பாலாவின் இயக்கத்தில் கல்பத்தி அகோரம் தயாரிப்பில் இன்று திரைக்கு வந்துள்ள அவன் இவன்  திரைப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம். கமுதிக்கோட்டை ஜமீன்தார் திரிபாதியாக ஜி.வி. குமார். அவரது 60-வது  பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஷால் பெண் வேடமிட்டு ஆடிப்  பாடுகிறார்.பெண்களே தோற்றுப்போகும் அளவிற்கு நடனமாடியிருக்கும் விஷாலா இது  என்று நம்பமுடியவில்லை. அவரது நடிப்பும், நடனமும் கனகச்சிதம்.
விஷாலின் பரம்பரை குலத் தொழிலே திருடுவதுதான். விஷாலின் அப்பாவிற்கு  இரண்டு மனைவிகள். முதல் மனைவி முன்னாள் நடிகை அம்பிகா. அவரது மகனாக மாறு  கண் கொண்ட விஷால் வருகிறார். திருடுவது பிடிக்காமல் இவர் ஒரு நாடக நடிகராக  முயற்சிக்கிறார். இவரது தந்தையின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர் ஆர்யா. திருட்டுத்  தொழில் செய்வதில் மன்னனாக வருகிறார். ஜட்ஜ் வீட்டில் இருக்கும் லாக்கரின்  சாவி தொலைந்து போய்விட, அதை திறக்க ஆர்யாவை கூட்டிச் செல்கிறார்கள். அவரது  திருட்டுத் திறமைக்கு இதை சான்றாக காட்டுகிறார் பாலா.
விஷால் திருடப் பிடிக்காமல், நாடகத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.  திருடனான ஆர்யாவோ பல வழிகளில் திருடி சம்பாதிக்கிறார். “நம்ம குலத் தொழிலே  திருடுவதுதான். இல்லையெனில் அது சாமி குத்தமாகிவிடும்’’ என்று அம்மாவின்  தூண்டுதலால் விஷாலும் திருடனாகிறார். தானும் ஒரு திருடன் என்பதை நிரூபிக்க விஷால் ஒரு வீட்டிற்குள் திருட  நுழைகிறார். அங்கு கான்ஸ்டபிளாக இருக்கும் அவரது கதாநாயகியான ஜனனி ஜயரை  சந்திக்கிறார். அங்கு நடக்கும் சில நிகழ்வுகளால் இவர்களுக்குள் காதல்  மலர்கிறது.
இதனிடையே டுடோரியல் கல்லூரியில் படிக்கும் மாணவி தேன்மொழியாக வருகிறார்  மதுஷாலினி. இவருடைய அழகால் மயங்கும் ஆர்யா, அவரை விரட்டி விரட்டி  காதலிக்கிறார். மதுவும் காதலிக்கிறார். இதனிடையே அந்த ஊரில் இருக்கும் பாரஸ்ட் ஆபிஸர், ஜமீன்தார் திரிபாதியை  அவமானப்படுத்தி விடுகிறார். அவரை பதிலுக்கு அவமானப்படுத்த வேண்டும் என்று  திரிபாதி ஆர்யாவிடமும், விஷாலிடமும் சொல்கிறார்.
அதன்படி பாரஸ்ட் ஆபிஸரை அவமானப்படுத்த இருவரும் மலைக்கு செல்கின்றனர்.  பாரஸ்ட் ஆபிஸரோ 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தன மரங்களை மலையிலிருந்து  அலுவலகத்திற்கு கொண்டு வருகிறார். அந்த நேரத்தில் விஷாலும், ஆர்யாவும்  வந்து சண்டையிடுகிறார்கள்.
போலிஸார் இந்த ஒரு கோடி சந்தனமரத்திற்குதான் இவர்களிருவரும்  சண்டையிடுகிறார்கள் என மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விடுகிறார். ஒரு  கோடி சந்தனமரம் இருக்கும் லாரியை எடுத்துக் கொண்டு விஷால் தப்பித்து  விடுகிறார். ஆர்யா போலிஸிடம் சிக்கிக் கொள்கிறார். பிறகு விஷால் லாரியைக்  கொண்டு வந்து வனத்துறையிடம் ஒப்படைக்க, இருவரும் ரிலீஸ்  செய்யப்படுகிறார்கள்.
அந்த ஊரில் இருக்கும் மாடுகளை கடத்திச் சென்று இறைசிக்காக விற்கும்  வேலையை செய்து வருகிறார் ஆர்.கே.  இதை திரிபாதி கண்டறிந்து தடுப்பது  மட்டுமின்றி காவல் துறை, பத்திரிகை என அனைவருக்கும் தெரிவித்து விடுகிறார்.  இதனால் சிறைக்குப் போகும் ஆர்.கே, திரும்பி வந்து ஜமீன்தாரை கொடூரமாக கொலை  செய்து விடுகிறார்.
 ஹைனஸ் என்று அந்த ஊர் மக்களால் அழைக்கப்படும் ஜமீன்தார் மேல் பற்று  கொண்டுள்ள ஆர்யாவும், விஷாலும் இதற்கு பழிவாங்க முனைகிறார்கள். இதில் யார்  ஜெயித்தார், யார் தோற்றார் என்று காட்டி சுபம் போட்டிருக்கிறார் பாலா. 
தனது வழக்காமன படங்களிலிருந்து நகைச்சுவை கலந்த படத்தை வழங்கியிருக்கும்  பாலாவிற்கு விஷாலின் அட்டகாசமான நடிப்பு உறுதுணையாக நிற்கிறது. 
மாறுகண்ணை கொண்டு நடித்திருக்கும் விஷாலின் துணிச்சல் பாராட்டப்  படவேண்டிய ஒன்று. மாறுகண்ணுடையவராகவே வாழ்ந்திருக்கிறார். அகரம் பவுண்டேசன்  சார்பில் அந்த கிராமத்திற்கு வரும் நடிகர் சூர்யாவிடம் நாடக நடிகராக  இருக்கும் விஷால் நடித்துக் காட்டும் ஒரு காட்சி போதும் அவரது திறமையை  பறைசாற்ற... விஷாலா இப்படி நடிப்பது என்று நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார்.  பாலா சொன்னது போல் இவருக்கு விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
அசால்டான பேர்வழியாக வரும் ஆர்யாவின் நடிப்பும் பிரமாதம். தன் காதலியான  மதுஷாலினியை மறந்து விடு என்று திரிபாதி சொல்லும் போது “மலத்தை திங்க  சொல்லு திங்கறேன்... அவளை மறந்துடுன்னு சொன்னா எப்படி” என்று நறுக்கென  தெறிக்கிறார்.
ஜனனி ஐயருக்கு நல்ல வாய்ப்பு. அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். மதுஷாலினி சில காட்சிகளில் வந்து போனாலும் மனதில் நிற்கிறார்.
வில்லனாக வரும் ஆர்.கே வழக்கமான பாலாவின் படங்களில் வரும் கொடூரத்தனத்தை  கண்முன்னே நிறுத்துகிறார். திரிபாதியை மலைமேல் அம்மணமாக அடித்துக்  கொல்வது, மரத்தில் கட்டி தொங்க விடுவது என குரூரமாய் காட்சியளிக்கிறார்.
ஹைனாஸாக வரும் ஜி.வி.குமாரின் நடிப்பு இப்படத்திற்கு மற்றொரு பலம்.  இவரைச் சுற்றித்தான் இப்படத்தின் கதை நகர்கிறது என்றே சொல்லாம். அந்த  அளவிற்கு இவரது நடிப்பு வெகு இயல்பு.
இப்படத்தின் மேக்கப் மேனுக்கு ஒரு சபாஷ் போட்டே ஆகவேண்டும். அவ்வளவு  நேர்த்தி. யுவனின் இசையைமைப்பை பாலாவின் அட்டகாசமான திரைக்கதை முந்திச்  சென்றுவிடுகிறது. (பிலிமிக்ஸ்)
இத்தனை பேரையும் நேர்த்தியாக வேலைவாங்கியிருக்கும் பாலாவை எத்தனை  பாராட்டினாலும் தகும். மொத்ததில் பாலாவின் மற்றொரு ஆணித்தரமான படைப்பு இந்த  ‘அவன் இவன்’
 மார்க் உங்க இஷ்டம் போல...  ரேங்க் ஏதோ போட்டுகுங்க... தியாட்டரில் நீங்க பார்க்கிற வரை ஓடும்.. வேறஏதாவது டவுட் இருந்தா படம்பார்த்து தீர்த்துக்கங்க...