கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

18 December, 2010

தர்மச் சக்கரம் (அசோக சக்கரம்)


அசோக சக்கரம்

     அசோகச் சக்கரம் அசோகரின் பல சிற்பங்களில் காணப்படும் ஓர் 24 கோல்களைக் கொண்ட சக்கர வடிவ சின்னமாகும். இது பௌத்தர்களின் எட்டு கோல்களைக் கொண்ட தர்ம சக்கரத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அசோகர் பயன்படுத்தியமையால் இது அசோக சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற சாரநாத்தில் உள்ள சிங்க தலைகள் பதித்த அசோகத்தூணில் உள்ள இந்தச் சக்கரம் இந்திய தேசியக் கொடியில் மையப்பகுதியில் கடற்படை நீலத்தில் இடம் பெற்றுள்ளது. அசோகத்தூணில் உள்ள சிங்கத்தலைகள் இந்திய அரசு|இந்தியக் குடியரசின் இலச்சினையாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய சின்னம்

 நாட்டின் தேசிய சின்னம் எதுவென்று உங்களுக்குத் தெரியும். முத்திரைகள், பணத்தாள், நாணயம் போன்ற எல்லாவற்றிலும் அச்சின்னம் இருக்கிறது. கவிழ்ந்த நிலையில் உள்ள ஒரு தாமரை மலர். அதன் மேல் நான்கு சக்கரங்களை பக்கவாட்டில் கொண்ட முரசு போன்ற அமைப்பு. அந்தச் சக்கரங்கள் தர்ம சக்கரங்கள் எனப்படுகின்றன. அவற்றில் 24 ஆரங்கள் இருக்கின்றன. சக்கரங்களுக்கு அருகிலேயே நான்கு பக்கமும் சிங்கம், குதிரை, எருது, யானை ஆகியவற்றின் உருவங்கள் உள்ளன. முரசின் மேற்பகுதியில் நான்கு சிங்கங்கள் ஒன்றை ஒன்று பின்புறம் ஒட்டி நிற்கின்றன. இக்கலைப்படைப்பை உருவாக்கியவர் பேரரசர் அசோகர். இக்கலைப் படைப்பின் தர்மசக்கரம் தான் நமது நாட்டுக் கொடியிலும் இடம் பெற்றுள்ளது. அதை நாம் அசோகச் சக்கரம் என்றே அழைக்கிறோம். 

இந்த அசோக சக்கரத்தின் வரலாறு

அசோகர் இந்தியாவின் பெரும் பகுதியை ஆட்சி செய்த பேரரசர். இவரின் அரசு மவுரிய அரசு. இவ்வரசு சந்திரகுப்த மவுரியரால் உருவாக்கப்பட்டது. சந்திர குப்தரின் மகனான பிந்துசாரருக்குப் பிறந்தவர்தான் அசோகர். அசோகரின் காலம் கி.மு. 273 முதல் கி.மு. 232 வரை ஆகும். அசோகர் 18 வயதில் இளவரசர் பொறுப்பினை ஏற்றார். உச்சயினி என்ற மாநிலத்தின் ஆட்சியாளராக இருந்தார். அசோகருக்கு சகோதர சகோதரிகளாக நூறு பேர் இருந்தனர். அசோகர் இவர்களின் உதவியோடு அரசராக மாறினார். ஆனால் இவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு அரசரானார் என்று வரலாற்று ஆசிரியர்கள் பொய்யாக எழுதுகிறார்கள். அச்செய்தி ஆதாரம் இல்லாததாகும்.

அசோகர் கி.மு.261இல் கலிங்க நாட்டின் மீது போர் தொடுத்தார். கலிங்க நாடு இன்றைய ஒரிசா மாநிலமாகும். இப்போரில் 1,50,000 போர் வீரர்கள் இறந்தனர். இதைப்போல பல மடங்கு வீரர்கள் காயமடைந்தனர். போர்க்கள காட்சியைக் கண்ட அசோகர் மனம் வருந்தி மனமாற்றம் அடைந்தார். உயிர்களுக்கு தீங்கு செய்யாமையைக் கற்பித்த புத்த மதத்துக்கு மாறினார். இந்த மதமாற்றத்திற்கு அசோகரின் மனைவியான தேவியும் துணையாக இருந்தார். தமது மகளான சங்கமித்திரையையும், மகேந்திரனையும் அண்டை நாடுகளுக்கு பவுத்தம் பரப்ப அனுப்பினார். புத்த மதத்திற்கு மாறிய அசோகர், மிகச் சிறந்த மக்கள் அரசராகப் பணியாற்றினார். அவரின் ஆட்சியில் நடைபெற்ற சீர்த்திருத்தங்களும், பணிகளும் அன்று மக்களாட்சியை உருவாக்கின.
ஆலமரம், மாமரம் போன்ற நிழல் தரும் மரங்களை சாலையோரங்களில் நடச் செய்தார். பயணிகள் தங்கிப் போக சத்திரங்கள் கட்டப்பட்டன. குடிதண்ணீருக்காக எண்ணற்ற கிணறுகள் தோண்டப்பட்டன. யாகங்களில் விலங்குகளை பலியிடுவதையும், வேட்டையாடுவதையும் தடை செய்தார். மருத்துவமனைகள் கட்டப்பட்டன. மனிதர்களுக்காக மட்டும் அன்றி விலங்குகளுக்காகவும் மருத்துவமனைகள் திறக்கப்பட்டன. சிறந்த சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. பொது இடங்களில் மலம் கழிப்பதைத் தடை செய்து ஆணை பிறப்பித்தார். அதை மீறுகிறவர்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டது.
அவர் ஆட்சிக் காலத்தில் சிறையில் இருந்த குற்றவாளிகள் 25 முறை மனித நேயத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். வரிகளின் மூலம் கிடைக்கும் பணம் மக்கள் நலனுக்காகவே செலவு செய்யப்பட்டது. போர் செய்வது நிறுத்தப்பட்டது. சாதி, மத வெறி நடவடிக்கைகள் தடுக்கப்பட்டன.
அசோகர் தான் முதன் முதலில் கல்வெட்டுகளை மக்களுக்கு செய்திகளைச் சொல்ல பயன்படுத்திய அரசர். அவர் தன் நாட்டு மக்களின் பேசும் மொழியான பாலி மொழியைத்தான் கல்வெட்டுகளை எழுத பயன்படுத்தினார். புலனடக்கம், தூய எண்ணம், நன்றியுடைமை, அறக்கொடை புரிதல், அன்பு, தூய்மை, சத்தியம், சேவை மனப்பான்மை, ஆதரவு தருதல், பெரியோர்களை மதித்தல் ஆகிய நன்நெறிகளை அசோகர் கடைப்பிடித்தார். மக்களையும் கடைப் பிடிக்கச் செய்தார். இவ்வாறு செயல்புரிந்ததால் தான் அரசர்களில் விண்மீன் போன்றவர் என அசோகர் புகழப்படுகிறார்.

பட்டொலி வீசிப் பறக்கும் நமது மூவர்ண தேசிய கொடியில் மத்தியில் தர்மச்சக்கரம் உள்ளது. இதில் 24 ஆரம்ங்கள் உள்ளன. அந்த ஆரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொறு கோட்பாட்டை விளக்குகிறது...
 
தர்மசக்கரத்தின் கோட்பாடுகள்

1. அன்புடமை
2. அருளுடைமை
3. அறமுடைமை
4. ஆசையில்லாமை
5. அறிவுடைமை
6. அழுக்காறின்மை
7. இனிமையுடைமை
 8. இன்னா செய்யாமை
9. களவு செய்யாமை
10. ஈதல்
11. காமம் கொள்ளாமை
12. ஊரோடு ஒழுகல்
13. ஒழுக்கம் உடைமை
14. மது உண்ணாமை
15. சூது கொள்ளாமை
 16. பண்புடைமை
17. ஊக்கமுடைமை
18. பொது உடைமை
19. பொருளுடைமை
20. பிறனில் விழையாமை
21. போர் இல்லாமை
22. பொய் சொல்லாமை
23. கல்வியுடைமை
24. ஒற்றுமை

உலக ஜனநாயகத்தில் உன்னத நாடாக விளங்கிக் கொண்டிருக்கும் நம் இந்தியா தான் கொண்டிருக்கும் அத்தனைக்கும் ஆழமான விளக்கங்களும், தெளிவாக பதில்களையும் வைத்துள்ளது. இங்கு இருக்கும் காக்கை குருவிக்கு கூட வரலாறுகள் இருக்கிறது...
ஆகையால் அத்தனையையும் போற்றுவோம் தேசத்தை காப்போம்..

 ஜெய்ஹிந்த்

 

1 comment:

  1. தர்மச் சக்கரம் (அசோக சக்கரம்)
    பற்றி இதுவரை அறிந்திராத தகவல்கள் அறிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...