எற்றத்தாழ்வுகளை மாணவர்களிடத்தில் களைந்துவிட வேண்டும் என்ற உயரிய நோக்கில் முந்தைய திமுக அரசால் அறிமுகம் செய்யப்பட்டதுதான் இந்த சமச்சீர் கல்வி முறை. இந்த முறையில் வழங்குவதற்க்கு மொத்தம் 7 கோடியே 50 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இலவசமாக வழங்குவதற்காக 81 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. 33 லட்சம் புத்தகங்கள் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் தேவைக்கு விற்பனை செய்யப்படும்.
இந்த ஆண்டு மற்ற வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி வருவதால், 2ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் 5 கோடியே 8 லட்சம் அச்சிடப்பட்டுள்ளன. ஆனால் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு தற்போது பந்தாடப்படும் இந்த முறையினால் அத்தனை புத்தகங்களும் கிடங்குகளில் குப்பையாக போடப்பட்டுள்ளன. இந்த சமச்சீர் கல்வியைப்பற்றி இந்த சமூத்தினரிடம் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகிறது. சிலர் வரவேற்கிறார்கள் சிலர் வெறுக்கிறார்கள். இருந்தாலும் சமச்சீர் என்பது எழுச்சிப்பெறும் ஒருசமூகத்தில் இருக்கவேண்டிய ஒன்றுதான்.
லட்சலட்சமாய் செலவு செய்து படிக்கும் ஒரு மாணவனும், அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனும் ஒரே பாடப்புத்தகத்தை படிப்பதா? என்று குமுறுகிறது மேல்தட்டு வர்க்கம். ஆனால் உயரிய கல்வி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வரவேற்கிறது அடித்தட்டு மனசு. இந்த கல்வி சரியா தவறா என்று விவாதிப்பதற்குள் இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு கிட்டதட்ட 300 கோடிகளுக்கு மேல். தற்போது பழைய பாடப்புத்தகங்களை ஜூன் 15 க்கு அச்சடித்து வினியோகிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது அதற்கு ஒரு 200 கோடி என மக்களின் வரிப்பணம் மண்ணுக்கு சென்றுக்கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் சமச்சீர் கல்வியை கொண்டுவரவேண்டும். தனியார்பள்ளிகளின் வருமானத்தை அடியோடு முடக்கவேண்டும். என்ற கொள்கையோடு திமுக அரசு களத்தில் இறங்கியது. திமுக அரசின் இந்த கொள்கை சரியானதுதான் ஆனால் அவர்கள் அதை நடைமுறைப்படுத்திய விதமும், நேரமும்தான் தவறானது. ஒரு வேளை இத்திட்டதை ஆட்சிக்கு வந்த அந்த வருடமே பின்பற்றியிருந்தால் இந்த 5 ஆண்டுகளில் இத்திட்டம் மகத்தான வெற்றிப்பெற்றிருக்கும்.
1) ஒரு அரசு 5 ஆண்டுகள் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த 5 ஆண்டுகள் எவ்வாறு ஆட்சி நடத்துவது. எந்தவிதமான கொள்கைகளை கையாள்வது என்று ஆட்சிக்கு வந்த 1 வருடத்திற்குள் முடிவு செய்துக் கொள்ள வேண்டும்.
2) 2006-2011 வரை ஆட்சியில் இருந்த திமுக அரசு ஆரம்பத்தில் கல்வித்துறையில் எந்த கொள்கையை பின்பற்றுவது என்று முடிவெடுக்காமல் 5 ஆண்டுகளின் கடைசி ஆண்டில்தான் (2010-2011) முதல் முறையாக 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அறிமுகம் செய்தது. அடுத்த ஆண்டு அதை ஒவ்வோறு வகுப்பாக அதிகரிக்க முடிவெடுத்தது.
3) அதன்படி ஆட்சி தொடருமா முடியுமா என்று பார்க்காமல் அவசரகதியாக அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் என்று முடிவுகட்டி பல நூறு கோடிகளை கொட்டி புத்தகங்களை அச்சிட்டது. இணையத்திலும் வெளியிட்டது. தற்போது ஆட்சி மாற்றத்தில் இது ரத்துச்செய்யப்பட்டுள்ளது.
4) திமுக ஆட்சிக்கு வந்த உடனே இக்கல்வி கொள்கையை அமுல் செய்திருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் இல்லை. அவசர கதியாக அவர்கள் செயல்பட்டதுதான் இத்திட்டம் தோல்வி அடைந்ததற்கு முதல்காரணம்.
5) அரசு ஒரு கல்விசார்ந்த நடவடிக்கை எடுக்கும் போது அதில் அந்த கட்சியின் கொள்கைகளை திணிக்கக்கூடாது. நாத்திகம், செம்மொழி பாடல், கலைஞர் மற்றும் கனிமொழி கவிதை என்பது போன்றவை எல்லாத்தரப்பிலும் ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல.
இவைகள் தான் திமுக ஆட்சில் நடந்தவை இத்திட்டம் உண்மையில் நல்லது என்றாலும் இதை அவர்கள் வந்தவுடன் செய்யாததுதான் மிகப்பெரிய தவறு. ஒரு வேளை இத்திட்டம் செயல்பட்டிருந்தால்
1) தனியார் பள்ளிகளின் அட்டுழியம் கொஞ்சம் அடங்கியிருக்கும்.
2) அனைத்து மாணவர்களுக்கு ஒரு சரியான மற்றும் ஆரோக்கியமான போட்டியாக இருந்திருக்கும்.
3) கல்வியின் தரம் கொஞ்சம் உயர்ந்திருக்கும்.
அதிமுக அரசின் அடாவடித்தனம்:
பொதுவாக புதிய கட்சி ஆட்சிக்கு வரும்போது முந்தைய ஆட்சியின் கொள்கைகளை பின்பற்றமாட்டார்கள் ஆனால் கல்வி மற்றும் பிள்ளைகளின் நலன் கருதி இந்த விஷயத்தில் நல்ல முடிவை அதிமுக அரசு எடுத்திருக்கலாம்.
பொதுவாக அதிமுக அரசின் தலைமை எந்த முடிவையும் தானே தனிஆளாக எடுக்க பழக்கப்பட்டவர். அவர்தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி எதையும் மாற்றக்கூடியவர். அவர் வேறொரு ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த திட்டத்தை எளிதில் ஏற்க மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அதிமுக அரசு இத்திட்டத்தை எதிர்பதற்கான காரணங்கள் :
1) இது திமுக அரசு கொண்டுவந்த திட்டம்.
2) பாடங்களில் அட்டைப்படங்களில் திமுகவின் கொள்கைகள் இடம் பிடித்திருப்பது. (செம்மொழி பாடல், கலைஞல் கவிதை போன்றவை)
3) ஆசிரியர்களை 6 நாட்கள் பணி நாட்களாக ஆக்க வேண்டிய அம்மாவின் ஆசை இதன் மூலம் நிறைவுப் பெறும் இனி சனிக்கிழமைகளும் பள்ளி இயங்கும் சூ்ழ்நிலைவரும். (பள்ளியின் வேலைநாட்கள். தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு வேலை நாட்கள் 220 நாட்கள், உயர் நிலைப்பள்ளியின் வேலை நாட்கள் 207 நாட்கள், மேல்நிலைக்கு அதிகபட்சமாக 180 நாட்கள் )
ஆட்சிமாற்றங்கள் அரசின் மாற்றமாக இல்லாமல் கட்சிகளின் மாற்றமாகத்தான் தமிழகத்தில் இருந்து வருகிறது. அந்த ஆட்சியில் அவர்களுடைய பெயரில் திட்டங்கள் அவர்களுடைய கட்சியின் கொள்கைகளை திணிப்பது போன்றவை. திமுக, மற்றும் அதிமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்திருந்தாலும் மாற்றுக்கட்சி இல்லாத சூழலில் இவர்களிடடே இந்த பொருப்பை தரவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுகிறது... வரும் காலங்களில் கல்விப்போன்ற முக்கியமான பிரச்சனைகளில் அரசு தனிகவனம் செலுத்தி மாணவர்களின் நலனுக்காக பாடுபடவேண்டும். இல்லையேல இதுப்போன்ற பிரச்சனைகளால் மாணவ சமூகம் பதிக்கப்பட வாய்ப்புண்டு.
நண்பர்களே இந்த விஷயத்தைப்பற்றி தங்களுடைய கருத்தையும் பதிவுச்செய்யுங்கள்.. நன்றி...!