கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

10 December, 2010

நம்பிக்கையே வாழ்க்கை

      ஓர் ஊரின் வெளிப்புறப் பகுதியில் ஜென் துறவி ஒருவர் தன் குடிலில் இருந்தபடி பொதுமக்களுக்கு நல்லன சொல்லி வந்தாராம். அவருடைய குடிலில் வேலை பார்த்த ஒரு பெண் திடீரென்று கர்ப்பமாகி விட்டாளாம். அவளுடைய அப்பா கோபமாகி அவளை அடித்து “உன்னுடைய கர்ப்பத்துக்கு யார் காரணம்?” என்று கேட்க, அவள் அந்த ஜென் துறவி தான் காரணம் என்று கைகாட்டினாளாம்.

ஊரே திரண்டு “அடப்பாவி! நீ இவ்வளவு கேவலமானவனா? போலி சாமியாரே! இப்படி நீ செய்யலாமா?” என்று காறி உமிழ அவர் சாதாரணமாக “அப்படியா?” என்றாராம்.

ஊரே அவரை ஒதுக்கி விட்டதாம். புதிதாக ஊருக்கு வருபவர்கள் அந்தத் துறவியைப் பார்க்க வரும் போது, “என்னய்யா, உங்களைப் பற்றி ஊரில் இப்படி எல்லாம் பேசுகிறார்களே” என்று கேட்பார்களாம். அவர், சாதாரணமாக “அப்படியா?” என்பாராம்.

அந்த வேலைக்காரிக்கு தான் சொன்ன பச்சைப் பொய் உறுத்திக் கொண்டே தூங்க ஒட்டாமல் செய்ததாம். ஒருநாள் ரகசியமாக துறவியைச் சந்தித்து சந்தர்ப்பவசத்தால் தான் பொய் சொல்ல நேர்ந்ததைச் சொல்லி அழுதாளாம். அந்தத் துறவி, “அப்படியா?” என்பதற்கு மேல் ஒருவார்த்தை பேசவில்லையாம்.

நாட்கள் நகர அந்த வேலைக்காரிக்குக் குழந்தை பிறந்ததாம். குழந்தை அவளுடைய அத்தைமகன் ஜாடையில் இருக்க, ஊராருக்கு உண்மை தெரிந்ததாம். அடடா, அந்த நல்லவரை அப்படிப் பேசி விட்டோமே என்று வருந்தி அவரிடம் வந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். அவர் அதற்கும் “அப்படியா?” என்றாராம் சாதாரணமாக.

பலசமயங்களில் சத்தியம் என்பது முட்டைக்குள் இருக்கும் கரு போன்றது. அதனைப் பொறுமையுடன் அடை காத்தால் அன்றி அதற்கு உயிர் கொடுக்க முடியாது. 
         
நம் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு ஆதாரம் தேவை இல்லை; நம்பிக்கை இழந்தவர்களிடம் காட்டப்படும் ஆதாரம் மட்டும் எப்படி நம்பகமாகக் கருதப்படும்? பேசுபவரின் குரல் எவ்வளவுக்கு உயருகிறதோ அவ்வளவுக்கு கேட்பவருக்கு நம்பகத் தன்மை குறையும் என்பது பொது நீதி.

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...