கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label வறுமை. Show all posts
Showing posts with label வறுமை. Show all posts

19 January, 2015

இந்த வாழ்க்கை யாருக்கும் வேண்டாம்


 
கோயிலுக்குச் சென்று
ஏக்கத்தோடு பார்த்துவிட்டு வருகிறேன்...
கடவுளையல்ல...
 
அங்கிருந்த படையலையும்
ஆரத்திதட்டில் இருந்த 
சில்லரைகளையும்...!

*************************************

யாசகம் கேட்டவனிடம்
ஏதும் சொல்லாமல்
அமைதியாய் இருந்துவிட்டு...

தனிமையில் 
புலப்பிக்கொண்டிருக்கிறேன்
என் இயலாமையோடு...!
*************************************

 
 தென்றல் வருடியது...
பட்டாம்பூச்சிகள் 
தொட்டுசென்றது...
கூடவே குயில்களின் கானம்..

ஆனால் தீரவில்லை
பசி....!

*************************************
 
 
ஒவ்வொரு வேளையும்
ஒரு கடவுளின் அவதாரம்
என் வழிப்பாட்டில்....

பசியை மறைக்க
விரதங்களென்று...!
 
*************************************
 
#‎வறுமை_வரிகள்‬

02 December, 2013

இனிமேல் யாரும் இப்படி சொல்லாதீர்கள்..!

 
 

எங்களை இல்லாதவர்கள் 
என்று சொல்லாதீர்கள்...
எப்போதும் குறையாத வறுமையை
வைத்துக்கொண்டிருக்கிறோம் நாங்கள்...!

எங்களை இயலாதவர்கள்
என்று சொல்லாதீர்கள்....
அடுத்தவருக்கு தெரியாமல்
தனித்து அழமுடியும் எங்களால்..!

எங்களை வீரமற்றவர்கள்
என்று சொல்லாதீர்கள்...
பசியை எதிர்த்து போராடும்
தைரியம் இருக்கிறது எங்களிடம்..! 

எங்களை திக்கற்றவர்கள்
என்று சொல்லாதீர்கள்....
எட்டுத்திக்கும் சூழ்ந்துக்கொண்டிருப்பது
எங்கள் வறுமை ஜாதிதான்..!

எங்களை பாதுகாப்பில்லாதவர்கள்
என்று சொல்லாதீர்கள்...
எப்போதும் எங்களுக்கு சூன்யமாய்
குடைபிடித்துக்கொண்டிருக்கிறது வறுமை கோடு...
 
 

26 November, 2013

என்னச் சொல்லி தேற்றிக்கொள்வது...!



வேலை தேடி அலுத்தபின்
பேருந்துக்காக காத்திருக்கிறேன்
ஒரு பேருந்து நிறுத்தத்தில்...

அய்யா கொய்யா வேண்டுமா
என்று எதுகையோடு கேட்டவனிடம்
நான் சாப்பிடுவதில்லை என்று மறுத்தேன்...!


மதுர மல்லி.. மதுர மல்லி...
என்று கேட்டுவந்த சிறுமியிடம்
தலையாட்டி  வேண்டாம் என்றேன்..!


தம்பி...  டவுன் பஸ் 57 போய்விட்டதா 

என்று கேட்ட பெரியவருக்கு
இன்னும் இல்லை என்று ஆற்றுப்படுத்தினேன்...!


 ஐயா... சாமி...  என்று
பிச்சைக்காரன் கை நீட்ட
பக்கத்தில் இருந்தவன்
தர்மம்  செய்தான்...

இல்லையென்று 
தலையாட்டவுமில்லை...
எடுத்துக்கொடுக்க
கையில் காசுகளும் இல்லை...


செய்தித்தாளில் ஆழ்ந்தவன்  போல்
குனிந்த தலை நிமிராது இருந்தேன்
என்ன சொல்லி தேற்ற
என் இயலாமையை...!
வாசித்தமைக்கு நன்றி

13 August, 2013

இதுபோன்ற சூழ்நிலை உங்களுக்கு வந்திருக்கிறதா?




நண்பரோடு பேசிக்கொண்டே நடக்கையில்
எதிர்படுகிறது ஒரு தேனீர் கடை...!

தேநீர் அருந்தும் நோக்கோடு
பார்த்துக்கொள்கிறோம்
ஒருவரை ஒருவர்...!

உண்மையில் அப்போது
என் பையில் பணமில்லை...

நண்பரிடம் சொல்லி பிரிகிறேன்
எனக்கு தேநீர் குடிக்கும் பழக்கம்
இல்லையென்று...!

எனக்கும் பழக்கும் இல்லை என்று
பிரிகிறார் நண்பர்...

ஒருவேளை அவரிடமும்
இதே நிலையோ...!

எப்போதும்...
பணம் இல்லாத வாழ்க்கை
சங்கடத்துடனே நகர்கிறது...!

09 July, 2013

அன்புள்ள காலனுக்கு...! ஒரு அவசரக் கடிதம்...!

அன்புள்ள காலனே...!
கணக்குகள் பிறகு இருக்கட்டும்
தற்போதைக்கு
என் காற்றைமட்டும் வாங்கிக்கொள்...!

வானம்பாடியாய் வாழ்ந்துகிடக்கிறேன்
ஆனால் பல்லவிகள் மட்டும்
இங்கே பயணப்படமறுக்கிறது...!

நதிப்போல் நாணிக்கிடக்கிறேன்
ஆனால் வளைந்துபோக
வழிகள் மட்டும் இல்லை...!

விறகு மரமாய்
இன்னும் எத்தனைக்காலம்
வீற்றுக்கிடப்பது..?

காளனே...! பசுமைக்காக
இனியும் காத்திருந்ததுபோதும்
வறுமைச்சூரியனால் எரிந்துப்போகும் முன்
உன்னோடு சேர்த்துக்கொள்...!

இடுகாடுகளிலாவது எனக்கு இடம்கொடு
அங்காவது நான்
இடர்பாடில்லாமல் இருந்துவிட்டுப்போகிறேன்...

வாழ்க்கைச்சக்கரம் எனக்கு மட்டும் ஏன்
வறுமை திசை நோக்கியே விரைகிறது...?

ஒவ்வொறு நொடியிலும்
விடியல் இருக்கிறதாமே - அதில்
ஒரு நொடிக்கூடவா எனக்கு சொந்தமில்லை

தோகைகளை எல்லாம் பரிகொடுத்துவிட்டு
பரிதவிக்கும் கானகத்து மயில் நான்...
இருந்த மேகங்கலெல்லாம் இறங்கி‌போனப்பின்
வருந்திக்கொண்டிருக்கும் வானம் நான்..

பூமியில் விழுந்துவிட்டேன்
முளைப்பதற்காக
ஆனால் ஈரப்பதத்தை எதிர்பார்த்து
சுருங்கிப்போகிறது என்சுயநினைவு...!


தற்போது
சோலைகள் பூக்காத என் நந்தவனம்
நறுமணத்தை எதிர்பார்த்து...
தூரல்கள் பார்க்காத என் வயற்காடுகள்
பசுமையை எதிர்பார்த்து..!


பற்பல எதிர்பார்ப்புகளோடு
என்னுடைய விழிகளின் ரசம்
வியர்த்ததுதான் மிச்சம்...!

இதோ உன் புவியீர்ப்பு
திசைநோக்கி புறப்பட்டாயிற்று என் ஜீவன்...
உன் பா‌சலையில் விழுவதற்காக
காத்துக்கொண்டிருக்கிறது என்காலம்...!

அன்புள்ள காலனே ..!
கணக்குள் பிறகு இருக்கட்டும்
தற்போதைக்கு
என் காற்றை(உயிரை) மட்டும் வாங்கிக்கொள்...!



வறுமையின் உச்சத்தில் இருக்கும்
ஒரு சாமானியனின் மனநிலையில் இருந்து...!


(“என்பேர் பிரம்மன்“ என்ற என்னுடைய கவிதை நூலிலிருந்து..)
Related Posts Plugin for WordPress, Blogger...