'விஜயகாந்த், மதுப் பழக்கம் உடையவர்' என்று, ஆளும் கட்சியினர் கூறுவது, சிலருக்கு, எரிச்சலைக் கிளப்புகிறது. 'அவருடைய தனிப்பட்ட பழக்கம் எதுவும், தமிழர்களைப் பாதிக்காது' என்கின்றனர்.
இப்படிச் சொல்வது அபத்தம்; அறிவீனம். ஏனெனில், விஜயகாந்த், டாஸ்மாக்கே கதி என்று விழுந்து கிடக்கும் ஒரு சாதாரணக் 'குடிமகன்' அல்ல. அவர், ஓர் அரசியல் கட்சியின் தலைவர் மட்டுமல்ல, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் கூட.
முதல்வர் நாற்காலி மீது, தீரா மோகம் கொண்டிருப்பவர். அவர் கனவு காண்பதைப் போல, 2016-ல், முதல்வராகி விட்டால் (தமிழகத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்!), முக்கியமான முடிவுகளை எடுக்கையில், நிதானத்தில்' தான் இருப்பார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
அவர், நிதானம் இழந்து நடந்து கொண்டதால் தான், தே.மு.தி.க.,வைச் சேர்ந்த ஏழு எம்.எல்.ஏ.,க்கள், அதிருப்தியாளர்களாக மாறி விட்டனரா என்பது தெரியவில்லை.
ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், சி.என்.அண்ணா துரை மற்றும் (எனக்குத் தெரிந்த வரையில்) கருணாநிதிக்கு, இந்தப் பழக்கம் இருந்ததாக, யாருமே சொன்னதில்லை. சில மாதங்களுக்கு முன், திருமதி விஜயகாந்த் தலைமையில், தே.மு.தி.க.,வினர், மது ஒழிப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். கட்சியின் தலைவருக்கே, 'பழக்கம்' உண்டு என்பது, பகிரங்க ரகசியம். ஆகையால், மக்கள், அதை ஒரு வேடிக்கையாகத் தான் பார்த்தனர்.
நல்லதொரு மறுவாழ்வு சிகிச்சை மையத்தில், சிகிச்சை பெற்று, இப்பழக்கத்தை விட்டொழிப்பது, அவருக்கும், கட்சிக்கும் நல்லது. அவருடைய ஆதரவாளர்கள், இதை அவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஆளுங்கட்சியினர், திட்டமிட்டு அவமானப்படுத்துவதால் தான், அவர், சட்டசபைக்கு வருவதில்லை என்று சொல்கின்றனர். நாக்கைத் துருத்தி, விரலை நீட்டி, ஆளுங்கட்சியினருக்கு, அவர் சவால் விட்டது தவறில்லையா? சரியான தகவல்கள் மற்றும் புள்ளி விவரங்களுடன், கோர்வையாகப் பேச, அவரால் முடியவில்லை.
எனவே தான், அவைக்குப் போவதில்லை என்பது தான் பெரும்பாலானோரின் கருத்து. இதை எல்லாம் நினைவில் கொண்டு, தன்னை மாற்றிக் கொண்டால் தான், விஜயகாந்த், அரசியலில் நிலைக்க முடியும். இல்லையென்றால், அதோகதி தான்!


