்பட்டாலே போதும்...

மாணவன் ஆசிரியரால் திருத்தப்படாவிட்டால், காவலர்களின் அடியால் திருந்த வேண்டும் அல்லது சிறைச்சாலைக்குத்தான் செல்ல வேண்டும்.

*சிந்தியுங்கள் பெற்றோர்களே..….!*

வருத்தத்துடன்.. மனம் நொந்து  போயுள்ள ஆசிரிய சமுதாயம்.....

#100 என்னுடைய ஆதங்கமும் இதுதான்

04 July, 2013

பள்ளிக்கு செல்ல உங்கள் குழந்தை அடம்பிடிக்கிதா....? உஷார் காரணம் இதுவாகக்கூட இருக்கலாம்...!

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் அழுகையை நிறுத்தவும், அவர்களின் மனதில் தைரியத்தை வளர்க்கும் சில வழிமுறைகளையும்,கோவை அரசு கல்லூரி உளவியல் பேராசிரியர் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.


பள்ளிக்கூடங்கள் திறந்து மூன்று வாரங்களுக்கும் மேலாக ஆன நிலையில் பலரது குழந்தை தினமும் அழுது கொண்டே பள்ளிக்கு செல்கிறது. பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அடம்பிடிக்கிறது. கோவை அரசு கலைக்கல்லூரி உளவியல்(சைகாலஜி)பேராசிரியர் செல்வராஜூ கூறியதாவது:


குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் அழுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மனோதத்துவ காரணங்களே முக்கியமாகும். சிறு குழந்தைகளுக்கு உணவுக்கு அடுத்த முக்கிய தேவை காப்புணர்ச்சியாகும். வீட்டில் பெற்றோருடன் பாதுகாப்பாக இருக்கிறோம் என்னும் உணர்வே காப்புணர்ச்சி ஆகும்.


சிறு குழந்தைகளுக்கு தங்கள் வீட்டிலும், சுற்றுப்புறத்தலும் இவ்வுணர்ச்சி ஏற்படுதல் அவசியம். முதன்முதலில் குழந்தைகள் பெற்றோரை விட்டு பிரிந்து பள்ளிக்கு செல்லும் போது இக்காப்புணர்ச்சி சிறிது பாதிக்கப்படலாம். இது எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி இருக்காது.


சற்று அதிக பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளே பள்ளிக்கு நீண்ட நாட்கள் அழுது கொண்டே செல்லும். தீவிர பாதிப்புக்கு ஆளாகும் குழந்தைகள் மனதில் காரணமற்ற கிலி உருவாகி, பள்ளிக்கு செல்வதை தவிர்க்க முயற்சிக்கும். இக்குழந்தைகள் அடம்பிடித்தல், தூங்கி எழுவதில் காலதாமிப்பை ஏற்படுத்தும்.


மேலும், இவர்களுக்கு பரந்த வெளியிடங்களை கண்டு இனம்புரியாத பயம் ஏற்படும். பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை பார்த்து கூட பயம் ஏற்படலாம். இதற்கு "அகோரபோபியா" என்று பெயர்.சில குழந்தைகள் சிறிய குடும்ப சூழ்நிலையில் பிறந்து வளர்ந்திருக்கும்.


இக்குழந்தைகள் கூட்டத்தைப் பார்த்தவுடன் மனதில் பயம் ஏற்பட்டு விடும். பள்ளிக் கூடத்திலும், வகுப்பறைகளிலும் காணப்படும் மாணவர் கூட்டத்தை பார்த்தாலே மனதில் பயம் தோன்றிவிடும். இந்த வகை பயத்துக்கு "டைமோபோபியா" என்று பெயர்.


இதேபோல் ஒரு சில குழந்தைகள் கூட்டுக் குடும்ப சூழ்நிலையில் பிறந்து, பெரிய வீட்டில் விளையாடி மகிழ்ந்து வளர்ந்திருக்கும். இத்தகைய குழந்தைகள் நெருக்கமான சூழலில், சிறிய வகுப்பறைகளை பார்க்கும் போது கூட மனதில் பயம் தோன்றி விடும். இந்த வகை பயத்துக்கு "கிளஸ்ட்ரோபோபியா" எனப் பெயர்.


இதுபோன்ற பயம் தோன்றும் போது, சிறு குழந்தைகள் அழும். அந்த இடத்தில் இருந்து விலகி ஓடத்துவங்கும். சில வேளைகளில் எதுவும் செய்யத் தோன்றாமல் செயலற்று ஒரே இடத்தில் நிற்பது உண்டு.
மேலும், பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்த பின்னர். மாலையில் குழந்தை அழுவதற்கு காரணம் பரபரப்பான பள்ளிசூழ்நிலை முடிந்து, வீட்டுக்கு வந்தவுடன் அமைதியான சூழ்நிலையில் அதன் மனதில் பயம் தோன்ற ஆரம்பிப்பது தான்.


இவர்களிடம் ஏற்படும் தீவிர பயம் சில சமயம் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். உடல்நலம் பாதிக்கப்பட்டு காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு ஆகியன ஏற்படலாம். இவற்றை தவிர்க்க குழந்தைகளிடம் பயத்தை குறைக்க பெற்றோரும், ஆசிரியர்களும் ஆவன செய்ய வேண்டும்.


இப்பிரச்னைகளை தீர்க்க சில வழிகள்: தொடக்கத்தில் இருந்த பள்ளிக்கூடம் செல்வதை கட்டாயமாக்க வேண்டும். குழந்தை அழுகிறதே என ஓரிரு நாட்கள் விடுமுறை எடுப்பதை தவிர்த்து விட வேண்டும். சிறிது நாட்களில் பழக்கத்தின் காரணமாக குழந்தைகளுக்கு பயம் தானாக குறைந்து விடும்.


அழும் குழந்தைகளை ஆசிரியர் தன் அருகில் அமர வைத்து, பாதுகாப்புணர்வை அளிக்க வேண்டும். அன்புடன் கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும். ஓரிரு வாரங்கள் பெற்றோர் பொறுமையுடன் குழந்தைகளை கையாள வேண்டும். மற்ற குழந்தைகளின் தைரியமான நடத்தைகளை காண்பித்து விளக்க வேண்டும்.


பள்ளி நேரம் முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து வராமல், பள்ளி பூங்காவில் சிறிது நேரம் விளையாட வைக்கலாம். இதனால் குழந்தைகளின் பயம் வெகுவாக குறைந்து, அவர்களின் மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் வளரும். இவ்வாறு உளவியல் பேராசிரியர் செல்வராஜூ தெரிவித்துள்ளார்.

07 August, 2011

அம்மாக்கள் ஆகும் பள்ளி மாணவிகள்... பதரவைக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்...


பீச், பார்க்குகளில் குடைக்குள் புகுந்தபடியும், பைக்கின் பின் துப்பட்டா மறைவில் காதல் செய்யும் காதல் ஜோடிகள் நமக்கு பல ஆண்டுகளாக பழக்கம். ஆனால், சென்னையில் கடந்த சில வருடங்களாக இவ்வாறு மறைந்து இருக்கும் பெண்களில் பலர் பள்ளிக் குழந்தைகள் என்பது தான் அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயம்.

முன்பெல்லாம் பார்க், பீச்சுகளில் விளையாட மட்டுமே வந்த இந்த பள்ளிக் குழந்தைகள் இப்போது காதல், செக்ஸ் என்ற மாயவலையில் சிக்கி வருகிறார்கள். அதோடு மட்டும் இல்லாமல் அதை விட ஒரு படி மேலே கருக்கலைப்புக்கு வந்து நிற்கிறார்கள் இந்த யூனிபார்ம் அம்மாக்கள்.

சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற மெட்ரோ சிட்டியில் ஒருநாளில் 2 லட்சம் கருத்தடை மாத்திரைகள் விற்பனையாகி வருவதாக புள்ளி விவரம் தெரிவிக்கும் அதே நேரத்தில் இந்த விற்பனையில் ‘சிங்காரச் சென்னை‘ நம் பர் 1 இடத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும், அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது மாணவச் சமுதாயமே என்பது கவலை தரும் அம்சம்.
 
இது பற்றி மனநல ஆலோசகர் டாக்டர் செலின் பேட்டி: ‘‘இந்த பருவ நிலை காதலுக்கு ஹார்மோன் கோளாறு என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அதையும் தாண்டி... சுற்றுப்புற சூழல், குடும்ப நிலை மற்றும் பெற்றோர்களின் வளர்ப்பு முறை என எல்லாவற்றையும் சார்ந்தது. அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போகும் சூழலில் தான் இப்போது உள்ள குழந்தைகள் வளர்கிறார்கள். வேலையில் உடன் பணியாற்றும் சக ஆண் நண்பருடன் வெளியே செல்வது, போனில் பேசுவதை பார்த்து வளரும் குழந்தைகள் தடம் மாறிப்போக ஒரு காரணமாகிறது. 

இப்போது பெரியவர்கள் முதல் டீன் ஏஜ் குழந்தைகள் வரை எல்லாரையும் கட்டிப் போட்டுள்ளது செல்போன். கேமரா, மெமரி கார்டு, ஈமெயில், படங்களை டவுண்லோட் செய்வது என பல வசதிகள் கொண்ட செல்போன் மார்க்கெட்டில் உள்ளது. இதன் பயன்பாட்டுக்கு பிறகு, குழந்தையின் குழந்தைத்தன்மை தூக்கி எறியப்படுகிறது. மேலும் அவர்களின் உணர்வு வெளிப்பாடுகள் மற்றும் அசாத்திய மனநிலை மாற்றங்கள் நம்ப முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளன.

குழந்தைகள் ஒரு களிமண். அதை நாம் அழகான ஒரு பொம்மையாக மாற்றி அமைக்கலாம். அதன் முழு பொறுப்பு பெற்றோருக்கு மட்டுமே உள்ளது.


பெற்றோர்களே காரணம்

மனோகரன் (போலீஸ் அதிகாரி) கடந்த வாரம் ஒரு இளம் ஜோடியை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம். இருவரது பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பி ஸ்டேஷன் வரச் செய்தோம். அவர்கள் கூறியதை கேட்டு திடுக்கிட் டோம். ‘‘என்ன சார் இது சிம்பிள் மேட்டர். என்னமோ திருடனைப் பிடித்தது போல சொல்கிறீர்கள். இந்த பிரச்னையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்‘‘ என்று கூறியதோடு அந்த மாணவர்களை பெற்றோர்கள் தங்களுடன் அழைத்துச் செல்லாமல் வீட்டுக்கு போங்கள், எங்களுக்கு வேலை இருக்கிறது என்று கூறி சென்றனர். பெற்றோர்கள் மனது வைத்தால் மட்டுமே இந்த பிரச்னைக்கு முடிவு கிடைக்கும்.


மனரீதியில் பாதிப்பு...
 
சரஸ்வதி (அரசு பள்ளி ஆசிரியர்) பொதுவாக தனியார் பள்ளியில் இம்மாதிரி பிரச்னை அதிக அளவில் இருப்பதில்லை. அரசு பள்ளியில் மட்டுமே இந்த நிலை அதிகம் இருக்கிறது. கடந்த வாரம் எனது பள்ளி மாணவ மாணவி ஜோடி அதி காலையில் சீருடையுடன் பீச் சென்றுள்ளனர். அவர்கள் 4வது முறையாக போலீஸ் வசம் பிடிபட்டுள்ளனர். கடந்த 3 முறை பெற்றோர் இடத்தில் சொல்லி பயனில்லை என்பதால் பள்ளிக்கு தகவல் அனுப்பினர். அவர்களை பள்ளிக்கு வரச் செய்து இருவரையும் தனித்தனியாக விசாரித்தேன். அப்போது மாணவி கூறியது கேட்டு திடுக்கிட்டேன். மாணவி கூறியதாவது: 

‘‘பிழைப்பை தேடி கிராமத்திலிருந்து நாங்கள் சென்னை வந்துள்ளோம். தாய், தந்தை இருவரும் மரம் வெட்டும் வேலை செய்கின்றனர். காலை 7 மணிக்கு வேலைக்கு சென்றால் இரவு 8 மணிக்குதான் வீடு திரும்புவார்கள். நான்தான் சமையல் செய்வேன். காலையில் செய்யும் சாப்பாட்டை இரவிலும் சாப்பிடுவேன்.

மதியம் பள்ளியில் சாப்பிடுவேன். தனிமையாக இருப்பதால் ஆதரவின்றி இருப்பதாக உணருகிறேன். உடல் நிலை சரியாக இல்லாத நேரத்திலும் பெற்றோர்கள் வேலைக்கு செல்வதால் மனரீதியாக பாதிப்படைகிறேன். சக மாணவர் என்மீது அதிக அக்கறை செலுத்துவதால் அவன் மீது பாசம் வைத்துள்ளேன். பீச் செல்வது தவறு என்று தெரிந்தும் என்னால் அவனுடன் செல்வதை தவிர்க்க முடியவில்லை” என்றாள்.
(நன்றி தினகரன்)

எனவே, இந்த பிரச்னைக்கு காரணம் பெற்றோர்களே. தனியார் பள்ளிகளில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. பெற்றோர்கள் படித்தவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தங்களது பிள்ளைகள் குறி த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. ஆனால், அரசு பள்ளிகளில் அப்படி இல்லை. மதிய உணவுக்காக பிள்ளைகளை படிக்க வைப்பவர்கள் இன்னும் இருக்கத்தான செய்கின்றனர். அந்த நிலை மாறினால் மட் டுமே இது போன்ற பிரச்னை முடிவுக்கு வரும்.
Related Posts Plugin for WordPress, Blogger...