கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

16 September, 2013

இசையால் உலகை வென்றவர்....!


இன்று (16-09-2013) இசையால் இந்த உலகையே ஆண்ட எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா.. அவர்களின் 97-வது பிறந்த தினம்...

திரை உலகிலும், பின்னர் இசை உலகிலும் புகழ் பெற்று விளங்கிய எம்.எஸ்.சுப்புலட்சுமி 100 நாடுகளுக்கு மேல் அங்கம் வகிக்கும் ஐ.நா.சபையில் கச்சேரி நடத்தினார். ஐ.நா.சபையில் இசை நிகழ்ச்சி நடத்திய ஒரே தமிழ்ப்பாடகி எம்.எஸ்.தான். "சாவித்திரி" படப்பிடிப்புக்காக கல்கத்தா செல்லும் வழியில், நாகபுரியில் காந்தியடிகளை சுப்புலட்சுமியும், சதாசிவமும் சந்தித்து ஆசி பெற்றனர்.

அன்று பிரார்த்தனைக் கூட்டத்தில் சுப்புலட்சுமியைப் பாடும் படி கேட்டுக்கொண்டார்கள். எம்.எஸ். சில பக்திப் பாடல்களை பாடினார். பாடல்களைக் கேட்டு மகாத்மா நெகிழ்ந்து போனார். பிற்காலத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் புகழ் நாடெங்கும் பரவியது.

காந்தியடிகளின் மனைவி கஸ்தூரிபாய் மறைந்தபின், அவர் நினைவாக நிதி திரட்டப்பட்டது. அதற்கு எம்.எஸ். சில இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவித்து காந்தியடிகள் தமிழில் கையெழுத்திட்டு, தன் கைப்பட எழுதிய கடிதத்தை இன்றும் போற்றிப் பாது காத்து வருகிறார், எம்.எஸ். நாடு முழுவதும் எம்.எஸ். புகழ் பரவிக்கொண்டு இருந்த நேரத்தில், மக்களிடம் இறை உணர்வை வளர்க்கக்கூடிய இசைக்கு முக்கியத்துவம் இருக்கக் கூடிய படம் ஒன்றை தயாரிக்க டி.சதாசிவம் முடிவு செய்தார்.


"மீரா" கதையை படமாக்க முடிவு செய்யப்பட்டது. மீராவாக சுப்புலட்சுமியும், கணவர் ராணாவாக நாகையாவும் நடித்தனர். மீரா படப்பிடிப்பு 1944-ல் தொடங்கியது. மீரா பிறந்து வளர்ந்த ராஜஸ்தானத் திலேயே படப்பிடிப்பு நடந்தது. எல்லீஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார். "மீரா" படத்தில் பாடல்கள் அற்புதமாக அமைந்தன. "கல்கி" எழுதிய "காற்றினிலே வரும் கீதம்" என்ற பாடல், காலத்தைக் கடந்து இன்னும் வாழ்கிறது.

படம் நன்றாக இருந்தபோதிலும், "சகுந்தலை"யைப் போலவோ, "சாவித்திரி" போலவோ அது மெகா ஹிட் திரைப்படமாக அமையவில்லை. அதற்குக் காரணம் மீராவின் கதைதான். சிறுவயதிலேயே கண்ணனை கணவனாக மனதில் வரித்துக்கொண்டவர் மீரா. கல்யாணம் ஆன பிறகும் கணவனை ஏற்க மறுக்கிறாள்.


கண்ணனையே நினைத்துப் பாடிக்கொண்டு ஊர், ஊராகச் செல்கிறாள். கடைசியில், அவள் உயிர் கண்ணனுடன் ஐக்கியமாகிறது. வடநாட்டில் பிரபலமான இக்கதை, தமிழ் ரசிகர்களின் மனதை ஈர்க்கவில்லை. டி.சதாசிவம் இதைப் புரிந்து கொண்டார்.

"மீரா"வை இந்தியில் எடுத்தார். மீரா இந்திப் பதிப்பு மாபெரும் வெற்றி பெற்றது. வடநாட்டில் சக்கை போடு போட்டது. இந்தப் படத்தின் விசேஷ காட்சி டெல்லியில் நடந்தபோது, பிரதமர் நேரு வந்திருந்தார். படத்தைப் பார்த்து மிகவும் பாராட்டினார். பின்னர் எம்.எஸ்.சின் இசை நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, "நான் சாதாரண பிரதம மந்திரி. எம்.எஸ்.சுப்புலட்சுமியோ இசை உலகின் பேரரசி. பேரரசி முன் பிரதம மந்திரி எம்மாத்திரம்?" என்று புகழாரம் சூட்டினார்.



1966_ம் ஆண்டில், அமெரிக்காவில் பல நாட்டு பிரதிநிதிகளும் கூடியிருந்த ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி நடத்தினார், எம்.எஸ். இந்த நிகழ்ச்சியில் பாடுவதற்கென்றே ஆங்கிலப் பாடல் ஒன்றை ராஜாஜி எழுதித்தந்தார். ஆங்கில இசையில் வல்லவரான ஹாண்டல் மானுவெல், அந்தப் பாடலுக்கு இசை அமைத்துக் கொடுத்தார்.

ஐ.நா.சபையில் எம்.எஸ். நடத்திய இசை நிகழ்ச்சி அற்புதமாக அமைந்தது. அவர் புகழ் உலகம் முழுவதும் பரவியது. பொதுப்பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகளை நடத்திய எம்.எஸ்.சுப்புலட்சுமி, அந்த நிகழ்ச்சிகளில் வசூலான கோடிக்கணக்கான ரூபாய்களை அப்படியே அந்த பொதுப்பணிகளுக்கு வழங்கினார்.


திருப்பதி ஏழுமலையானை துதித்து எம்.எஸ். பாடிய வெங்கடேச சுப்ரபாதம், அதிகாலை நேரத்தில் இன்று பல்லாயிரக்கணக்கான வீடுகளில் ஒலிப்பதைக் கேட்கலாம். விற்பனையில் பெரும் சாதனையை நிகழ்த்தியது இந்த ஆடியோ கேசட். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் எல்லாம் திருப்பதி கோவிலுக்குச் சென்று கொண்டிருக்கிறது.

இசை மூலம் இமாலய புகழ் பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு கல்கத்தாவில் உள்ள ரவீந்திர பாரதி பல்கலைக்கழகமும், டெல்லி பல்கலைக்கழகமும் "டாக்டர்" பட்டம் வழங்கி கவுரவித்தன. ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படுகிற பிலிப்பைன்ஸ் நாடு வழங்கும் "ரமான் மக்சாய்" விருது எம்.எஸ்.சுக்கு 1974_ல் வழங்கப்பட்டது.

இந்தியாவின் மிக உயர்ந்த விருதான "பாரத ரத்னா" விருதை எம்.எஸ்.சுக்கு 1998_ல் மத்திய அரசு வழங்கி கவுரவித்தது. 1997_ல் சதாசிவம் காலமானார். வாழ்க்கையில் தாயாக, தந்தையாக, ஆசானாக, தோழனாக விளங்கிய சதா சிவத்தின் மறைவினால், சிறகொடிந்த பறவை போலானார் எம்.எஸ். அதன் பிறகு அவர் கச்சேரி செய்வதை நிறுத்தி விட்டார்.


ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா" என குழந்தைகளுக்கு இதமான பாடலை பாடினார் மகாகவி பாரதியார். அவ்வாறே ஒரு சிறுமி தன் தாயார் மேடையில் வீணை இசைக்கச்சேரி செய்து கொண்டிருந்த போது வெளியில் சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென மகளின் ஞாபகம் வரவே அவளைத் தேடி அழைத்து வருமாறு தாய் பணித்தாள்.

வியர்வை முத்துமுத்தாக அரும்ப சிறுமி மேடைக்கு ஓடி வந்தாள். தாய் வியர்வையைத் துடைத்து விட்டு "பாடு" என கண்டிப்பான குரலில் கூற, சிறுமி அற்புதமாகப் பாடினாள். மக்கள் கரகோஷம் செய்து "இவள் தாயை மிஞ்சி விடுவாள்" என்றார்கள். அது போலவே நடந்தது. சிறுமிக்கு கரகோஷத்தைப் புரிந்து கொள்ளும் வயதல்ல ஆகையால் திரும்பவும் சென்று விளையாட வேண்டும் என்ற என்ணம் தான் இருந்தது.



அந்தச் சிறுமி தான் இசையுலகம் போற்றும் இசையின் இமயம், இசையின் ராணியான எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள். மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்பதன் சுருக்கமே எம். எஸ். சுப்புலட்சுமி ஆகும். காலம் கடந்தும் இவர்களின் புகழ் வாழும்.

4 comments:

  1. அருமையாக கோர்க்கப்பட்ட தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  2. எம்.எஸ். சுப்புலட்சுமி குறித்த பல தகவல்கள் அறிந்துகொண்டேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் நினைவினைப் போற்றுவோம்

    ReplyDelete
  4. அன்பின் சௌந்தர் - நல்லதொரு பதிவு - பல அரிய தகவல்கள் கொண்ட பதிவு - எம் எஸ் சுப்புலெட்சுமி பல அரிஅய் படங்களுடன் கூடிய பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...