கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label உழைப்பு. Show all posts
Showing posts with label உழைப்பு. Show all posts

26 March, 2018

நிசப்தங்களற்ற மௌனங்கள்....


அலமாரி முழுவதும்
நிரம்பி வழிந்தது
கவிதை புத்தகங்கள்....

மனமோ கனகனத்தது
அடிவயிற்றில் 
இருவேளை பசி...

தூரத்தில் தெரிந்தது
சந்திரோதயம்....

நீரின்றி
வாடிக்கொண்டிருந்தது
அல்லி மலர்...

காலையில் 
உயிர்களை கொல்வது 
பாவம் என்றான்...

மாலையில் 
தூண்டிலுடன்
அஹிம்சைவாதி...

கேட்போருக்கு சொல்கிறேன்
சமுத்திரத்தின் ஆழம் 
இவன் சோகம்...

வானத்தின் அகலம் 
இவன் துயரம்...

இயற்கையே....

உறவுகளை 
மரணிக்கச்சொல்
உணர்வுகளை வேண்டாம்...

வறுமையை 
மரணிக்கச்சொல்
வயிறுகளை வேண்டாம்...

காலமே....
எங்களை மன்னித்து விடு
நாங்கள் மனிதர்கள் அல்ல
மண் பொம்மைகள்...

பூமியின் சுழற்சியை 
புரிந்துக் கொள்ள
முடியவில்லை..

வாழ்க்கையே... 
நீ எதில் உயிர்வாழ்கிறாய்
விடியலிலா....
அஸ்தமனத்திலா...

உலகம் 
இவ்வளவுதான் 

நிலவே 
நீ பூமிக்கு 
ஒளி கொடுக்கிறாய்....

பூமியோ 
உனக்கு இருள் கொடுக்கிறது...

பகைமையை 
மறந்துவிடு முற்செடியே
உன்னை அலங்கரிக்கவே
காத்திருக்கிறது  ரோஜா...

உலகம் 
மனிதர்களால்
நிறைந்திருக்கிறது...

மனிதர்கள்
சப்தங்களால் 
நிறைந்திருக்கிறார்கள்....

அதனால்தான்
யாருக்கும் கேட்பதில்லை...
என் மௌனங்கள்....


★★★★★★★★

வறுமை கால
 நினைவுகளோடு....

கவிதை வீதி சௌந்தர்...
(2002 டைரியிலிருந்து....)

07 April, 2015

வெற்றியை கண்டடையும் வழி



உழைப்பின்றி எந்த ஒரு சமூகமும் முன்னேற்றம் அடைந்ததில்லை. அதிர்ஷ்டத்தை நம்பியோ, ராசியை நம்பியோ, நேரத்தை நம்பியோ ஒரு காலமும் வெற்றியின் உச்சியை அடைந்துவிடியாது. வெற்றி என்ற சொல்லின் அடிநாதமாய் அமைந்திருப்பது உழைப்பு... உழைப்பு... என்ற உறுதியில் மட்டுமே. லட்சத்தில் யாரோ ஒருவருக்கு அதிர்ஷ்டத்தில் வெற்றி கிடைத்ததே என்று அனைவரும் முயற்சிப்பது புலியை பார்த்து பூனை சூடுப்போட்டுக்கொண்ட ‌கதைப்போல்தான் ஆகிவிடும். 
 
இக்கறைக்கு அக்கறை பச்சை என்று சொல்லுவார்கள்... ஆனால் அங்கு சென்று பார்த்தால்தான் அங்குள்ள நி‌லைமை நமக்கு விளங்கும். “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்‌கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே” என்ற பழைய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது... எப்போதும் நம்மிடத்தில் நாமே நம்பிக்கை வைப்பதை மறந்துவிடுகிறோம். நம்முடைய நம்பிக்கை, நம்முடைய உழைப்பு நமக்கு உதவாத போது அடுத்தவர் உழைப்பு நமக்கு உதவப்போவதில்லை... அடுத்தவர் நம்மீது வைக்கிற நம்பிக்கையை கூட நாம் நம்மீது வைப்பதில்லை...!

இன்றை வேகமான உலகில் வேகமாக சம்பாதிக்க வேண்டும் என்று நேர்மை, தர்மம், ஒழுக்கம் போன்றவற்றை குழிதோண்டி புதைத்துவிடுகிறார்கள்... குறுக்குவழியில் விரைவாக சம்பாதிப்பது என்பது கைதேர்ந்த சமூகத்தின்மீது அக்கரையில்லாத ஒருசிலருக்குமட்டுமே சாத்தியம் அதை பார்த்து அனைவரும் முயற்சிப்பதுதான் காலக்கொடுமை.


அதிர்ஷ்டம், வெற்றி, எங்கிருக்கிறது என்ற உண்மையைச்சொல்லும் அழகிய ஜென் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது....


ஒர் ஊரில் ஒருவன் நன்கு வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தான். அப்போது அந்த ஊரில் பொக்கிஷம் இருக்கும் இடத்தைப் பற்றிய வதந்தி பரவிக் கொண்டிருந்தது. ஆகவே அந்த ஊரில் உள்ளவர்கள், பாலைவனத்தில் நின்று தூரத்தில் இருக்கும் மலையை பார்த்து நிற்கும் போது, நமது நிழல் விழும் இடத்தில் பொக்கிஷம் இருப்பதாக பேசிக்கொண்டனர்.


இதனைக் கேட்ட அவன், உடனே வியாபாரத்தை விட்டு, பொக்கிஷத்தை தேட பாலைவனத்திற்கு மறுநாள் காலையிலேயே சென்று, தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து நின்று, அவன் நிழல் விழம் இடத்தில் குழியைத் தோண்ட ஆரம்பித்தான்.


அதுவரை வியாபாரத்தின் மீது முழு கவனம் செலுத்திய அவன் பொக்கிஷத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தான். பொக்கிஷத்தைப் பெறுவதற்காக காலையில் இருந்து நிழல் விழுந்த இடத்தில் தோண்டிக் கொண்டிருந்தவனது நிழல், மாலையில் காலடிக்குள் வந்து விட்டது. அதனால் ஏமாற்றமடைந்த அவன் அழுது புலம்பிக் கொண்டு இருந்தான்.

அப்போது அந்த வழியாக வந்த ஜென் துறவி ஒருவர், அவனது செயலைக் கண்டு சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்தார். பின் அவனிடம் "இப்போது தான் உன் நிழல் பொக்கிஷம் உள்ள இடத்தை சரியாக காட்டுகிறது. அதுவும் அந்த பொக்கிஷம் வேறு எங்கும் இல்லை, உன்னுள் தான் உள்ளது" என்று சொல்லிச் சென்றார்.

பொக்கிஷங்களும், செல்வங்களும் வரவைக்கிற திறமை ஒவ்வொறு மனிதருக்குள்ளும் இருக்கிறது ஆனால் நாம்தான் அதை பயன்படுத்துவது இல்லை. தூண்டிகளோடு ஒரு நாள் வீணடித்து ஒரு கிலோ மீன்பிடிக்கும் நபர் வேலைக்குச் சென்றால் இரண்டு கிலோ மீன்களை வாங்கலாம் என்று நம்பிக்கைவைப்பதில்லை. எதிர்காலத்தில் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை விட்டுவிட்டு எதிர்காலத்தையே அதிர்ஷ்டமாக மாற்றுங்கள்

23 February, 2015

நீங்கள் பழைய சோறு சாப்பிடுபவரா....?


சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே....

உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே....

என்ற தலைவர் பாடல் எங்கிருந்தோ வந்து காதுகளில் வாழியாக என்மூளையில் குதித்தது.... அப்படா என்ன ஒரு பாடல்.. என்ன ஒரு வரிகள்... புலமைப்பித்தன் ஐயா அவர்கள் எழுதிய இந்தப்பாடலுக்கு தனியாக விளக்கம் ஏதும் ‌சொல்லவேண்டியதில்லை... (தற்போதை பாடல்களுக்கு  எத்தனை அகராதிகளை பார்ததாலும் விளக்கம் கிடைப்பதில்லை)

உலகில் உழைப்பின்றி மாறுவதில்லை எதுவும்... உலகே மாறும்போது நம்முடைய வாழ்க்கை மட்டும் மாறாமலா போய்விடும்.... தற்போதைய உலகில் உழைத்து பணம் சம்பாதித்து வசதியாக இருப்பவர்களால் எந்தப்பிரச்சனையும் இல்லை... ஆனால் போன தலையில் சொத்து சேர்த்து தற்போதைய தலைமுறையை சார்ந்தவர்கள் அதை அனுபதிக்கும்போது அவர்களுக்கு பணத்தின் மதிப்பு தெரிவதில்லை.... 

உழைக்காம சாப்பிட்டா எப்படி உடம்புல ஒட்டும் என்று கிராத்தில் கேட்பார்கள்... ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் உழைக்காம சாப்பிடுவர்கள்தான் உடம்புமுழுவதும் ஊதிக்கிடக்கிறார்கள்...

உழைத்து வரும் காசில் வீண் செலவு செய்யத்தோனாது... ஆனால் உ‌ழைக்காமல் வந்த பணத்தில்.... ஹோட்டல், பார்க், ரிசார்ட், தியாட்டர், பார், பந்தயங்கள் என அவர்கள் செய்யும் அட்டகாசம் தினம்தினம் நாம் பார்ப்பதுதான்... சிலப்பேர் உணவகங்களில் கொடுக்கும் டிப்ஸ் என்பது ஒரு ஏழைக்குடும்பத்தில் ஒரு நாள் வருமானமாக இருக்கிறது...

தான் சம்பாதிக்காமல் தன்னுடைய அப்பனோ.. பாட்டனோ சம்பாதித்த பணத்தில் இவர்கள் செய்யும் அட்டகாசம் விவரிக்கமுடியாது.... முன்னோர்கள் சம்பாதித்ததை மூலதனமாக கொண்டு இன்னும் முன்னேறும் திறமைப்படைத்தோர் நிறையப்பேர் இருக்கிறார்கள்... நான் சொல்வது முன்னோர் சம்பாதித்ததை தற்போது உண்டும், குடித்தும் அழிக்கும் சிலரை மட்டும்தான்...



தான் சம்பாதிக்காமல் அடுத்தவர் சம்பாதித்ததை அது அப்பன் சம்பாத்தியமோ...  அல்லது பாட்டன் சம்பாதித்தாக இருந்தாலும் சரி உட்கார்ந்து சாப்பிடுதல் என்பது மிகவும் கேவலமானதுதானே... அதற்காகத்தான் இந்த குட்டிக்கதை...

மிகவும் நல்ல வசதியான சோம்பேறி ஒருவன் வேலைக்குப் போகாமல் நண்பர்களுடன் சேர்ந்து எப்போதும் சீட்டாடிக் கொண்டு காலத்தை வீணாக கழித்தான்.

ஒருநாள் அவன் அப்படி விளையாடிக் கொண்டிருந்தபோது உள்ளிருந்து அவன் மனைவி அழைத்தாள். "உள்ளே வந்து பழையது சாப்பிட்டுவிட்டுப் போங்கள்'' என்றாள். அதனைக் கேட்ட அவனது நண்பர்கள் திகைப்படைந்தனர். "இவ்வளவு வசதியிருந்தும் இவன் பழையது சாப்பிடுகிறவனாயிருக்கிறானே' என்று. அவனும் எழுந்து உள்ளே போனான். அங்கே அவனுக்கு மனைவி அறுசுவை விருந்து சமைத்திருந்தாள்.

"இப்படி சமைத்துவிட்டு, பழையது சாப்பிட வாங்க என்று கூப்பிட்டு, என் நண்பர்கள் முன்னே அவமானப்படுத்திவிட்டாயே'', என்றான் கணவன். அதற்கு

""சாப்பாடு சூடான சாப்பாடுதான். ஆனால் இது நீங்கள் சம்பாதித்ததில் சமைத்தது இல்லையே... உங்க முன்னோர்கள் சம்பாத்தியத்தில் வந்ததுதானே... அதனால்தான் "பழையது' என்றேன்'' என்றாள் மனைவி.

உழைக்காமல் வீணடிக்கும் நேரம் நம் எதிர்காலத்தை நாம் சிதைக்கும் நேரமாகும்... என்பதில் கொஞ்சமும் சந்தேமில்லை. உழைப்புக்கு தகுந்த பலன் தற்போது கிடைக்கவில்லை ‌என்னறாலும் ‌அதற்கான பலன் எப்போதாவது கண்டிப்பாக நம் வாசலை தட்டியே தீரும். தம்முடை வேலை உழைப்பதுமட்டுதான்.... உழைத்து தன்காசில் உண்ணும் எதுவாக இருந்தாலும் அது அமிர்தமே... மீண்டும் தலைப்பு.... நீங்கள் பழைய சோறு சாப்பிடுபவர்களா...? அப்படியென்றால் வேண்டாம் அது....!



உழைப்பினால் உலகே மாறியிருக்கிறது
நம் வாழ்க்கை மாறாதா என்ன?


வாழ்க்கையை மாற்றிக்கொள்ளுங்கள்
அந்த மாற்றம் உழைப்பால் மட்டுமே சாத்தியம்...!

02 February, 2015

இதற்கான விடை உங்களிடம்தான் இருக்கிறது...!

பாட்ஷா படத்தில் அனைவரையும் கவர்ந்த ஒரு வசனம் “நம் வாழ்க்கை நம் கையில்”.... இன்றைக்கு அதிகமான ஆட்டோக்களில் அதை நாம் பார்க்கிறோம்... படிக்கிறோம்... ஆனால் நம்வாழ்க்கை நம் கையில்தான் இருக்கிறது என்று உணர்ந்தவர்கள் மிகமிகக்குறைவுதான்...!
உழைப்பு, தன்னபிக்கை, முயற்சி, ஊக்கம்,  புத்துணர்வு, முடியும் என்கிற அத்தனை நம்பிக்கையும் நம்மிடத்தில் இருக்கிறது. ஆனால் இவைகளை அடுத்தவர் நமக்கு அறிவுறுத்தவோ அல்லது அடுத்தவர் உதவியாலோ கிடைக்கட்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறோம்...

அடுத்தவர் எடுத்துரைக்கும் போது நம்மிடத்தில் இருக்கும் பலம் நமக்கு தெரியும் போது நமக்கே என்  நம்முடைய பலம் தெரிய மறுக்கிறது அது ஏன்... அனுமனுக்கு வேண்டுமானால் அவருடைய பலம் அவருக்கு தெரியாமல் இருக்கலாம் அது அவருடைய சாபம்... அவரை புகழும் போது மட்டும் அவருடைய பலம் பண்மடங்காகலாம்... நாம் என்ன அனுமன்களா அடுத்தவர் சொன்ன பிறகு பலம் அதிகரிக்க...

இந்த உலகம் தானகவே முன்னேறிக்கொண்டிருப்பது இதில் அடுத்தவரை மேலேத்தூக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் அதிகபடியான மக்களுக்கு இருப்பதில்லை.... சந்தர்ப்பம் கிடைத்தால் நம்மை கீழே தள்ளிவிட்டு முதுகின்மீது ஏறிசெல்கிற மக்கள்தான் அதிகம்... இதில் விதிவிலக்கானவர்கள்தான் தற்போதைய வேகமான உலகத்தில் காணாமல் போய்விட்டார்கள்..
ஆகையால் தன்கையை நம்பி உழையுங்கள்... விடாமுயிற்சியை கைவிடாதிர்கள்... தன்னால் முடியும் என்று நம்புங்கள்... இதை தன்னுடைய சந்ததிக்கு எடுத்துரையுங்கள்... அதில்தான் அவர்களில் ஒளி‌மய‌மான எதிர்காலம் அடங்கியிருக்கிறது... இரண்டு வயதில் கைதொலைப்போசியை கையால்வதினாலோ, எடக்குமடக்காக  பேசுவதினாலோ உங்கள் கு‌ழந்தை வெற்றியாளனாக வந்துவிடமுடியாது... உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான்... அதை ஆணித்தரமான நம்புவோம் நம்ப வைப்போம்....

என்னைப்பொருத்தவரை நான் இதுநாள் வரையில் அடுத்தவரை நம்பிஇருந்ததில்லை நட்புக்காக தவிர.... என் வெற்றி என் உழைப்பில்... இதுநாள்வரை அப்படித்தான்...! அடுத்தவரை நம்புவதைவிட நம்மை நம்புவதற்கு நாம் தயாராக வேண்டும்... அதற்கான பரிசுதான் வெற்றி...!
சமீபத்தில் நான்படித்த ஒரு ஜென் கதையில் சுருக்கம்...!
ஒரு இளைஞன் ஒரு சிறிய பறவையைப் பிடித்துத் தன்னுடைய உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டு ஜென் துறவியிடம் வந்தான்....


"குருவே...! என் கையில் உள்ள பறவை உயிருடன் இருக்கிறதா, அல்லது இறந்து விட்டதா...? நீங்கள்தான் அனைத்தும் அறிந்தவர் ஆயிற்றே, பதில் சொல்லுங்கள் பார்ப்போம்" என்றாகிறார்...

பறவை உயிருடன் இருக்கிறது என்று குரு கூறினால் அதை உள்ளங்கையில் அமுக்கிக் கொன்று விடலாம். அல்லது அவர் இறந்து விட்டது என்று சொன்னால், "நீங்கள் சொல்வது தவறு! இதோ உயிருடன் இருக்கிறது" என்று காண்பிக்கலாம் என்பது அவன் திட்டம். எல்லாம் உணர்ந்த குருவுக்கா இது தெரியாது?


அவர் மிருதுவான குரலில், "விடை உன் கையில் இருக்கிறது" என்றார்!

தற்போதைக்கு... இந்த சமூகம் உள்ளங்கையை எதற்கெல்லாம் பயன்படுத்துகிறது... என்று கொஞ்சம் மனதை ஓடவிட்டுப்பாருங்கள்... அழகான பொன்மொழி ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது... வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று அமைதியாக இருந்துவிடாதீர்கள்... அந்த வாய்ப்பை உருவாக்குங்கள்.. என்பதுதான் அது...
உண்மையில் தான்... அந்த பறவையின் உயிர்மட்டுமல்ல அனைவருடைய உயிரும்... அவரவர் உயர்வும்.... அவரவர் உள்ளங்கையில்தான் இருக்கிறது....

தன்னுடைய உழைப்பின்றி உயர்ந்தவர் இங்கு யாராவது இருக்கீறிர்களா...?
Related Posts Plugin for WordPress, Blogger...