கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label படைப்புகள். Show all posts
Showing posts with label படைப்புகள். Show all posts

05 May, 2014

இதெல்லாம் ரொம்ப ஓவருங்க... ஆனா உண்மைங்க...


எல்லாவற்றையும் துறந்து விடு என்று ஒரு குரு சொல்லக் கேட்டு ஒரு சிஷ்யன் ஒரே ஒரு தவிர்க்க முடியாத கோவணத்துடன் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்தான்.

அந்தக் கோவணத்தை அடிக்கடி எலி கடித்து விட்டது.

ஊரார் என்ன இது? இவ்வாறு கந்தலாகக் கோவணம் கட்டியிருக்கிறாயே என்று கேட்க "எலி கடித்து விட்டது" என்று பதில் சொன்னான் அவன்.

ஊரார், "அந்த எலியிடமிருந்து பாதுகாப்பிற்காக ஒரே ஒரு பூனை வளர்க்கலாமே?" என்றார்கள்.

அவன் பூனை வளர்க்கத் தொடங்கினான். பூனைக்குப் பால் தேவையாக இருந்தது. இல்லாவிடில் அது எலியைக் கடிக்க மறுத்தது. பாலுக்காக ஊரில் பிச்சை எடுக்க ஆரம்பித்தான்.

ஊரார், "ஒரே ஒரு பசுமாடு தருகிறோம். தினம் தினம் இங்கே வராதே" என்று பசு மாட்டைத் தானமாக அளித்தார்கள்.

மாடு வந்தது. புல் தேவையாக இருந்தது. புல்லுக்காக தினம் ஊருக்குச் செல்ல ஆரம்பித்தான். இதற்காகவா இங்கு வருகிறாய், ஒரு கால் ஏக்கரா நிலம் வைத்துக்கொண்டு புல் பயிரிடேன் என்று புறம்போக்காக இருந்த நிலத்தைக் கொடுத்தார்கள்.

நிலத்துக்கு வேலி, பால் கறக்க ஒரு இடையன், அவனுக்குச் சோறு, அதற்காகக் குடும்பம். என்று குரு சிஷ்யனை வந்து பார்த்த போது அவனைச் சுற்றி ஒரு பண்ணையே செழித்திருந்தது. இதைப் பார்த்த குரு, "மனைவி, மக்கள், சுற்றம், ஆட்கள், நிலம், மாடு, மனை என்று எல்லாம் சேர்ந்து விட்டாயே எப்படி?" என வினவினார்.

"சுவாமி எல்லாம் இந்த ஒரு கோவணத்துக்காக... " என்றான் அவன்....

********************************
என்னவென்று
சொல்லி தொலைப்பது
நம் அறியாமையை ...!
********************************
 கருத்துக்சொல்ல விரும்பவில்லை...!
********************************


அந்த டாக்டர் ரொம்ப நல்லவர்போல...

எதை வச்சு சொல்றீங்க??

ஆபரேஷனுக்கு முன்னாடி நோயாளிகிட்ட உயிர் மேல ஆசை இருந்தா ஓடிப்போயிடுன்னு கடைசி வாய்ப்பு தர்றாரே....

********************************

30 November, 2013

இரண்டாம் உலகம் மகிழ்ச்சியே




மெல்லியதாய் இருந்த காற்று
இனிய தென்றலாகிறது...!

மரங்களில் பூத்த மலர்கள்
சாலைகளில் கோலம் போடுகிறது...!

சூரியனுக்கு வலப்புறத்தில் வண்ணமயமாய்
ஒரு வானவில் காட்சியளிக்கிறது...!

பட்டாம்பூச்சிகள் பறக்கும் திசையில் பார்க்கையில்
அட... நீ தான் வந்துக்கொண்டிருக்கிறாய்...!



*******************************


எல்லாம் தெரிந்தவள் போல்
மௌனித்திருக்கிறாய்...!

எதுவும் தெரியாதவள்போல்
பாவனை செய்கிறாய்...!

உனக்கு எது தெரியும் எது தெரியது
என்று புரியவைத்துவிட்டு போகிறது உன் புன்னகை...!


*******************************

என்னுடைய இரண்டாம் உலகத்தில்
நான் எடுத்து வைக்கும்
அத்தனை அடியையும்
அழுத்தமாய் பதியவைக்கிறேன்

உன் நினைவுகளை
இருக்கமாய் பற்றிக்கொண்டு....!


*******************************

மணித் துளிகள் மறந்து
நிறைய பேசுதால் வேண்டாம்...

மௌனத்தில் விழிகள் மாறி
பார்வைகள் பறிமாறவோண்டாம்...

தோள்கள் உரசி என்னருகே அமர்ந்திருக்கும்
அத்தனை நிமிடங்களும்தான் எனக்கு நிம்மதி...!
 

 *******************************

என் நினைவுகளை
எங்கே சென்று நிறுத்தினாலும்

அது தண்ணீரை தேடி பயணிக்கும்
வேர்களைப்போல ...

நித்தம் நித்தம் மறவாது
உன் திசையை தேடியே பயணிக்கிறது
 
 


21 November, 2013

மழையில் கூடவா காதல் இப்படி செய்யும்...!





விலகி நடந்த உன்னை
நெருங்க வைத்தது...

சிலையாய் நடந்த உன்னை
சிலிர்க்க வைத்தது....

வேகமாய் நடந்த உன்னை
நளினப்பட வைத்தது....

ரம்மியமாய் நடந்த உன்னை
ரசிக்க வைத்தது...

 ஆகையால் மழை நல்லது...!


நீ நட்டு வைத்த பூச்செடி
என்னை சபித்துக்கொண்டிருக்கிறது...

மழையில் நனைகிறதே என்று
குடைபிடித்ததற்கு....!

ஒருவேளை
உன்னை எனக்கு பிடித்தது போல்
செடிகளுக்கு மழை பிடிக்குமோ..?

அழிக்கவும் அழகாக்கவும்
செய்கிறது மழை...!

நீ போட்ட கோலத்தை
அழித்துவிடுகிறது...

நனையும் உன் கோலத்தை
அழகாக்குகிறது...

எதை அழிக்க வேண்டும்
எதை அழகாக்க வேண்டும்
என்று தெரிந்த மழையை...

ரசித்துக்கொண்டிருக்கிறேன்
உன்னோடு சேர்ந்து..!

 
#மழைக்_கால_கவிதைகள்

14 November, 2013

நிறங்களுக்கு முதலிடமா..? இது முற்றிலும் உண்மை..!



வண்ணமயமான பலூன்களை விற்றுப்பிழைக்கும் ஒருவன் புதியதாக வேறு ஒரு ஊருக்கு வந்தான்.

பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் பலூன்களுக்கு வரவேற்பு இல்லாமல் இருந்தது. 

அவன் புதியதாக ஒரு விளம்பரம் செய்ய விரும்பினான். அதன்படி வண்ண வண்ண பலூன்களை ஹீலியம் வாயுவால் நிரப்பி மக்கள் கூட்டமாக இருக்கக்கூடிய இடங்களில் பறக்கவிடுவான். 

வானில் பறக்கின்ற விந்தையான பலூன்களை 'எனக்கு வேண்டும் ..உனக்கு வேண்டும்' என சிறார்களும் - ஏன் வயதானவர்களும்கூட வாங்கி வாங்கி மகிழ்ந்தனர்.

எப்போதெல்லாம் வியாபாரம் சோர்வடைகிறதோ அப்போதெல்லாம் 'பறக்கும் பலூன்கள்' மூலம் புதிய உற்சாகமான விளம்பரத்தைக்கொண்டு தனது வாழ்க்கையை ஓட்டி வந்தான். 
அவன் தனது வியாபாரத்தைச் செவ்வனே செய்துவந்தான்.

சில நாட்களுக்குப்பிறகு ஒரு கருப்பினச்சிறுமி, அவனிடம் கேட்டாள். "அண்ணே. அண்ணே..எல்லா வண்ணங்களிலும் பலூன்களைப் பறக்கவிடுரீங்க.. ஆனால் கருப்புக்கலர் பலூன் பறந்து நான் பார்க்கவே இல்லை. கருப்புவண்ணப் பலூன் பறக்குமா? பறக்காதா? என் சந்தேகத்துக்கு விடையளியுங்கள்" என்றாள்.

"அன்புக்குழந்தையே!.. கருப்பு நிறப்பலூன் என்றாலும் - அதனுள்ளே - ஹீலியம் வாயுவை அடைத்துப் பறக்கவிட்டால் பறந்தே தீரும். பலூன் வானில் பறக்கக்காரணம் அதன் வண்ணமன்று.. அதனுள்ளே அடைத்து வைக்கப்படும் வாயுவால்தான் அது பறக்கிறது. 

கருப்பாக இருந்தாலும் சிவப்பாக இருந்தாலும், என்ன வண்ணமாக இருந்தாலும் அது பறந்தே தீரும். இது சத்தியம்" என்றான்.

நீதி : உன் நிறம் கருப்பாக இருப்பதை ஒரு பொருட்டாக எண்ணாதே!.. உனக்குள் இருக்கும் எண்ணங்களை உலகறியச் செய். சரித்திரத்தில் உன் பெயர் நிச்சயம்.

குழந்தைகளின் மனதில் பிரிவினைகளை விதைப்பதை தவிர்த்து இந்த உலகில் தன்னம்பிக்கையோடும் வாழும் வழிமுறைகளை கற்றுக்கொடுப்போம்...  "Sharavin SirukathaigaL" என்ற நூலிலிருந்து



*********************************

இந்த குழந்தைகள் தினத்தில் நாமும் 
குழந்தைகளோடு குழந்தைகளாவோம்..

குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்...!

11 November, 2013

குழந்தைகளே ஜாக்கிரதை...


 

கோடி அணுக்களிலிருந்து பிரிந்து
ஒற்றை அணுவாய் உயிர்வளர்த்த
கர்ப்பத்திலிருந்து தப்பியதற்கு ஆச்சரியமா..?

ஆனந்தமா...!
பத்துமாதம் ஓய்வெடுத்த
கர்ப்பத் தடையை உடைத்ததற்கு...

இந்த பூமியில் மையம் கொள்ள வந்த
புத்தம்புது இளம் புயலே
ஒரு சேதி தெரியுமா உனக்கு..?

மூடிக்கிடந்த ஓட்டை உடைத்து
புதிதாய் உயிர்பித்து விட்டாய்
பசியோடு இருக்கின்றன பருத்துகள்...

உனக்கு வித்தியாசமான
தூண்டில்கள் தொட்டில்களாக இங்கு
அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றன

உனக்கொரு தாலாட்டு 
சினிமா பாட்டில் மட்டுமே...
 

ஒவ்வொரு கனமும் உன் நம்பிக்கை
கூண்டில் நிறுத்தப்படும் கலங்காதே...

புகழாரங்கள் கேட்டு 
வீண் கனவு வளர்க்காதே...
 

மீனுக்காக வலை விரித்து
கானலில் காத்திருக்காதே...

வளரும்போதே வளர்க்கப்பார்
 வாழ்க்கைக்கான தன்னம்பிக்கையை...!


தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!

18 September, 2013

என் பேர் பிரம்மன்..!


சூரியனின் வெப்பத்தில் தேகம் சுருங்கும்..
நிலவின் வெளிச்சத்தில் தாகம் பெருகும்..
விண்மீன் ஆரவாரத்தில் கைகோர்பேன்..
மழையின் சில்லீரத்தில் மெய்நனைப்பேன்..

பனியின் துளிப்பட்டு 
என் பாதம் நடுங்கும்...!
வானவில் நிறம் பார்த்து 
என் ஆத்மா அடங்கும்...!

வைகரை மேகங்களை 
என் வானம் சுமக்கும்...!
சூரியக்கதிர் சொல்லெடுத்து 
என் கவிதை மணக்கும்...!

நான் கவிஞன்

அதை
வானம் முன்மொழிகிறது...
மேகம் வழி மொழிகிறது...
செம்பருத்திச் சிகப்பிலே சிவந்துப்போவேன்...
செவ்வந்தி முகப்பிலே செம்மையாவேன்...
புல்வெளிக் காட்டில் முகம்புதைப்பேன்...
வயல்வெளி ‌மேட்டில் அகம் குளிர்வேன்...

வண்ணத்துப்பூச்சி வண்ணம்கண்டு
என் ஞானம் மறப்பேன்...!
சிட்டுக்குருவி சிறகில் ஏறி
என் வானம் அளப்பேன்...!

மல்லிகை இதழ் விரிக்கும்
நான் குடை விரிப்பேன்...!
மாலை கருக்கையில்
என் சோகம் எரிப்பேன்...!

நான் கவிஞன்

அதை..
 மலர்கள் முன் மொழிகிறது...
மொட்டுக்கள் வழி மொழிகிறது...


 

வானம்பாடி பறவைகளோடு ஓடிப்போவேன்....
கானம்பாடி குயில்களோடு கூடிப்போவேன்...
காக்கைக் கருப்புகளோடு கரைந்துப்போவேன்...
கானகத்து மயிலோடு காலம் கழிப்பேன்...

மைனாக்களின் சிணுங்கள்கண்டு
என் சினங்கள் ஆறும்...!
புறாக்களின் முனகல் கேட்டு
என் ரணங்கள் மாறும்...!

பஞ்சவர்ணப் பறவைக்கு
நான் பாடம் நடத்துவேன்...!
நெருப்புக்கோழி வெப்பம் தணிய
நான் பாட்டுச் சொல்லுவேன்...!

நான் கவிஞன்

அதை
மீன்கொத்தி முன்மொழிகிறது...
மரம்கொத்தி வழிமொழிகிறது...




ஆற்றில் நீந்தியாடி அயிரைப் பிடிப்பேன்...
குளத்தில் குதித்துஆடி தாமரைப்பறிப்பேன்...
ஏரியில் இறங்கிப்போய் அல்லி முகர்வேன்...
கிணற்று தவளையொன்றுக்கு சுதந்திரம் கொடுப்பேன்...

ஓடைகள்தான் காவியமென்று
என் கற்பனை மூழ்கும்...!
தண்ணீர்தான் உலகமென்று
என் ஜீவன் மிதக்கும்...!

அலைகளோடு மோதி
நான் சக்தி பெருவேன்...!
மழைகளோடு வீழ்ந்து
நான் முக்தி பெருவேன்...!

நான் கவிஞன்..

அதை
தூறல் முன்மொழிகிறது...
சாரல் வ‌ழிமொழிகிறது...

வீசுகின்றபுயலில் கவிதைக்கு காற்றெடுப்பேன்...
பொங்கும் எரிமலையில் கவிதைக்கு கனலெடுப்பேன்...
பனித்துளியின் குளிரில் கவிதைக்கு சுகமெடுப்பேன்...
விரிந்திருக்கும் அண்டத்தில் கவிதைக்கு கருவெடுப்பேன்..

தீயாய் சுட்டுவிடும்
என் கவிதை மருந்தாகவும் இருக்கும்...!
நோயாய் தொட்டுவிடும்
என் கவிதை தாயாகவும் இருக்கும்...!

தனிமை எனக்கில்லை
நான் கவிதைக் கூட்டத்தில்...!
மரணம் எனக்கில்லை
நான் கவிதை முற்றத்தில்...!

நான் கவிஞன்...
இல்லை இல்லை நான் பிரம்மன்..

ஏன்னென்றால்
என்னாலும் உயிர்கொடுக்கமுடியும்
கற்பனைக்கும்.. கவிதைக்கும்..
நாளை காலத்திற்கும்...
ஆம்.. நான் கவிஞன்... 

வாசித்த அனைவருக்கும் என் நன்றிகள் பல.. பல...!

(என்னுடைய... “என் பேர் பிரம்மன்” என்ற கவிதை நூலிலிருந்து...!)

14 September, 2013

யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..!



ஒரு நள்ளிரவு..!

ஜென் குரு தன் அறையில் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்.

திடீரென அந்த அறைக் கதவைத்தள்ளிக்கொண்டு திருடன் உள்ளே நுழைந்தான். அவன் கையில் பளபளக்கும் கத்தி இருந்தது. அவன் அதை நீட்டிக்கொண்டே ஜென் குருவை நெருங்கினான்.

நிமிர்ந்து அவனை அமைதி தவழப்பார்த்த ஜென் குரு ”உனக்கு என்ன வேண்டும்? என் உயிரா? அல்லது பணமா?” என்று கேட்டார்.

அதைக்கேட்ட திருடன் திகைத்தான்.

அவரை மிரட்டிப் பணம் பறிக்கலாம் என்பதற்கு வாய்ப்பே இல்லாமல் ‌‌போய்விட்டதை எண்ணி அவன் சற்று வருந்தினான்.

”சரி போகட்டும்! எனக்குப்பணம்தான் வேண்டும்...!” என்றான் திருடன்.

ஜென் குரு சிறிது கூட சஞ்சலப்படாமல் தன்னிடமிருந்த பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டுத் தொடர்ந்து எழுதத்தொடங்கினார்.

அமைதியான அவரது செயல் திருடனின் மனதை என்னவோ செய்தது.

ஆனாலும் அவன் பணத்துடன் வெளியே போவதையே விரும்பினான்.

அவன் அறையின் வாயிலை நோக்கி நடந்தபோது, ”தம்பி..! நீ வெளியே போகும்போது அறைக் கதவை சாத்திவிட்டுப் போ..!” என்றார் ஜென் குரு.

திருடன் ஒரு கணம் நின்று திரும்பி அவரைப் பார்ததான். பிறகு அறைக்கதவைச் சாத்திவிட்டு வெளியேறினான்.

மிக விரைவிவேயே பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற முதுமொழிப்படி அவன் காவலர்களிடம் பிடிப்பட்டான்.

அவன் காவல் அதிகாரிகளிடம், நீண்ட நாள் தன் மனதை அரித்துக்கொண்டிருந்த ஒரு விஷயத்தைச் சொல்லத் தொடங்கினார்.

”ஐயா...! திருடுவதென் தொழில். கத்தியைப் பார்த்த உடனேயே பலரும் பயத்தால் அலறிப்பார்த்திருக்கிறேன். பலர் மிரட்டலுக்குப் பின்னே பணிந்திருக்கிறார்கள்.

”ஆனால் எதற்குமே பயப்படாத ஒரு குருவை என் வாழ்நாளில் ஒரு முறை பார்த்தேன். அந்த பயங்கரமான சூழ்நிலையிலும் அவர் எப்படி அமைதியைக் கடைப்பிடித்தார். எப்படி பயப்படாமல் இருந்தார் என்பதை இப்போதும் ஆச்சரியத்துடன் எண்ணிப்பார்க்கிறேன். “உயிர் வேண்டுமா? பணம் வேண்டுமா..?” என்று அவர் அன்று கேட்டது என் இதயத்தையே அறுத்துக் கூறு போட்டுவிட்டது.”

”நிச்சயம் அவர் ஒரு மகானாகத்தான் இருக்க வேண்டும். நீங்கள் என் உடலுக்குத்தான் தண்டனை தரமுடியும். ஆனால் அவர் என் உள்ளத்துக்கே தண்டனை கொடுத்துவிட்டார் என்னை மனிதனாக்கி விட்டார்.”

”நான் விடுதலை பெற்றதும், அவரிடம்தான் சரணாகதி அடைந்து, வாழ்நாள் முழுவதும் அவருக்குச் வேவை செய்யப்போகிறேன்!” என்றான்.

ஒரு சந்தர்ப்பத்தில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஜென் குரு மிகவும் மகிந்தாராம்.

அச்சத்தில் இருந்தால்தான் எல்லா தவறுகளும், எல்லா துன்பங்களும் வந்துச்சேர்கிறது. அச்சத்தை தவிர்த்து விடுவோம் பிறகு யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும்.

27 August, 2013

இந்த மாணவர்கள் எம்புட்டு தயாராயிருக்காங்க பாருங்க...!






குறும்பு செய்த இரு மாணவர்களிடம் ஆசிரியர்,


''உங்கள் பேரை இருநூறு முறை எழுதிக் கொண்டு வாருங்கள்.''என்றார்.

ஒருவன் சொன்னான்,

''ஐயா, இருவருக்கும் ஒரே அளவு தண்டனை தராமல் எனக்கு மட்டும் அதிகம் தருகிறீர்களே?''


"இருவருக்கும் ஒரே தண்டனை தானே கொடுத்திருக்கிறேன்" என்று ஆசிரியர் அவனிடம் கேட்டார்.


அவன் சொன்னான்,
''இல்லை ஐயா, அவன் பெயர் ரவி.

என் பெயரோ, வேங்கட சுப்ரமணிய கோபால கிருஷ்ணன்.''


*************************************



நம்ம நாராயணசாமி வீட்டு வாசலில் ஒரு கழுதை இறந்து கிடந்தது.


அவர் நகராட்சி அலுவலகத்துக்கு போன் செய்து அதை அப்புறப்படுத்தக் கேட்டுக் கொண்டார்.

அதற்கு அந்த ஆள் குறும்பாக,

"சாமியாரே, இறந்த அந்த கழுதைக்கு இறுதிச் சடங்குகளை முதலில் முடித்துவிட்டு சொல்லுங்கள் நாங்கள் வருகிறோம்"என்றார்.


அதற்கு நாராயணசாமி சொன்னார்,


"அதற்கென்ன, பேஷாகச் செய்து விடுகிறேன். இருந்தாலும் அந்தக் கழுதையோட உறவினர்களுக்கு முதலில் சொல்ல வேண்டும் இல்லையா? அதுதான் உங்களிடம் சொன்னேன்".

***********************************




கை, கால்களில் கட்டுடன் அமர்ந்திருந்தார் கந்தசாமி.


"என்னடா... எப்படி அடிபட்டது?" கேட்டான் அவரது நண்பன்.


"நேற்று உணவு விடுதியில் ஒரு குழப்பம் ஏற்பட்டு விட்டது"


"ஏன்...என்ன நடந்தது?"

"என் மனைவியை அழைத்துக் கொண்டு உணவு விடுதிக்கு நேற்று இரவுசென்றேன். சாப்பிடும்போது அவள் உணவில் ஒரு பூச்சி கிடந்தது. உடனே அவள் சர்வரைப் பார்த்து, 'இந்தப் பூச்சியைத் தூக்கி வெளியே எறியுங்கள் என்று சொன்னாள் என்றாள்"

"சரிதானே... அதற்கும் நீ அடிபட்டதற்கும் என்ன சம்பந்தம்?"


நாராயணசாமி சொன்னார்,

"அந்த சர்வர் என்னைத்தூக்கி ஜன்னல் வழியே வெளியே எறிந்துவிட்டான்"

*************************



என்ன கொடுமை... கணேஷ்...


26 August, 2013

இப்படியிருப்பின் எப்படித்தான் முடிவெடுக்க...


சில நேரங்களில் இப்படித்தான்
அவள் சிந்திவிட்டு போகும்
சிரிப்புபொளிகளை ‌சேகரித்து
அர்த்தம் தேடிப்பாக்கிறேன்...

தில் காதல் இருக்கிறதா
இல்லையா என்ற குழப்பத்தோடே
கலைந்து விடுகிறது அவைகள்...

நாம் கா‌தலை சொல்லி
அவளின் உதட்டோரத்தில்
ஒட்டிக் கொண்டிருக்கும் புன்னகையும்
உதிர்ந்து விடுமோ என்ற தயக்கத்தோடே
என்னை நகர்த்திக் கொண்டிருக்கிறது விநாடிகள்...

வீடும் நாடும்
காவியமும் ஓவியமும்
காதலை மரணபயத்தோடே முடிக்கிறது...

சொல்லாமல் உணர்வற்று கிட்ப்பதை விட
சொல்லிவிடுவதாய் முடிவெடுக்கிறது
என் உயிர் அணுக்கள்...

டிதம் கொடுக்க
கிழிந்த சாலைகளுக்கிடையே கடக்கும்
அ‌வளை எதிர்நோக்கும் போது
பூனையின் குறுக்கீடலால்
வீடு திரும்பி நாளை கொடுக்கலாம்
என்று தன்னோடே வைத்துக் கொள்கிறேன்...

ப்போது தரலாம் என்று
சரிவராத முடிவை யோசிக்கையில்
பல்லியின் சப்தத்தால் அதுவும் ஸ்தம்பித்தது..

ப்படியாக 
என் காதலுக்கு தடங்கலாய் இருக்க
காலையில் இன்னொன்றாய்
பக்கத்து வீட்டுக்காரனின் 
காதல் தோல்வி மரணமும்...
 நான் எப்படித்தான் முடிவெடுக்க....


மீள் பதிவு

24 August, 2013

மனசு சஞ்சலப்படுகிறதா...? கண்டிப்பாக நீங்க இப்படித்தான் செய்யனும்...!...!



ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள். புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார்.

சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.




அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏறி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.

இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.

அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.

ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்றுவரப் பணித்தார்

நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது. ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான்.

புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.

தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்?

நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!

நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?

ஆமாம் சுவாமி!

நம் மனமும் அப்படிப்பட்டதுதான். 
மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகிவிடும். 
நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம்., அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். 
அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும். It will happen. It is effortless. மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல! இயலும் செயலே! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை! it is an effortless process!

22 August, 2013

எச்சரிக்கை..! இந்த சூழ்நிலை உங்களுக்கும் வரும்...!



அவரோடு 
பேசினால்
இவருக்கு 
பிடிக்கவில்லை...

இவரோடு 

பேசினால்
அவருக்கு 

பிடிக்கவில்லை..

இந்த 
இருவரோடும் 
பேசுவது
அடுத்தவருக்கு பிடிக்கவில்லை...


என்னசெய்வது...?

ஒவ்‌வோரிடமும் 
பேசிவிட்டு 
பேசாதவன்‌போல் 
நடித்துக்கொண்டு 
இருப்பதால்

இப்போதெல்லாம்
என்னையே 
பிடிக்கவில்லை 
எனக்கு..!


01 August, 2013

இப்படித்தான் வாழனுமா...!


மரக்கிளையின் உச்சியில் இருந்த அந்தச் சின்னஞ்சிறு பறவையின் கூட்டில் இரண்டு குஞ்சுகள் இருந்தன. தாய்ப்பறவை எங்கோ சென்று இறைதேடிக்கொண்டு தன் குஞ்சுகளுக்குப் புகட்ட திரும்பிவந்தபோது திடுக்கிட்டு அலறியது.

ஒரு பாம்பு மெதுவாக ஊர்ந்தபடி அந்தக் கூட்டை நெருங்கியது. அந்தப் பறவைக் குஞ்சுகளை உண்பது அதன் நோக்கம்.

தாய்ப்பறவையால் அந்தப்பாம்பை என்னசெய்ய முடியும்? பாம்பண்ணா! பாம்பண்ணா! என்று அலறியது.

பாம்பு சட்டை செய்யவில்லை.

பாம்பண்ணா! பாம்பண்ணா! ஒரு நிமிஷம் நான் சொல்றதக் கேளண்ணா! மீண்டும் மீண்டும் தாய்ப்பறவை அலறியது. திரும்பிப்பார்த்த பாம்பு,

ஏன் எதற்காகக் கத்துகிறாய்? என்றது

அண்ணா! நீங்க எவ்வளவு பெரியவங்க! உங்களக் கண்டு பயந்துட்டு இருக்கிற எங்கமேலெ நீங்க இரக்கப்படக் கூடாதா?

அப்படியா?

ஆமாங்க அண்ணா உட்டுடுங்க! நாங்க பொழைச்சுப் போறோம்

நான் ஒண்ணு கேக்கறேன் பதில் சொல்லுவியா?

சொல்லுங்க அண்ணா!

உன் வாயிலெ என்ன வெச்சிருக்கே?

என் குஞ்சுகளுக்கு கொஞ்சமா இரை கொண்டுவெந்தேன் அண்ணா!

என்னது?

சின்னப் புழுக்கள் அண்ணா!

இப்பச் சொல்லு! நீ ஏன் அந்தப் புழுக்களுக்கு இரக்கங் காட்டலே?

அந்தப்பறவையால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.

இதுதான் நமது வாழ்க்கை விதி! உன்னைவிட பலங்குறைந்தது உனக்குத் தீனி! என்னைவிட பலங்குறைந்தது எனக்குத் தீனி! அப்படி இல்லாம வாழ வழி இருக்கிற மனுஷங்களே அப்படி வாழ்றது இல்லே! நம்மாலெ எப்படி வாழமுடியும்? இருந்தாலும் என்னை அண்ணான்னு அன்போடு பலமுறை கூப்பிட்டெ இல்லே, அதனால உனக்கு என்னாலெ எந்த ஆபத்தும் இல்லெ. என் பசிக்கு நான் வேறெ வழி பாத்துக்கிறேன்!

பாம்பு போய்விட்டது. அந்தத் திசையையே பார்த்துக்கொண்டு திகைத்து நின்றது தாய்ப்பறவை!
 ************************
இன்று உலக சாரணர் தினம்....
பள்ளி காலங்கள் மனதிலாடுகிறது...!
 எனது பள்ளி காலத்தில் எங்களை வழிநடத்திய 
சாரணர் அணியின் தலைவர்...
எங்களது ஆசிரியர்...
 **************************
இன்று உலக தாய்பால் தினம்....

16 July, 2013

இப்படித்தான் ஆகிவிடுகிறது சிலநேரங்களில்...!

விஜய் நடிக்கும் நண்பன் விமர்சனம் விரைவில்..
ஒவ்வொரு முறையும்
உன்னை சந்திக்க காத்திருக்கும்‌போது
இப்படித்தான் நடந்துவிடுகிறது...

தூரத்தில் தெரிகிற சுடிதார்களை பார்த்து
ஏன்றோ நீ உடுத்தியது ஞாபகம்வர
நீயோ என எதிர்பார்த்து ஏமாறுவேன்..

உடலில்... உயரத்தில்....
குரலில்... நடையில்....
உன்னைப் ஞாபகப்படுத்தி
நொடிக்கொருத்தி என்னை ஏமாற்றுவாள்...

தேடும் கண்களும்...  நினைப்பும்..
உன்னையே உருவகப்படுத்தி
பார்க்க வைக்கிறது அனைவரையும்...!

ஆனால்...
உண்மையில் நீ அருகில்
அமர்ந்து இருக்கும்போது
யாரும் இருப்பதில்லை உன்னைப்போல்...!

 தங்கள் வருகைக்கும்.. கருத்துக்கும் மிக்க நன்றி...!

02 July, 2013

அது என்ன இந்த ஒருத்தருக்கு மட்டும் தனி சிறப்பு...?


ஒரு குருவிடம் மூன்று சீடர்கள் இருந்தனர். குருகுல வாசம் முடிந்து மூவரும் குருவிடம் சொல்லிக் கொண்டு தத்தமது வழியில் பிரிந்து சென்றனர்.

என்ன வேலை செய்வது என்று முதலாவது சீடன் யோசித்தான். இந்த நாட்டின் அரசன் கற்றறிந்த அறிஞர்களை மதிப்பவன் என்பதால் அரசவை சென்று மன்னனை போற்றிப் பாடி நின்றான். அந்தத் துதிப் பாடல் கேட்டு பெருமகிழ்ச்சி கொணன்ட அரசன் சீடனுக்கு வெகுமதி அளித்ததோடு, அரசவையிலேயே வைத்துக் கொண்டான்.

இரண்டாவது சீடனிடம் நிறைய யோசனைகள் இருந்தன. ஆனால் எதைச் செய்வது, எப்படிச் செய்வது என்பதில் குழப்பம் இருந்தது. அவன் தன் மனம்போன போக்கில் எங்கெங்கோ சுற்றித் திரிந்தான். ஒருநாள் சத்திரம் ஒன்றில் இளைப்பாறினான். அந்தச் சத்திரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. அவன் அதை வாங்கி உண்டபோது, அதுவரை கண்டறியாத ருசியை உணர்ந்தான். அந்த அறுசுவை உணவைத் தயாரித்து அளித்த சமையல்காரரைச் சந்தித்துப் பேசினான். தனக்குப் பின்னால் அந்தக் கலையை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லத் தகுந்த வாரிசு இல்லாமல் அவர் வாடுவது புரிந்தது. சற்றும் தயங்காமல், அந்தப் பெரியவரிடம் உதவியாளராகச் சேர்ந்து கொண்டான்.

அவனைப் பிடித்துப் போனதால் சமையல் கலையின் நுணுக்கங்கள் எல்லாவற்றையும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். அவனும் வெகு விரைவிலேயே சிறந்த நளபாகச் சக்கரவர்த்தியாக உருவெடுத்தான்.

மூன்றாவது சீடனோ முதலில் தனது சொந்த ஊருக்குச் சென்றான். அப்போதுதான் அந்தக் கிராமத்தில் நிறையச் சிறுவர்கள் காடுகளிலும் வரப்புகளிலும் கிடைத்த வேலைகளைச் செய்து பொழுதைக் கழிப்பதைக் கண்டான். தனக்கு அமைந்தது போல ஒரு குருவின் வழிகாட்டல் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டான்.

ஏன் அந்தச் சிறுவர்களுக்குத் தான் கற்ற கல்வியை அளிக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் செயலில் இறங்கினான். ஆனால் தன்னுடைய வாழ்க்கைக்கே வழிதேட வேண்டிய நிலையில் தன்னால் எப்படி மற்றவர்களுக்கு உதவ முடியும் என்ற சந்தேகம் அவனுக்கு.

குரு அடிக்கடி சொல்லும் உபதேசம் ஒன்று நினைவுக்கு வந்தது. எந்த ஒரு நல்ல காரியத்தையும் சிந்தித்தவுடன் செயல்படுத்தத் துவங்கிவிட வேண்டும்; அவ்வாறு துவங்கிவிட்டால் அதை வெற்றிகரமாக முடிப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் தானே தேடி வரும் என்பதுதான் அந்த உபதேசம்.

உடனடியாக, அந்தச் சீடன், அச் சிறுவர்களின் பெற்றோர்களைச் சந்தித்துப் பேசினான். சில சிறுவர்களைச் சேர்த்துக் கொண்டு, ஒரு மரத்தடியில் அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான். அவனுடைய அர்ப்பணிப்பு உணர்வைக் கண்ட அந்த மக்கள் அவன் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே, தாமாக முன்வந்து உதவிகளைச் செய்தனர்.

அவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தி, படிப்படியாக வளர்ந்தான். சீக்கிரத்திலேயே, பெரியதொரு கல்விச் சாலையை நிறுவி, சிறந்த கல்வியாளனாகத் திகழ்ந்தான்.

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் தன் சீடர்களைக் காண விரும்பினார் குரு. மூவரும் குருவைக் காண ஒருசேரக் கிளம்பிப் போனார்கள். தனது சீடர்களைக் கண்டதும், அவர் பெரிதும் மகிழ்ந்தார். தங்களுக்கு ஞானம் அளித்த குருவுக்கு, சிலநாட்கள் பணிவிடை செய்வது என்று மூவரும் தீர்மானித்தனர்.

ஆசிரமத்தில் தங்கி, குருவுக்குப் பணிவிடைகள் செய்தனர். அப்போது மற்ற இரண்டு சீடர்களைக் காட்டிலும் மூன்றாவது சீடனுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தந்தார் குரு. இது மற்ற சீடர்கள் இருவரையும் மனம் நோகச் செய்தது.

ஒருநாள், மூன்றாவது சீடன் இல்லாத சமயம் பார்த்து, இருவரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். குரு புன்னகைத்தார்.

பின்னர் முதலாமவனைப் பார்த்துச் சொன்னார். “நீ அரசவைப் புலவன்! சிறந்த இலக்கியங்களைப் படைக்கின்றாய். உனது படைப்பு, படிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. மன எழுச்சியையும் தருகிறது. அதனால் நீ உயர்ந்தவன்தான்! நான் மறுக்கவில்லை!’என்றார்.

பின்னர், இரண்டாமவனைப் பார்த்து, “நீ சிறந்த நளபாகனாக இருக்கின்றாய். வயிற்றுக்கு உணவளித்தவன் தாய்க்கு ஒப்பானவன்! அதனால் நீயும் உயர்ந்தவன்தான்! நான் ஏற்றுக் கொள்கிறேன்,” என்ற குரு மேலும் தொடர்ந்தார்.

“ஆனால், அறியாமையில் இருக்கும் ஒருவனுக்குக் கல்வி அளிப்பது என்பது, பார்வையில்லாதவனுக்கு பார்வை அளிப்பது போல! கல்விக்கண் திறக்கப்பட்டவனுக்குத்தான் உலகின் மற்ற வளங்கள் அனைத்தும் கிடைக்கும்! அதனால் எழுத்தறிவித்தவன் இறைவனாகிறான்! அதனால்தான் உங்கள் இருவரையும்விட மூன்றாமவனுக்குச் சற்றுக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துவிட்டேன். ஒரு குருவாக நான் இதைச் செய்திருக்கக்கூடாதுதான்! உங்கள் மூவரையும் சமமாகப் பாவித்திருக்க வேண்டும்… என்னை மன்னித்துவிடுங்கள்…’ என்றார் குரு.

“அகங்காரம் எங்கள் கண்களை மறைத்துவிட்டது. எங்கள் இருவரைக் காட்டிலும் அவனுடைய சேவை உயர்வானது என்பதை நாங்கள் இப்போது தெளிவாக உணர்ந்து கொண்டோம். தாங்கள்தான் எங்களை மன்னிக்க வேண்டும்’ என்றனர் சீடர்கள் இருவரும். (ஜென் கதைகள் நூலிலிருந்து)

03 June, 2013

கண்ணீர் வடிக்கும் வேப்பமரம்...! ஏன் இந்த அவலம்...!



ருக்கு மத்தியில்
ஒய்யாரமாய் வளர்ந்து படர்ந்திருந்தது
ஒரு பெரிய வேப்பமரம்...!


சுற்றி எழுப்பிய மேடையில்
தினம் தினம் நடக்கும்
அத்தனை கூத்தையும் 

ரசித்து வளர்ந்துமரம்...

மைனாக்கள் மஞ்சம்கொள்ள
காக்கைகள் கண்ணாம்பூச்சியாட
கிளிகளுக்கு இனிப்பாய் பழம்கொடுத்து
இன்முகம்காட்டி ரசித்தமரம்...!


பெச்சியக்கா பொண்ணு சடங்கானதும்
மரமேறி வெட்டப்பட்டது கிளையிரண்டு
புதுப்பெண்ணை அடைகாக்கும் மகிழ்ச்சியில்
கிளைகொடுத்து சிரித்தமரம்...!


முண்டக்கன்னியம்மனுக்கு காப்புகட்டி
ஊர்முழுக்க தோரணம் கட்ட
மொத்தமாய் இலைகள் கொடுத்து
பரவசப்பட்டு மகிழ்ந்தமரம்...


மின்வயர்களை தொட்டதற்காக...

பல்லுக்குச்சிக்காக...
அம்மைபோட்டால் படுக்கைக்காக
என ‌எவ்வளவு வெட்டியும்
இன்னும் பரந்து வளந்தது சிரித்தபடியே...!


ற்போது முதல்முதலாய்
கண்ணீர்வடித்தது அந்த வேப்பமரம்
சாதிகலவத்துக்காக கிளைகளைவெட்டி
சாலையை மறித்தபோது...!



நன்றி..!

30 April, 2013

மன்னிப்பின் மகத்துவத்தை எரித்தோம்...!



ல்லாத் தவறுகளுக்கும்
கடைசித் தீர்ப்பாய் இருப்பது
மன்னிப்பே...!


தவறுகளின் தன்மையும், அளவுகளும் 

வேறுப்படுகின்றன
ஆனால் மன்னிப்புகள் ஒன்றே...!

மன்னிப்பளித்து மன்னிப்பளித்து
தினம் தினம் தவறுகளை 

நியாயப்படுத்தி விடுகிறோம்...!

மன்னிப்புகளுக்கு பஞ்சமில்லை இங்கு
அதனால் தான்
தவறுகள் தவறாமல் நடக்கிறது...!


தற்போது இங்கு
“மன்னிப்பு“ தவறாகிவிட்டது
தவறுகளை மன்னித்தே...!



07 January, 2013

என்னை கலங்க வைத்த பட்டாம்பூச்சி....


பூக்களை பறிக்கும் 
பொழுதுகளிலெல்லாம்
முட்களோடு வதைப்படாமல்
திரும்பியதில்லை என் கைகள்...!


ய்வைத்தேடி கயிற்றுக்கட்டிலில்
தலைச்சாயும்போதெல்லாம்
உறுத்திக்கொண்டே இருக்கும்
இன்றைய நாளைய தேவைகள்...!


றுதல் சொல்ல 
ஆளில்லாத பலதருணங்களில்
என் சோகத்தையும் சேர்த்து

பாடிவிட்டுப்போகிறது சில கருங்குயில்கள்...!

 ண்ணமிகு கோலத்துடன்
வானவில் வந்தவுடன் பதறித்தான்போகிறேன்
ஒழுகும் குடிசை என்னுடையது...!


காலங்களும் தருணங்களும்
எனக்கு இப்படியாய் இருக்க...
தற்போது புதியதாய் ஒரு வேதனை
என்னை சூழ்கிறது...!


நேற்று ஒரு பயணத்தின்போது 
என் முகத்தில் பட்டுத்தெறித்து சிதறிய 
ஒரு பட்டாம்பூச்சிக்காக...!

 
வாசித்த அனைவருக்கும் நன்றி...!
Related Posts Plugin for WordPress, Blogger...