கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label வடிவேலு. Show all posts
Showing posts with label வடிவேலு. Show all posts

18 April, 2014

தெனாலிராமன் விமர்சனம்.... பாதியில் ரத்து செய்யப்பட்ட காட்சி...!


இன்று புனித வெள்ளி என்பதைக்கூட மறந்து வடிவேலுவின் படத்தை பார்க்கப்போகிறோம் என்ற பரவசம்தான் மனதில் நிறைந்திருந்தது.. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு காணாமல்போன வடிவேலு இன்றைய பாராளுமன்ற தேர்தலின்போது கொஞ்சம் துளிர்க்க துவங்குகிறார் என்று நினைக்கும்போது மகிழ்வாகவே இருக்கிறது...

கொஞ்சநாள் காணாமல் இருந்த திரையுலகின் நகைச்சுவை சாம்ராஜ்ஜியம் இன்று புறப்பட்டு விட்டது... அதன் வருகையை உறுதிசெய்தும் திரைப்படம்தான் தெனாலிராமன்..  ஆளும் கட்சியிடம் இரகசியமாக உத்தரவு ‌வாங்கி... அந்த நம்பிக்கைப்பேரில் படத்தை துவங்கி நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்து... தெலுங்கு அமைப்புகளிடம் ஏதே சில சிக்கல்கள் ஏற்பட்டு இன்று வெற்றிகரமாக திரையை தொட்டுவிட்டது வடிவேலு நடிக்கும் தெனாலிராமன்...

இன்று தேர்தல் சம்மந்தமான பணிகள் ஏதும் இல்லை, பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுவிட்டது... ஆகையால் இன்று முதல் காட்சி பார்த்தே ஆகவேண்டும் என்ற முடிவோடு நானும் வேடந்தாங்கல் கரணும் காலை 10.00 மணிக்கு திருவள்ளூர் துளசி திரையங்கிற்கு சொன்றோம்.

கடந்த வாரம் வெளியான மான் கராத்தே படம் திருவள்ளூர் நகரில் கிருஷ்ணா மற்றும் லட்சுமி என இரண்டு திரையரங்குகளில் வெளியானது. நாங்கள் லட்சுமி திரையரங்கிற்கு சென்றோம் முதல் நாள் முதல் காட்சிக்கு வெறும் 30 பேர்தான் அரங்கில் இருந்தனர்... ஆனால் இன்று வடிவேலுவின் படத்தை பார்ப்பதற்கு 500 க்கும் மேற்பட்ட கூட்டம் இருந்தது.....

வழக்கம்போல் டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கும் ஒருவரிடம் காசு கொடுத்து தூரமிருந்தே டிக்கெட் வாங்கி அரங்கில் வசதியான இடமாகப்பார்த்து அமைந்தோம்...  (டிக்கெட் விலை ரூ.50) அதன் பிறகே ஆரம்பித்தது வில்லங்கம்...!

ஓரளவுக்கு திரையரங்கம் நிறைந்திருந்திருந்தது.... 10.25-க்கு வாக்காளர் விழிப்புணர்வு குறும்படமும்.. அதைத் தொடர்ந்து புகைக்கு எதிராக விழிப்புணர்வு படமும் ஓடத் தொடங்கியது இந்த காட்சிகள் ஓடும் போதே திரையில் ஒரு வித்தியாசம் தெரிந்தது... அது என்ன வென்றால் படம் பெரியதாகி... அதாவது 200 %  அளவில் Zoom-ஆகி படம் ஓடியது... சரி விளம்பரப்படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று எண்ணுகையில்.....?

தெனாலிராமன் படமும் இப்படியே ஓடத்‌துவங்கியது... படத்தின் பாதிஅளவு மட்டுமே திரையில் தெரிந்தது அதனால் யார் நடிகர்கள் என்றுகூட பெயர்கள் வாசிக்க முடிவில்லை முகங்களும் மறைந்து வந்தது... ‌ அரங்கில் சத்தமும்... கூச்சலும் போட்டார்கள்... சரியாகிவிடும் என்று நினைத்ததால்.. அடி வாயாடி.. பாடல் ‌வரை அப்படியே ‌ஓடியது.... ரசிகர்கள் எழுந்து அலுவலகம் சென்று முற்றுகையிட்டனர்...  சரி செய்துக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லியே அரைமணி நேரப்படத்தை ஓட்டிவிட்டார்கள்....

அதன் பிறகும் சரியாக வில்லை என்பதால் பொருமையிழந்த ரசிகர்கள் கூச்சலிட்டதால்... சரி செய்கிறோம் என கோ படத்தில் இருந்து பாடல்களை ஓடவிட்டனர்.... அதற்குள் பலரும் பணத்தை திருப்பிகொடு்ங்கள் என வாங்கிக்கொண்டு சென்றுவிட்டனர்... 


இறுதியாக 11.30 மணிக்கு அந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டது.... ஆனால் மீதமிருந்த கொஞ்சப்பேருக்காக படம் போடமுடியாது என்றும்... அடுத்த காட்சிக்கான நேரத்தில் மாற்றம் ஏற்படும் என்றும் முதல் காட்சியை ரத்துசெய்துவிட்டார்கள்...!

வெகு நாட்களுக்கு பிறகு வடிவேலுவின் படத்தை பார்க்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பும்... அதேபோல் வெகுநாளுக்கு பிறகு விமர்சன பதிவு எழுதப்போகிற ஆர்வமும் தடைப்பட்டுவிட்டது... இனி அடுத்த காட்சி நேரம் பகல் 2.00 மணிக்கு பார்ப்போம்.... அதற்குள் என்ன வேலை வரப்போகிறதே... முடிந்தால் படம் பார்த்துவிட்டு மாலை விமர்சனம் எழுதுகிறேன்....

28 June, 2013

ஒன்றுக்கு பதில் பத்து..! வடிவேலு போட்ட வில்லங்க ஒப்பந்தம்...


சினிமாவில் மீண்டும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்தவர் வடிவேலு. அதனால் பல கதைகள் கேட்டு அதில் ஒரு கதையை செலக்ட் பண்ணி இப்போது ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால், இந்த படத்தில் அவர் நடிப்பதற்கு முன்பு அவரை வைத்து படம் தயாரிக்க முன்னணி படாதிபதிகள் யாரும் முன்வரவில்லை.

6 மாதங்களாக பொறுமையாக காத்திருந்த வடிவேலுவே ஒருகட்டத்தில் தயாரிப்பாளர் தேடும் பணியில் இறங்கி செயல்பட்டார். அப்படி கல்பாத்தி அகோரமின் ஏஜிஎஸ் பிலிம்சுக்கும் பல தடவை நடையாய் நடந்திருக்கிறார். 

அதன்பிறகுதான் அவரை வைத்து படம் பண்ண முன்வந்தார்களாம். அப்போது, தன்னிடம் கதை சொல்லியிருந்த யுவராஜின் கதையை அவர்களிடம் சொல்லி ஓ.கே வாங்கியிருக்கிறார் வடிவேலு.

ஆனால், அப்படி ஒப்பந்தமாவதற்கு முன்பு, அந்த நிறுவனத்துக்கு ஒரு உறுதி மொழியும் அளித்தாராம் வடிவேலு. அதாவது, ஒருவேளை என்னை வைத்து நீங்கள் தயாரிக்கிற படம் தோல்வியடைந்தால், அதற்கு பிராயசித்தமாக உங்களுக்கு 10 படங்களில் காமெடியனாக நடித்து தருவேன் என்றும் வாக்குறுதி அளித்தாராம் வடிவேலு.

28 May, 2013

தீராத வடிவேலுவின் அரசியல் அலர்ஜி / இமயமலையில் பிரபல நடிகர்..!


ர‌ஜினி, விஷாலை தொடர்ந்து சிம்புவும் இமயமலை ஏறிவிட்டார். ஆன்மீகம்தான் எனக்குள் இருக்கிற என்னை அடையாளம் காட்டுகிறது என்றெல்லாம் சமீபமாக சொல்லத் தொடங்கினார் சிம்பு. ச‌ரி, தனியாக இருப்பதால் அப்படியெல்லாம் சாயா... மாயா... தோன்றியிருக்கலாம் என்றுதான் நினைத்தனர். ஆனால் உண்மையாகவே இமயமலைக்கு கிளம்பினார். இப்போது போட்டோவும் ‌ரிலீஸாகியிருக்கிறது.

ர‌ஜினி பிளைட்டில் பயணித்து கிழிந்த கதர் சட்டையுடன் மலையேறினார் என்றால் சிம்பு செம கலக்கல் கெட்டப். இமயமலையிலும் இவர்களை தொடர்ந்து வந்து பத்தி‌ரிகைக்காரர்கள் போட்டே எடுக்கிறார்களா இல்லை இவர்களே போட்டோ எடுத்து பத்தி‌ரிகைக்கு தருகிறார்களா?

விஜய் டிவியில் சிம்புவின் இமயமலைப் பயணம் என்று தொடர் வராமலா போகும்.
****************************
 
ஏறக்குறைய இரண்டு வருட வனவாசத்துக்குப் பிறகு மீண்டும் வடிவேலு. யுவராஜா இயக்கும் ச‌ரித்திர படம். ஆனால் காமெடிதான் பிரதானம்.

அரசியலுக்கு போய் முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்ட வலி இன்னமும் இருக்கிறது வடிவேலிடம். கேமராவுக்கு முன்னால் நிற்பதற்கு முன் வசனங்களை வாங்கி இது யாரையாவது கேலி செய்வது போல் இருக்குமா என எட்டு திசையிலும் சிந்தனையை ஓடவிட்டுதான் வசனங்களை ஓகே செய்கிறார். அப்படி முழு நீள படமும் அரசியல் இடை நீக்கத்துடன்தான் உருவாகி வருகிறது.

வடிவேலு படம் வெளிவந்தால் ஆனவரைக்கும் ஓடவிட மாட்டோம் என ஆர்மிக்கார‌ரின் முரட்டு தொண்டர்கள் சிலர் வீராவேசம் கொண்டிருக்கிறார்கள். இதுவும் காமெடி புயலை கொஞ்சம் கலங்கடித்திருக்கிறது.

எப்படியும் வடிவேலின் இரண்டாவது இன்னிங்ஸ் சலசலப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

23 March, 2013

வடிவேலு நடிக்கும் புதிய படம்... இதையாவது நம்பலாமா..?


கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் ஆறு புதிய படங்களை அறிவித்துள்ளது. வடிவேலு நடிக்கும் தெனாலிராமன் படமும் இதில் அடங்கும்.

தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்கிறது ஏஜிஎஸ். இந்த நிறுவனம் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தயாரித்து வந்தது. ஆனால் மாற்றான் படத்தின் சறுக்கல் காரணமாக, சில மாதங்கள் புதிய படம் அறிவிக்கவில்லை.

இப்போது ஒரே நேரத்தில் ஆறு புதிய படங்களை அறிவித்துள்ளார் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ அர்ச்சனா கல்பாத்தி. தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அவர் வெளியிட்டிருப்பதாவது:

கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் :

வடிவேலு நடிக்க, யுவராஜ் இயக்கும் படத்துக்கு கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு டி இமான் இசையமைக்கிறார்.

சந்துரு இயக்கத்தில் முழுநீள காமெடி படமாக உருவாகிறது சரஸ்வதி சபதம். ஜெய், விடிவி கணேஷ், மனோபாலா நடிக்கின்றனர்.

அடுத்து ஜெயம் ராஜா - ஜெயம் ரவியுடன் மீண்டும் கூட்டணி சேர்கிறோம்.

அதர்வா முரளி நடிக்கும் ஒரு விறுவிறுப்பான படமும் தயாராகிறது. புதுமுக இயக்குநர் யுவராஜ் இயக்குகிறார்.

ஆறாவதாக, ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் இணைந்து ஒரு புதிய படம் செய்கிறோம். இதில் ஹீரோ கார்த்திக் கவுதம்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல ஒரு பெரிய பட்ஜெட் படமும் தயாராகிறது. அதன் விவரம் இப்போது சொல்வதற்கில்லை," என்று தெரிவித்துள்ளார்.

07 March, 2013

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு..! படத்தின் பெயரும் முடிவுசெய்யப்பட்டது

காமெடி நடிகர் வடிவேலு கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக-வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். அத்தேர்தலில் திமுக தோல்வியடைந்ததை அடுத்து இவருக்கு சினிமா வாய்ப்புகளும் பறிபோனது. இவரை தங்களது படங்களில் நடிக்கவைக்க எந்தவொரு தயாரிப்பாளரும், இயக்குனரும் முன்வரவில்லை.

இந்நிலையில், மறுபடியும் ரீ எண்ட்ரி கொடுக்கும் வகையில், இவர் நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சியில் இயக்குனர் சிம்புதேவனுடன் இணைந்து செயல்பட்டார். ஆனால் படத்திற்கு பட்ஜெட் எகிறவே, படம் கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில், வடிவேலு ஹீரோவாக நடிக்கும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவது முடிவாகி உள்ளது. இப்படத்திற்கான கதையை ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய டாக்டர் காயத்ரி எழுதியுள்ளார். வடிவேலுவுக்கும், கே.எஸ்.ரவிக்குமாருக்கும் இந்த கதை பிடித்துவிட்டதால் சேர்ந்து பணியாற்ற முடிவு செய்துவிட்டார்களாம்.

இதுகுறித்து கே.எஸ்.ரவிக்குமார் கூறும்போது, ‘கோச்சடையானி’ல் எனது பணி முடிந்து விட்டது. ‘கோச்சடையான்’ ரிலீசுக்குப் பிறகு ‘ராணா’ பணிகள் தொடங்கலாம் என ரஜினி கூறியுள்ளார். ‘பஞ்சதந்திரம் பார்ட் 2’ பண்ணலாம் என்ற யோசனையும் உள்ளது. இதற்கிடையில்தான் டாக்டர் காயத்ரி, வடிவேலுக்கு ஒரு கதை எழுதி வைத்திருக்கிறேன் என்று சொன்னார். அந்த கதை ரொம்ப பிடித்திருந்தது. வடிவேலுவும் கதையை கேட்டுவிட்டு என்னிடம் வந்து பண்ணலாமான்னு கேட்டார். சரி என்று சொல்லிவிட்டேன். இந்த கதையை பிரம்மாண்ட செலவில் படமாக்க இருக்கிறோம். தயாரிப்பாளர் கிடைத்ததும் ஆரம்பித்து விடுவோம் என்றார்.

இப்படத்திற்கு ‘ஆப்பிரிக்காவில் வடிவேலு’ என பெயர் வைத்திருக்கின்றனர். ஆப்பிரிக்கா காட்டில் தன்னந்தனியாக மாட்டிக் கொள்ளும் வடிவேலு, அங்கு அனுபவிக்கும் சிக்கல்களையும், சிரமங்களையும் கதையாக உருவாக்கியிருக்கிறார்கள். 
பழையபடி வடிவேலுவை எதிர்பார்த்து காத்திருக்கும் வடிவேலு ரசிகர்களுக்கு இச்செய்தி உண்மையில் மகிழ்ச்சியே...!

16 February, 2013

ஜெயலலிதா மற்றும் விஜயகாந்தை சந்திக்கிறார் வடிவேலு

சினிமாவுலகில் உச்சத்தில் இருந்த வடிவேலுக்கு தேர்தல் சூறாவளி பெரும் பாதிப்பை தந்தது. தற்போது கொஞ்சக்கொஞ்சமாய் வெளிவந்திருக்கும் வடிவேலு தன்னுடைய மகளின் திருமணத்தை முன்னிருத்தி அனைத்து கட்சியினருடனும் சுமூகமாக செல்ல தீர்மானித்திருக்கிறார்.

அதனால் மகளின் திருமணத்துக்கு அரசியல் பேதமின்றி ஜெயலலிதா உள்பட அனைவருக்குமே அழைப்பிதழ் வைக்க நடிகர் வடிவேலு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர் வடிவேலு அவர்களின் மூத்த மகளுக்கு வரும் ஏப்ரல் 7-ம் தேதி மண்மனம் மாராத மதுரையில் திருமணம் நடக்கிறது. திருமண வேலைகளில் மும்முரமாக உள்ளார் வடிவேலு. 
மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் அச்சடிக்கும் பணி இப்போது நடந்து வருகிறது. வடிவேலு இப்போது அரசியல் பற்றி பேசுவதில்லை என்றாலும், அவர் சார்ந்திருக்கும் திமுக தலைவர்களை அழைத்தால் மீண்டும் தேவையற்ற சர்ச்சைகள் வரும். எனவே அழைப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாராம். 

இறுதியாய் திமுக மட்டும் இல்லாது அதிமுக சார்ந்த பிரபலங்களுக்கும் மற்றும் அனைத்து அரசியல் தலைவர்களுக்குமே அழைப்பிதழ் தருவதென முடிவு செய்துள்ளாராம். திருமணம் முடிந்த பிறகு பல புதுப்பட ஷூட்டிங்கை தொடங்கப் போகிறாராம் வடிவேலு.

அதுசரி அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து பத்திரிக்கை கொடுக்க நினைக்கும் வடிவேலு மதுரையை சார்ந்தவரும் தே.மு.தி.க. வின் தலைவருமான கேப்டன் விஜயகாந்தை சந்தித்து பத்திரிக்கை வைப்பாரா என்பதுதான் தற்போதைய கேள்வி.

26 December, 2012

வடிவேலுவின் இளமைக்காலம்... அதிர்ச்சி பின்னணி...! மனம் திறக்கிறார் வடிவேலு....

அரசியலுக்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய வைகைப்புயல் வடிவேலு முதல்முறையாக தன் மனதை புழுங்கிக்கொண்டிருக்கும் இளமைக்கால வாழ்க்கையில் சினிமாவுக்கு முன் செய்த வேலைகளைப் சொல்கிறார். 

“காலேஜெல்லாம் போய் படிக்கணும்.... பெரிய வேலைக்கு போகணும்னு சின்ன வயசில ரொம்ப ரொம்ப ஆசைப்பட்டேன், ஆனா பள்ளி படிப்பையே முழுசா என்னால படிக்க முடியல. அதற்கு காரணம் எங்களுடைய குடும்பம் ரொம்ப ஏழ்மையான குடும்பம். 

நாங்க உழைச்சாத்தான் எல்லோரும் சாப்பிடமுடியும்ங்கிற ஏழை குடும்பம் மட்டுமல்ல, பெரிய குடும்பமாகவும் இருந்ததால் அப்பா ஒருத்தர் வருமானத்தில் வாழ முடியாத நிலை. அதனால நானும், என்னுடைய சகோதரர்கள் மூவரும் சின்ன வயசிலேயே வேலைக்குப் போக ஆரம்பிச்சோம். 


ஒரு கண்ணாடிக் கடையிலேயே தினக்கூலி வேலைக்கு சேர்ந்தோம். கண்ணாடிகளை எல்லாம் குறிப்பிட்ட அளவில் அறுக்கிற வேலை. எங்கப்பாவும் அந்த கண்ணாடிக் கடையில்தான் வேலை பார்த்தாரு. ஆனா எங்கள வேற ஒரு கடையில சேத்து விட்டாரு. ‘கண்ணாடி வேலை ரெம்ப கஷ்டமான வேலை, தன் கண் முன்னால பிள்ளைங்க கஷ்டப்படக் கூடாது’ ன்னு அவருக்கு நினைப்பு.

கண்ணாடிய அறுக்கிறது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. ‘சர்க்கஸ்’-ல கரணம் தப்பினா மரணம்”னு செர்ல்ற மாதிரி. இதில் கத்தி வெட்டு, லேசா தப்பினா ரணம் தான். 

கண்ணாடி சில்லு குத்தியதால நானும் என் சகோதர்களும் நிறைய தடவ ரத்தம் சிந்தியிருக்கோம். என் உடம்பில் கூட நிறைய வடுக்கள் இன்னும் இருக்கு. கண்ணாடி கடை வேலையில் கிடைச்ச மொத்த சம்பளம் எவ்வளவுன்னு சொல்லலியே



2 ‘குரோஸ்’ கண்ணாடி (240 துண்டு) அறுத்தா 40 ரூபா. நாங்க நாலு வேரும் காலையில ஏழு மணிக்கு வேலைக்குப்போயிட்டு வீடு திரும்ப அவ்வளவு உழைச்சாத்தான் 2 குரோஸ் அறுக்க முடியும். 

வழக்கமா வேலை முடிஞ்சிதான் எல்லாரும் சம்பளம் தருவாங்க. நாங்க காலையிலேயே ‘அட்வான்ஸ்’ மாதிரி பத்து ரூபாயோ, இருபது ரூபாயோ வாங்கி வீட்டில் குடுத்திடுவோம். அந்த பணத்தை வச்சித்தான் அரிசி வாங்கி உலை கொதிக்கணும்.

சில சமயங்கள்ல ‘காட்போர்ட்’ அறுத்து கண்ணாடியப் பொருத்தர வேலையும் தருவாங்க. ‘காட்போர்டு’ அறுத்து அதோட தூளு மூக்கு வழிய உடம்பில் போய் என்னோட தம்பி ஒருத்தன் நிரந்தர ஆஸ்துமா நோயாளி அயிட்டான். 
ஒரு வருஷம் இல்ல, ரெண்டு வருஷம் இல்ல. பதிமூணு வருஷம் கண்ணாடி கடையில நாங்க வேலை பார்த்திருக்கோம். ஒரு நாள் வேலைக்கு போகலைன்னா, அடுப்பில் பூனை தான் படுத்து உறங்கும்.

உடம்பில் நோவுன்னாக் கூட மாத்திரை சாப்பிட்டுட்டு மாங்கு மாங்குன்னு கண்ணாடிய அறுப்போம். இன்னைக்கு நான் நல்ல நெலமையில இருக்கிறேன். என்னைக்கும் மதுரையில நான் பார்த்த கண்ணாடி வேலையை மறக்கவே மாட்டேன்.” 

என்று தான் நடிக்க வரும் முன் பார்த்த கடைசி வேலையைப் பத்தி சொல்லுகிறார் வடிவேலு.

10 November, 2012

அதிரடியாக வரும் வடிவேலுவும், வருத்தப்படும் விஜய்யும்..!


விஜயகாந்தை எதிர்த்து பிரச்சாரத்தில் இறங்கிய வடிவேலு. தன்னுடைய பிரச்சாரத்தால் திமுக-வுக்கு எந்த பலனும் இல்லை என்ற பிறகு.. எதிர்த்தவர்கள் ஆட்சிக்கு வந்த நிலையில் கிட்டதட்ட ஓரம்கட்டப்பட்டார். அவருடைய நகைச்சுவை விருந்தை தமிழக ரசிகர்கள் வெகுவாக இழந்து வாடினார்கள்.

தற்போது அடுத்து அதிரடியாக நான்கு படங்களில் நடிக்கிறார் வடிவேலு. தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து அமைதி காத்தவர், இப்போது ஒரு பேட்டியில் அவரே முழு விவரங்களையும் தெரிவித்துள்ளார். ஏன் இத்தனை பெரிய இடைவெளி.. அடுத்த படம் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள வடிவேலு, "ஒரு இடைவெளி விழுந்துடுச்சு. இனி திரும்ப வரும்போது சாதாரணமா வரக் கூடாது. அதிரடிக்கணும்ல? நல்ல காமெடி ஹீரோ சப்ஜெக்ட். பேசிக்கிட்டு இருக்கேன்.


நாலு அயிட்டம் கையில இருக்கு. மொதல்ல, சிம்புதேவனோட 'புலிகேசி - பார்ட் 2'. பேரு இன்னும் வைக்கலை. கூடிய சீக்கிரம் வேலையை ஆரம்பிச்சுடுவோம். அடுத்தடுத்து, ரவிக்குமார் சாரோட 'ஆப்பிரிக்காவில் வடிவேலு', யுவராஜோட 'தெனாலிராமன்', அப்புறம், 25 கேரக்டருல 3-டில பாவாவோட 'உலகம்'. எழுதிக்குங்க... வடிவேலு திரும்பி வந்துட்டான்யா... வந்துட்டான்!'', என்று பதிலளித்துள்ளார். வடிவேலு ரசிகர்களுக்கு உண்மையிலேயே நல்ல செய்திதான்!


விஜய் தனது கெரியரில் எத்தனையோ முடிவு எடுத்துள்ளார். ஆனால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எடுத்த ஒரு முடிவை நினைத்து இன்றும் வருத்தப்படுகிறார்.


 இயக்குனர் தரணி தூள் படத்தின் ஸ்க்ரிப்ட்டை எடுத்துக் கொண்டு முதலில் விஜயிடம் தான் சென்றுள்ளார். கதையைக் கேட்ட விஜய் இதெல்லாம் ஒத்து வராது என்று தீர்மானித்து தரணியிடம் ஒரு சாரி சொல்லி அனுப்பி வைத்துவிட்டார். உண்மையில் அது தவறான முடிவு என்று விஜய் தற்போது உணர்ந்திருக்கிறார்.

தூள் படம் கிடைக்காத இழப்பை அடுத்த படத்தில் நிவர்த்தி செய்வார்களா இருவரும்.. பொருத்திருந்து பார்ப்போம்.

09 September, 2011

தமிழ் உலகம் வடிவேலுவை தவிர்ப்பது நியாயம்தானா...? வைகைபுயலின் அடுத்த நம்பிக்கை ரஜினி...!


என்ராசாவின் மனசுல படத்தில் சாதாரண ஒரு கிராமத்துப் பையன்போல் எலும்பும் தோலுமாய் கருப்பு நிறத்தில் ஏதோ ஒரு துணைநடிகர்போன்று காட்சிஅளித்து... சினிமாவுக்கு வேண்டிய எந்த தகுதியும் இல்லாமல் திரையுலகில் நுழைந்து தன்னுடைய இயல்பான நகைச்சுவையாலும், தன்னுடைய நடிப்பாற்றலாலும் தன்னுடைய உடல் அசைவுகளாலும் இந்த தமிழினத்தையே சிரிக்க வைத்தவர் வைகைப்புயல் வடிவேலு. 

உதைத்து... உதைத்து.... (கவுண்டர்மணி-செந்தில்) நகைச்சுவை செய்துக்கொண்டிருந்த காலத்தில் உதைவாங்கி இவர் செய்த நகைச்சுவைகள் மக்கள் மனதில் பசையென ஒட்டிக்கொண்டது.

2000-ங்களுக்கு பிறகு தனக்கென தனிபாணியை வைத்துக் கொண்டு 10 ஆண்டிகளில் நகைச்சுவையின் உச்சத்திற்க்கு சென்றுவிட்டார். படத்திற்க்கு படம் வித்தியாசமான உருவம், தலைமுடி, மீசை, நடை, உடை, பாவனைகள் மாற்றி 6 வயது குழந்தை முதல் 60 வயது பெரியவர் வரை அத்தனைப்பேரையும் சிரிக்க வைத்தவர் நமது வடிவேலு.

மதுரையில் புறப்பட்டு சென்னையில் மையம் கொண்ட இந்த வைகை புயல் தற்ப்போது என்ன செய்வதென்று தெரியாமல் புயலுக்குபின் தோன்றும் ஒரு அமைதியில் இருக்கிறது. 

விஜயகாந்த்துக்கும் வடிவேலுக்கும் வண்டிநிறுத்துவதில் ஏற்ப்பட்ட மனஸ்தாபம், மற்றும் சிங்கமுத்துவிடம் நில வாங்கி ஏமாந்த போது உதவாத கேப்டன் மீது ஏற்ப்பட்டு வருத்தமும், கேப்டன் பற்றி விமர்சிப்பதா என்று தேமுதிக தொண்டர்கள் வடிவேலுமீது ஏற்படுத்திய சில கசப்பான சம்பவங்கள் மட்டுமே இவரை விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட வைத்தது.

ஒரு அரசியல் பிரச்சாரம் அதுவும் தன்னை அவமானப்படுத்தியர் மீது தான் கொண்டுள்ள கோவத்தை தீர்த்துக் கொள்ள பயன்படுத்திக்கொண்டார். அரசியலில் நடந்த அந்த கசப்பான நிகழ்வுகளை மக்களே மறந்த நிலையில் தற்போதைக்கு எந்த பட தயாரிப்பாளர்களும் வடிவேலுவை பயன்படுத்தாதது மிகவும் தவறான வழிமுறையாகும் மற்றும் வருத்தப்படக்கூடிய விஷயமாகும்.

இதே விஜயகாந்த் கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுடன் மோதிக் கொண்டார். அவர் குடித்துவிட்டு வருகிறார் என்று ஜெ சொல்ல ஆமாம் எனக்கு அவர்தான் ஊற்றிக் கொடுத்தார் என்று கேப்டன் சொன்னார் அதையெல்லாம் மறந்துவிட்டு இன்று ஒரே கூட்டணியில் இருக்கிறார்கள். அதை மறக்கும்போது இதெல்லாம் சாதாரண விஷயம்தான்.

விஜயகாந்த், விஜய், சரத்குமார், கார்த்திக், விஜய ராஜேந்திரன், குஷ்பூ, ராதிகா, இன்னும் என்னற்ற நட்சத்திரங்கள் அரசியலில் ஈடுப்பட்டு அந்த பாதிப்பு ஏதும் இல்லாமல் தன்னுடைய கலைஉலகில் இருந்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில் வடிவேலுவை மட்டும் விலக்கி வைப்பது எந்த விதத்தில் நியாயம்.

இன்று ஆதித்யா சிரிப்‌பொளி போன்ற நகைச்சுவை சேனல்கள் அனைத்திலும் ஆக்கிரமித்துள்ளது வடிவேலுவின் நகைச்சுவைதான் அவரின் திறமைகளை தமிழகம் இ‌ழக்க தயாராகி விட்டதா..?

புல்லட் பாண்டி, செட்டப் செல்லப்பா, அலார்ட்டு ஆறுமுகம், படித்துரைப்பாண்டி, நாய் சேகர், கைப்புள்ள, 23வது புலிகேசி, ஜாக்கி, என்று படத்திற்க்கு படம் வித்தியாசமான முறையில் தன்னுடைய நகைச்சுவையை அர்பணித்து இந்த தமிழ் நெஞ்சஞ்சங்களை ஆக்கிரமித்த ஒரு நகைச்சுவையாளனுக்கு நாம் அளித்திருக்கும் தண்டனை கொஞ்சம் அதிகம்தான்...

தமிழ் திரையுலகில் மீண்டும் வடிவேலுவின் ஆதிக்கம் தொடர வேண்டும். அவருடைய நகைச்சுவையில் இந்த தமிழ் நெஞ்சங்கள் நிறைய வேண்டும் என்று என்னுடைய எண்ணத்தை இங்கு நான் பதிவு செய்கிறேன்.

தமிழ் திரைப்படங்களில் என்னற்ற படங்கள் வடிவேலுவின் நகைச்சுவைக்காகவே ஓடியிருக்கிறது. இதை தமிழ் உலகம் மறந்துவிடக்கூடாது...  ஒரு ஒப்பற்ற கலைஞனை நாம் இழக்க கூடாது. வடிவேலுவின் அடுத்த பகுதி விரைவில் தொடங்க வேண்டும் என்பதே என்னைப்போன்ற ‌நகைச்சுவை ரசிகர்களின் ஆசை....
தற்போதைக்கு ராணாவில் வடிவேலுவை பயன்படுத்திக் கொள்ளுமாறு இயக்குனர் ரவிக்குமாரிடம் ரஜினி சொல்லியிருப்பதாக கேள்வி. தமிழ் உலகமே...! தமிழ் திரைஉலகில் நல்ல வரவேற்ப்பு பெற்றிருக்கும் வடிவேலுவை இன்னும் பயன்படுத்திக் ‌கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகிறேன்.

தமிழ் திரைப்படங்களில் என்னற்ற படங்கள் வடிவேலுவின் நகைச்சுவைக்காகவே ஓடியிருக்கிறது. இதை யாரும் மறுத்துவிட முடியாது இதை தமிழ் உலகம் மறந்துவிடக்கூடாது...  ஒரு ஒப்பற்ற கலைஞனை நாம் இழக்க கூடாது. வடிவேலுவின் அடுத்த இன்னிங்ஸ் விரைவில் தொடங்க வேண்டும் என்பதே என்னைப்போன்ற ‌நகைச்சுவை ரசிகர்களின் ஆசை.... 

இதைப்பற்றி தங்களின் மேலான கருத்தையும் நான் எதிர்ப்பார்க்கிறேன்...
Related Posts Plugin for WordPress, Blogger...