கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label திரை உலகம். Show all posts
Showing posts with label திரை உலகம். Show all posts

31 March, 2018

இந்த சீன் இல்லாம தமிழ் சினிமாவே எடுக்கமாட்டாங்களா?


எல்லாக்காலத்திலும் சினிமா என்பது அனைத்துவித மக்களையும் கவர்ந்து இழுக்கும் ஒரு மாயவலையாக திகழ்ந்து வருகிறது... என்னதான் நம்மமுடியாத காட்சிகளாக இருந்தாலும்... முழம் பூவை காதில் சுற்றினாலும் அதை ரசித்துவிட்டு வரும் ரசிகர்களை கொண்டுள்ளதால்தான் இன்று வரை யாராலும் அசைக்க முடியாத சக்தியாக  திராவிட சினிமாக்கள் அமைந்துவிட்டது...

சினிமாவை விரும்பி... ரசித்து... பார்க்கும் ஒருவரால் ஒரு படத்தையோ அல்லது ஒரு காட்சியை பார்த்தவுடன் அது எந்தமொழிக்கு உரியது என்று எளிதில் சொல்லிவிடலாம்....  திரைப்படங்களில் வரும் சில காட்சிகளை என்னதான் கழுவி கழுவி ஊற்றினாலும் மீண்டும் மீண்டும் அதே காட்சிகளை எல்லாபடத்திலும் வஞ்சனையில்லாமல் வைப்பதில் திராவிட படங்களுக்கு நிகர் திராவிட படங்கள் தான்...

உதாரணத்துக்கு ஒரு சீன்... ஜீப்பில் தப்பித்து ஓடும் வில்லனை.... வண்டியின் எதிரில் நின்று...  ஹீரோ கண்ணாடியை உடைத்து கொண்டு வில்லனை மட்டும் வெளியே கொண்டு வந்தால் அது தமிழ் படம்... அதே ஹீரோ... உதைத்து ஜீப்பையே பறக்க வைத்தால் அது தெலுங்கு படம்...  அந்த வில்லனை ஹீரோ அடிப்பாரு... அடிப்பாருன்னு... காத்திருந்து அவர் அமைதியா போக விட்டுட்டாருன்னா அது மலையாளப்படம்.... அந்த ஜீப்பை ஒரு துப்பாக்கி குண்டால சுட்டு வெடிக்க வச்சார்ன்னா அது ஹிந்தி படம் அவ்வளவு தான் வித்தியாசம்....


இப்ப நான் சொல்லப்போறது தமிழ் சினிமாவில இருக்கிற ஒரு சீன் பத்திதான்....

சினிமா ஆரம்பிச்சி  இப்பவரைக்கும் ஒரு சீன் மாறாம இருக்கிறது.... இந்த சீனை எப்படித்தான் யோசிக்கிறாங்களோ தெரியல...

கிளைமாக்ஸ்ல கண்டிப்பா ஒரு சேசிங் காட்சி இருக்கும்... வில்லன்கள் தப்பிச்சி போவாங்க... இல்லன்னா ஹீரோயினை வில்லன் கடத்திகிட்டு போயிடுவாங்க அவங்களை விரட்டிப்பிடிச்சி அவங்கள பந்தாடி... படத்தை பந்தாவ முடிச்சி வைப்பாரு நம்ம ஹீரோ..

இதுமாதிரி தான் அனைத்து தமிழ் சினிமாவும் இருக்கிறதே நீ எந்த காட்சி பத்தி சொல்ல வற்ர அப்படித்தானே கேக்குறீங்க...

வில்லன் தப்பிச்சி போறதுக்கு மாட்டுவண்டி, குதிரை வண்டி, ஸ்கூட்டர், கார், ஜீப், வேன், ஏன் ஹெலிகாப்டர் வரைக்கு கொடுப்பாங்க ஆன நம்ம ஹீரோக்கு அப்படி ஒன்னும் சொந்தமா இருக்காது.... அவங்க எதுல தப்பிச்சோ அல்லது கடத்திகிட்டு போறப்ப இவர் பல நாடுகள் கடந்து ஆலமர விழுதுகளை பிடித்தோ... வேகமா ஓடியே போய்கிட்டு இருப்பாரு....

அப்பத்தான் டைரக்டருக்கு யோசனை வரும்... எவ்வளவு நேரம் கார் பின்னாடியே ஓடிபோய்கிட்டு இருப்பாருன்னு... ஹீரோவுக்கும் ஏதாவது செய்யனுன்னு முடிவுப்பண்ணி ஒரு சீன் வைப்பாரு பாருங்க.... ஹீரோவுக்கு என்ன வண்டி வேணுமோ அந்த வண்டியை ஒருத்தர் புல்லா பெட்ரோல் போட்டு, ஆன் பண்ணி விட்டுட்டு... மரத்துப்பின்னாடி  நின்னு “சுச்சுஊ“ போயிட்டு இருப்பாரு... நம்ம ஹீரோ அந்த வண்டியை எடுத்துகிட்டு போய் வில்லனை பிடிப்பாரு...


நான் தெரியாமத்தான் கேக்குறேன் அது எப்படி... ஹீரோவுக்கு வண்டித்தேவைப்படுகிற அதே நேரத்தில யாருக்காவது சுச்சுஊ வந்தடுதுன்னு தெரியல... சரி அப்படி இருந்தாலும் வண்டியை ஸ்டார்பண்ணி விட்டுட்டா சுச்சுஊ போவாங்க....  கார், ஸ்கூட்டர், குதிரை இப்படி யாரையாவது ஏமாத்திட்டு எடுத்துகிட்டு போறாங்களே இது நியாயமா..?

இதுவே வண்டி திருடுற கேஸாச்சா... இது எப்படி நியாயம் ஆகும்... அப்போ வண்டியை பறிகொடுத்த அந்த அப்பாவிங்க மனநிலையை ஏன் இந்த டைரக்டர்கள் புரிஞ்சிக்க மாட்டேங்கராங்கன்னு தெரியல..... நமக்கு அவசரத்துக்கு ஒரு வண்டி தேவைப்படுகிற போது இப்படி ஒரு சீன் நம்ம வாழ்க்கையில... எது எப்படியோ இன்னைக்கு வரை அந்த காட்சிகளை நாமும் பார்த்துகிட்டுதான் இருக்கோம்...

24 March, 2018

சமுத்திரக்கனியின் வில்லத்தனமும்... மனைவியின் கோவமும்...


சினிமா எனும் கனவுத்தொழிற்சாலையில் இந்த நூறாண்டுகால வரலாற்றில் நடிப்பில் ஞானசூன்யன்கள் முதல் ஜாம்பவான்கள் வரை என  இதுவரை ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் வந்து போயிருக்கிறார்கள்... காலங்களுக்கு ஏற்பவும்.. கதைகளுக்கு ஏற்பவும் அந்தந்த காலக்கட்டத்தில் சினிமாவில் ஜொலித்த நட்சத்திரங்கள் ஏராளம்... ஏராளம்...

ஒவ்வொரு நடிகை, நடிகர்களுக்கும் நடிப்பில் தனக்கென தனிபாணியை கொண்டிருப்பார்கள்.. அவர்களுடைய நடிப்பு, அவர்களுடைய குணாதிசயங்கள், அவர்களுடைய தனித்தன்மைகள் என அத்தனை நடிகர்களும் தன்னுடைய முத்திரையை பதித்து மக்களால் போற்றப்பட்டவர்களே.... ரசிகர்களிடம் தன்னை தனித்துக்காட்ட படத்துக்கு படம் தன்னை மெருகேற்றி, படத்துக்கு படம் வித்தியாசம் காட்டி மக்கள் மனதிலே நிலையான இடத்தை பிடித்துவிடுகிறார்கள்...

தியாகராஜ பாகவதர் முதற்கொண்டு இன்றைய தத்தக்காபித்தக்கா வரை என்னற்ற ஹீரோக்கள் வரிசையை எடுத்துக்கொண்டாலும் சரி, நம்பியார், பி.எஸ்.வீரப்பா, அசோகன்,  ரகுவரன், மன்சூர்அலிகான், பிரகாஷ்ராஜ் என வில்லன்கள் பட்டியலை எடுத்துகொண்டாலும் சரி, திரையில் வந்துப்போன அத்தனை நகைச்சுவை நடிகர்களையும் சரி ஏதோ ஒரு காரணத்திற்காக ரசிகர்கள் அவர்களை கொண்டாடியிருக்கிறார்கள்.

ஹீரோக்களை கொண்டாடும் அதே காலக்கட்டத்தில் வில்லன்களையும் கொண்டாடியிருக்கிறார்கள். நம்பியாரை திரையில் காட்டும் வில்லத்தனத்தின் உச்சம் என்பது அவரை எம்ஜிஆரின் உண்மையான எதிரி என்றே நம்பிய கூட்டங்கள் கூட இருந்தது... அவருடைய வில்லத்தனம், அவருடைய நடிப்பு, அவருடைய தனித்தன்மை இன்றளவும் போற்றப்படுகிறது.

என் நண்பர் ஒருவர் ரகுவரனுக்கு அவ்வளவு பெரிய ரசிகர்... அவருடைய படங்களை பார்த்து அப்படி கொண்டாடுவார்... ஆனந்தராஜ், மன்சூர்அலிகான் ஒரு காலக்கட்டத்தில் சினிமாவை கலக்கியிருக்கிறார்கள்... இப்படியாய் பல்வேறு வில்லன் கதாபாத்திரங்களில் வந்து இன்றளவும் தமி‌ழ்திரைவுலகை அலங்கரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
..


சரி சௌந்தர்... என்ன சொல்ல வர... என்று தங்களுடைய மனதில் ஓடும் கேள்வி எனக்கு கேட்கிறது... பொதுவாக அந்தந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களை அடுத்தப்படத்தில் நாம் அப்படியே பார்க்க விரும்புவோம்.. எம்.ஜி.ஆர் வில்லனாக நடித்தால் எப்படி ரசிகர்கள் விரும்பமாட்டார்களோ அதேபோல்தான் நம்பியாரை ஹீரோவாக மக்கள் விரும்பவில்லை...

ஜெமினி கணேசனை காதலுக்காகவே பார்த்தவர்கள் அவர் வீரவசம் பேசி சண்டையிட்டால் மனதில் சிரித்துக்கொண்டார்கள்.... அடுத்த காலக்கட்டத்தில் கமல் நடிப்புக்கு எனவும், ரஜினியை ஸடடைலுக்கு எனவும் ஒரு முத்திரை பதிந்துவிட்டது... ரசிகர்கள் ஹீரோக்களை ஹீரோவாகவும்... வில்லன்கள் வில்லன்களாகவும்.. மட்டுமே ஏற்றுக்கொண்டார்கள்...

ஆனால் அது டிஜிட்டல் சினிமாவுக்கு பொருந்தவில்லை.. ஹீரோ வில்லனாகவும்.. நகைச்சுவை நடிகராகவும்.. வில்லன்கள் ஹீரோவாகவும் எல்லாருக்கும் நடிப்பில் எதையும் நடித்துக்காட்டுவோம் என்று நிருபித்த காலக்கட்டமாக இருக்கிறது...

சமீபத்தில் என்னுடைய மனைவி சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நாயகனாகவும், சமுத்திரகனி வில்லனாகவும் நடித்த “பாயும் புலி“ படத்தை பார்த்துகொண்டிருந்தாள்.. பாதிபடம் முடிந்த நிலையில் ஏங்க.. என்று குரல்... என்னாச்சிம்மா என்று கேட்டேன்... என்னங்க இப்படி எடுத்திருக்காங்க... அப்படின்னு கேள்விக்கேட்டாள்...

என்னம்மா சுசீந்திரன் நல்லா பண்ணியிருப்பாரே... விஷால், சமுத்திரகனியும் நல்லா நடிச்சிருப்பாங்களே... எனக்கே பிடிச்சிருக்கு உனக்கு என் பிரச்சனை என்று கேட்டேன்... (எங்க வீட்டம்மா தெலுங்குவாடு... 10 தமிழ் படம் பார்த்தா 20 தெலுங்குபடம் பார்த்திருவாங்க..) எப்பவும் தமிழ்படத்தை பார்த்து கேள்விகேட்டது கிடையாது... ஏன் இப்படி கேட்குறாங்களேன்னு... மறுபடியும் சொல்லும்மான்னு கேட்டேன்...

இந்த படத்துல சமுத்திரக்கனி வில்லனாக வற்ராருங்க.. ஆமா.. அவர்தான் இந்தப்படத்தில் வில்லன்... ஏங்க என்னங்க சொல்றீங்க எவ்வளவு நல்லவர் அவர் ஏங்க இப்படியெல்லாம் நடிக்கிறாரு... அவர் வில்லானக நடிக்கிறத என்னால பார்க்க முடியலைங்க...அப்படின்னு ஒரே புலம்பல்...



ஒரு நடிகர் என்பவன் தனக்கு கொடுத்திருக்கிற வேடத்தில் தன்னுடைய திறமையை பயன்படுத்தி சிறப்பாக நடிச்சிக்கொடுப்பாங்க... அதன்படி இந்த படத்துக்கு அவர் நல்லாயிருக்கும்ன்னு அந்தப்படத்தில் வில்லனாக போட்டிருக்காங்க... அப்படின்னு பெரிய விளக்கம்கொடுத்தும் எங்கவீட்டம்மா அதை ஏற்றுக்கொள்ளவில்லை.. கடைசியிலே அந்தப்படத்தை முழுமையாக பார்க்கவேயில்லை... (நல்லவேளை அவங்க இன்னும் ரஜினிமுருகன் படத்தை பார்க்கல)

சமுத்திரக்கனி என்று சொன்னவுடன் ஒரே அறிவுரை என்றுதான் நினைவுக்கு வரும்... (இந்த சாட்டை, அப்பா போன்ற படங்களை இந்த விஜய் டிவி காரனுங்க மாதத்துக்கு 10 வாட்டி போட்டு அவர் இப்படித்தான் என்பதுபோல் மக்கள் மனதில் பதிந்துவிட்டார்போல) எல்லாப்படத்திலும் அவர் அதே பாணியை கொண்டு நடிப்பதால் சிலருக்கு சலிப்புகூட ஏற்பட்டிருக்கிறது...

அவர் வில்லனாக நடிப்பதை பலரும் பாராட்டியும் இருக்கிறார்கள்... ஆனால் என் மனைவியோ அவர் நல்லவனாகவே மட்டும்தான் நடிக்கனும்... அவர் வில்லனாக நடித்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியல என்று கடைசிவரை விவாதம் செய்துக்கொண்டே இருக்கிறார்...

எதுஎப்படியோ ஒரு நடிகர் இப்படித்தான் நடிக்கவேண்டும்.. அவர் இந்த கதாபாத்திரத்துக்குதான் பொறுந்தவார்... அப்படின்னு நம்புற கூட்டம் இன்னும் இருக்கிறது என்று நம்பத்தோன்றுகிறது....

19 August, 2013

உயிரை பணயம் வைத்த கமல்... விஸ்வரூபம்-2 அப்டேட்ஸ்...!



கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய மைல்கல் என்றே சொல்லப்படுகிறது. அதிலும் முக்கியமாக கமல்ஹாசனின் கடும் உழைப்பில் உருவாகியிருந்த ஆக்‌ஷன் காட்சிகள் இன்று வரை பேசப்படுகின்றன. இத்தகைய விஸ்வரூப வெற்றியைக் கண்ட திரைபப்டத்தின் அடுத்த பாகத்தில் தான் தற்போது கமல்ஹாசன் நடித்துக்கொண்டுவருகிறார்.


முதல் பாகத்தையே பிரம்மாண்டமாக எடுத்துவிட்ட கமல்ஹாசன் அடுத்த பாகத்தை அதைவிட அதிகமாக எடுத்துவிடும் முடிவில் இருக்கிறார். சமீபத்தில் நடந்த படப்பிடிப்பின் போது இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதும்போது கமல்ஹாசன் ஒரு காரிலிருந்து வெளியே குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது.

ஸ்டண்ட் இயக்குனர்கள் ’டூப்’ பயன்படுத்திக்கொள்ள எவ்வளவோ அறிவுறுத்தியும் கேட்காமல் ’என் ரசிகர்கள் என்னை நம்பி, என் திரைப்படத்தில் இருக்கும் உண்மையை நம்பி படம் பார்க்க வருகிறார்கள். டூப் போட்டு நடித்து அவர்களை ஏமாற்ற நான் விரும்பவில்லை’ என்று கூறி கமல்ஹாசனே நடித்திருக்கிறார்.

அந்த காட்சி படமாக்கப்பட்டபோது ஏற்பட்ட விபத்தில் கமல்ஹாசனின் காலில் சிறிய முறிவு ஏற்பட்டிருக்கிறது. காயம் சிறிதென்பதால் விரைவில் குணமாகி கமல்ஹாசன் நன்றாக நடக்க ஆரம்பித்துவிடுவார் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்களாம்.

சில வாரங்களுக்கு முன்பு நடந்த படப்பிடிப்பில் கமல்ஹாசனின் தாடையில் சிறு வெட்டு போன்ற காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. காட்சிகள் உண்மையாக வரவேண்டும் என்பதற்காக கமல்ஹாசன் கடுமையாக உழைப்பதோடு மட்டுமல்லாமல், திரைப்படத்தின் ஹீரோயின்களான பூஜா குமார், ஆண்ட்ரியா ஆகியோரையும் நன்றாக வேலை வாங்கி இருக்கிறார்.

90% திரைப்படம் படமாக்கப்பட்டுவிட்டதோடு, டப்பிங் வேலைகளும் உடனுக்குடன் நடந்துகொண்டிருப்பதால் வருகிற தீபாவளியன்று படம் ரிலீஸாகலாம் என்று பேசப்படுகிறது.

09 July, 2013

சூர்யாவுக்கு சிங்கம்-2 கொடுத்த வில்லங்கமான விமர்சனம்...!


2010-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. முழுநீள கமர்ஷியல் படமாக வெளிவந்த சிங்கம் திரைப்படத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை விட, சூர்யாவின் உயரத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் தான் அதிகம்.


அதிலும் சமூக வலைதளங்களில் சூர்யாவை விட அவரது ஜோடியான அனுஷ்கா உயரமாக இருக்கிறார் என்று பலவாறு பேசப்பட்டது. ஆனால் எந்த விமர்சனத்தையும் பொருட்டாக மதிக்காமல் மறுபடியும் சூர்யா - அனுஷ்கா ஜோடி சிங்கம் 2 திரைப்படத்தில் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளது.




நேற்று (09.07.13) நடந்த சிங்கம் 2 சக்சஸ் மீட்டில் கலந்துகொடு பேசிய நாசர் ” நான் இப்ப சில இந்தி படத்துல நடிக்கிறேன். இந்தி ஃபீல்டுல இருக்குறவங்க சூர்யா உயரம் என்னனு கேட்டதுக்கு நான் சாதாரண உயரம் தான் இருப்பாருன்னு சொன்னத அவங்க நம்பல.

ஸ்கிரீன்ல பாக்க பிரம்மாண்டமா இருக்காரு. அவர் சாதாரண உயரம்னு சொன்னா எப்படி நம்ப முடியும்னு கேட்டாங்க. அது தான் சூர்யாவின் உயரம். உடலின் உயரம் ஒரு பிரச்சனையே இல்ல. அதையும் தாண்டி பெரிய நட்சத்திரமா உயர்ந்த இடத்துல இருக்காரு” என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சிங்கம் 2 படத்தின் வில்லனான ரகுமான் “ சூர்யாவோட உயரம் அவரோட வளர்ச்சியை எந்த விதத்துலையும் பாதிக்காது. சிங்கத்துக்கு எதுக்கு ஒட்டகத்தின் உயரம். சிங்கம் சின்னதா இருந்தாலும் அது தான காட்டுக்கு ராஜா” என்று பேசினார்.


அதன்பிறகு பேசிய சூர்யா “ சிங்கம் 2 படத்தின் வெற்றி இயக்குனர் ஹரியையே போய்ச் சேரும். சிங்கம் 2 எடுத்து என்ன கழட்டப்போறாங்க? சிங்கம் ஹிட் ஆனதால, சிங்கம் 2 எடுத்து எப்படியாவது ஓட்டிடலாம்னு படம் எடுக்குறாங்க என பேசப்பட்டது.



அப்படி இல்லாம புதுசா எதாவது படத்துல இருக்கனும், ரசிகர்களை ஏமாத்தக் கூடாது என எல்லாத்தையும் தான் தலைல தூக்கி வெச்சி மெனக்கட்டு வேலை செஞ்சிருக்காரு ஹரி.அவரோட நான் 4 படம் வேலை செஞ்சிருக்கேன். இப்ப அவர் என் குடும்பத்துல ஒருவராகிட்டார். அவரோட சேர்ந்து இன்னொரு படமும் பண்ணனும்னு ஆசை இருக்கு” என்று கூறினார்.


இயக்குனர் ஹரி பேசிய போது “ நானும் சூர்யாவும் 4 படத்துல ஒண்ணா வேலை செஞ்சிருக்கோம். எங்களுக்குள்ள இருந்த இயக்குனர், ஹீரோ உறவு மாறி சகோதரர்களா பழகிகிட்டு இருக்கோம். எதிர்காலத்துல நானும் சூர்யாவும் மறுபடியும் ஒரு படம் பண்ணுவோம்” என்று கூறினார். (சினிமா தளங்கள்)

28 May, 2013

தீராத வடிவேலுவின் அரசியல் அலர்ஜி / இமயமலையில் பிரபல நடிகர்..!


ர‌ஜினி, விஷாலை தொடர்ந்து சிம்புவும் இமயமலை ஏறிவிட்டார். ஆன்மீகம்தான் எனக்குள் இருக்கிற என்னை அடையாளம் காட்டுகிறது என்றெல்லாம் சமீபமாக சொல்லத் தொடங்கினார் சிம்பு. ச‌ரி, தனியாக இருப்பதால் அப்படியெல்லாம் சாயா... மாயா... தோன்றியிருக்கலாம் என்றுதான் நினைத்தனர். ஆனால் உண்மையாகவே இமயமலைக்கு கிளம்பினார். இப்போது போட்டோவும் ‌ரிலீஸாகியிருக்கிறது.

ர‌ஜினி பிளைட்டில் பயணித்து கிழிந்த கதர் சட்டையுடன் மலையேறினார் என்றால் சிம்பு செம கலக்கல் கெட்டப். இமயமலையிலும் இவர்களை தொடர்ந்து வந்து பத்தி‌ரிகைக்காரர்கள் போட்டே எடுக்கிறார்களா இல்லை இவர்களே போட்டோ எடுத்து பத்தி‌ரிகைக்கு தருகிறார்களா?

விஜய் டிவியில் சிம்புவின் இமயமலைப் பயணம் என்று தொடர் வராமலா போகும்.
****************************
 
ஏறக்குறைய இரண்டு வருட வனவாசத்துக்குப் பிறகு மீண்டும் வடிவேலு. யுவராஜா இயக்கும் ச‌ரித்திர படம். ஆனால் காமெடிதான் பிரதானம்.

அரசியலுக்கு போய் முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்ட வலி இன்னமும் இருக்கிறது வடிவேலிடம். கேமராவுக்கு முன்னால் நிற்பதற்கு முன் வசனங்களை வாங்கி இது யாரையாவது கேலி செய்வது போல் இருக்குமா என எட்டு திசையிலும் சிந்தனையை ஓடவிட்டுதான் வசனங்களை ஓகே செய்கிறார். அப்படி முழு நீள படமும் அரசியல் இடை நீக்கத்துடன்தான் உருவாகி வருகிறது.

வடிவேலு படம் வெளிவந்தால் ஆனவரைக்கும் ஓடவிட மாட்டோம் என ஆர்மிக்கார‌ரின் முரட்டு தொண்டர்கள் சிலர் வீராவேசம் கொண்டிருக்கிறார்கள். இதுவும் காமெடி புயலை கொஞ்சம் கலங்கடித்திருக்கிறது.

எப்படியும் வடிவேலின் இரண்டாவது இன்னிங்ஸ் சலசலப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.
Related Posts Plugin for WordPress, Blogger...