தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது.
தோற்றம் :
அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகையாகும். அகத்தியில் பல வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டது. இலைகள் இரட்டை சிறகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி எனவும், சிவந்த பூவைக் கொண்டது செவ்வகத்தி எனவும் அழைக்கப்படும்.
அடங்கியுள்ள பொருட்கள் :ஈரப்பதம் _ 73 சதம், புரதச்சத்து _ 83 சதம். தாதுஉப்புக்கள் _ 3.1 சதம், நார்ச்சத்து _ 2.2 சதம், மாவுச்சத்து _ 12 சதம், கொழுப்புச்சத்து _ 1.4 சதம் என்ற அளவில் சத்துக்கள் உள்ளன. தாதுஉப்புக்களில் சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உள்ளன. வைட்டமின் _ ஏ, தயாமின், நிபோபிளேவின், நிக்கோடினிக் அமிலம், வைட்டமின் _ சி போன்றவை அடங்கியுள்ளன.
மேலும் மரப்பட்டையில் டானின், பிசின் உள்ளது.
குணங்கள் :
இதற்கு நச்சை நீக்கும் குணமுள்ளதாகையால், பொதுவாக மருந்துண்ணும் காலங்களில் இதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
எப்படிப் பயன்படுத்தலாம்?
இலையை கீரையாக நறுக்கி வதக்கி உண்ணலாம், குழம்பிலிட்டு பயன்படுத்தலாம். பூக்களையும் வறுத்து உண்ணலாம், பூக்களை கஷாயமாக்கி அருந்தலாம். இலைச்சாறை தேனில் கலந்து அருந்தலாம்.
மருத்துவப் பயன்கள்
- பூவைச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் மாறும்
- அகத்தி இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும்.
- இலைச்சாறை உறிய, தலைநீர் இறங்கும்.
- அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறோடு, இதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி தீரும்.
- இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டிவர புண் ஆறும்.
- அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவர, நாள்பட்ட வயிற்றுவலி மாறும்.
- அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும்.
- இக்கீரையை உணவில் சேர்த்து வர, மலச்சிக்கல் தீரும்.
- பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட, தலைவலி மாறும்.
- அகத்திப்பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, இதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், சளி தீரும்.
- அகத்திக்கீரை சாறு இரு துளி மூக்கில் விட தும்மல், ஜலதோஷம் தீரும்.
- அகத்திப்பூ சாறு இரு துளி மூக்கில் விட தலைநீர், ஜலதோஷம் தீரும்.
- அகத்தி மரப்பட்டை கஷாயம், காய்ச்சலின்போது உள்ளுக்குக் கொடுக்கப்படுகிறது.
- வேர்ப்பட்டையை அரைத்து வாதவலி மேல் பூசிவர வலி மாறும்.
- அகத்திக்கீரை உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும்.
- இக்கீரை பித்த நோயை நீக்கும்.
- இக்கீரை, உடல் சூட்டைத் தணிக்கும்.
0 comments:
Post a Comment
நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!