கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

21 November, 2010

மறைந்துப்போன பூக்காலம்

அதிசய மலராய்
பூமியிலே அரும்பு விட்டவள் அவள்!
 
அதிகாலைப் பொழுதில்
அகம் மலரும் தாமரைப் போல்
ஒவ்வொரு நாளும் அவளின் சிலிர்ப்புகள்...
 
என்
கையைப் பற்றிக்கொண்டு:
நடந்து வருகையில்...
அவள் கையைப் பற்றிக்கொண்டு
நடந்து செல்கையில்...
ஆயிரம் ஒத்தடங்களின் இதங்கள் காணும்
என்னை அறியாமலே என் மனது...




அரசமர ஆணி வேராய் நானிருந்தும்
அவளுக்காக ஆலமர
விழுதுகள் ‌போலவும் தாங்கி நின்றேன்...


கவிதையாய்
கை வீசி நடந்து விட்டு
அவள்
கானலாய் போனது எங்கே...?
 

சீறும் பூனையைக்கண்டு
நடுங்கும் பயத்தைப் பார்க்கவும்...!
 

புத்தகத்தின் நடுவிலே
மயில் இறகை வைத்துவிட்டு
தினம் தினம் குட்டிகளைத் தேடும்
அவளின் ‌பொறுமையை பார்க்கவும்...!
 

மழையில் நனைந்து ‌கொண்டு போகும்
பட்டாம் பூச்சியின் குளிருக்காக
இவள் சிந்திய கண்ணீரைப் பார்க்கவும்...!
 

நான்
இன்னொரு முறை
பிறந்‌தே ஆக வேண்டும்...!




அவள்
நடந்து பழகிய பாதைகளின் காலடித்தடங்கள்
இன்னும் கலையவில்லை
 

அவள் 
விடியும் முன்னே
எழுந்து முடித்து
என்னை எழுப்பி விட்டு
அதிகாலை ‌கொடுத்த முத்தங்களின் ஈரம்
இன்னும் காய்ந்தபாடில்லை
 

அவள்
அந்திப்பொழுது விளையாட்டில்
வண்ண பலூன்களில்
ஊதி வைத்த மூச்சு காற்றுகள்
இன்னும் கரைந்து முடியவில்லை...!


சுவாசங்களை இங்கே வைத்துவிட்டு
அதை தேடி
எங்கே சென்றிருக்கிறாள்..?


மழைத்துளிகள்

அழித்துவிட்டுப்போன
வண்ணக் கோலமாய்
அவள் மீண்டும் வராம‌லே ‌போவா‌ளோ...
 

ஏப்ரல் மாதத்து சாயம்
இன்று என் மனதில்
அவளின் இழப்பினால்





நான் முட்டாள்தான்
இனி காலம் முழுவதும்...
 

இனி வரும் காலங்களில்
அவளின் நினைவுகள்
சாலை ஓரத்து
மைல்கல்லைப் போல்
என்னை விடாமல் தொடரும்...
 

கொலுசுகளின் சத்தங்களை
இனி கேட்கத் தொடங்கு‌வேன்
அவள் புன்னகைகள்
மறைந்து போனதால்...
 

பூக்களின் ‌மென்மையை
இனி உணரத் தொடங்குவேன்
அவளின் ஸ்பரிசங்கள்
கலைந்துப் போனதால்...
 

யாழ் இனிது.. குழல் இனிது என்று
‌சொல்லவேண்டியிருக்கும்
அவளின் மழலை அமுது
மறைநதுப் போனதால்...
 

சொர்கம் சுகம் அடையத்தானோ
விருந்தினராய் உன்னை அழைத்து ‌கொண்டது...
 

நீ சொர்கம் பறந்து
சென்றதா‌லே
நரகம் இங்கு வந்து விட்டது...
 

பூவே உன்னை கருகச் செய்த
அந்த சூரியன் யார்?
 

மலரே உன்னை
உதிர வைத்த
அந்த தென்றல் யார்?
 

ஓடிவந்த வசந்தம்
உன்னைக் காணாமலே
ஒழிந்து விட்டது...
 

ஒண்ட வந்த ‌தெய்வம்
உன்னைக் காணாமலே
ஓய்ந்து விட்டது...
 

பூக்காலம்
போனப்பின்
இனி யார்க்காலமோ?
 

பெற்றெடுக்கும் வேளையில்
நீ அழுதுக்கொண்டு பிறந்தாய்...
நாங்கள் சிரித்துக் கொண்டு இருந்தோம்...


இழந்து விட்ட வேளையில்
புகைப்படமாய் - நீ
சிரித்துக் கொண்டிருக்கிறாய்...
நாங்கள் அழுதுக் கொண்டிருக்கிறோம்...




மலராய்
மலர்ந்து வந்த மகளை
பறிகொடுத்த துயரத்தை
 

தேடி வந்த தே‌வதையை
தொலைத்துவிட்ட சோகத்தை

இந்த தந்தையின்
கற்பனையில் இன்னும்
அடிக்கிக் கொண்டுப் போவேன்
 

இதயத்தை துக்கங்கள் 
அ‌டைக்காமல் இருந்தால்...
 

விழிகளை கண்ணீர்
நனைக்காமல் இருந்தால்....




1 comment:

  1. புத்தகத்தின் நடுவிலே
    மயில் இறகை வைத்துவிட்டு
    தினம் தினம் குட்டிகளைத் தேடும்
    அவளின் ‌பொறுமையை பார்க்கவும்...//
    Feel it.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...