கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

02 August, 2013

தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!




ஒருவருக்கு திடீரென்று தலைவலி. உடனே மருத்துவமனைக்குப் போனார். அந்த டாக்டர், இவரை ஓர் அறையில் படுக்க வைத்தார். ஒரு மருந்துச் சீட்டு எழுதினார்.

அங்கே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்து, ‘‘இதை உடனே வாங்கி வா!’’ என்றார்.

அவர் அதை வாங்கிக் கொண்டு வெளியே ஓடினார்.
 
மருந்து வாங்கப் போன ஆசாமி வருவார் என்று காத்திருந்தார்கள். ஆனால், போனவர் வரும் வழியாகத் தெரியவில்லை.
 
மருந்து கிடைக்காமல் எங்கே அலைகிறாரோ? படுத்திருந்தவருக்குத் தலைவலி இன்னும் அதிகமாயிற்று. டாக்டர் பார்த்தார். உடனடியாக இன்னொரு மருந்தின் பெயரை எழுதினார்.
 
‘‘இது கிடைத்தாலும் பரவாயில்லை!’’ என்று அந்தச் சீட்டை இன்னொருவரிடம் கொடுத்து வாங்கி வரச் சொன்னார்.
 
அவரும் அவசரமாக வெளியே ஓடினார். ஆனால், வந்து சேரவில்லை.
 
படுத்திருந்தவரை தலைவலி பாடாகப்படுத்துகிறது. டாக்டரும் தவித்துக் கொண்டிருக்கிறார்.
 
இந்த சமயத்தில் அந்த மருத்துவமனையின் வாசல் புறத்தில் ஏதோ கூச்சல் கேட்கிறது. அங்கே ஒரு சுழலும் வழி...
 
ஒருவர் பின் ஒருவராகத்தான் உள்ளே வர முடியும். கால்நடைகள் நுழையாமல் இருக்க அந்த ஏற்பாடு.
 
அங்கே இரண்டு பேர், ‘நான்தான் முதலில் உள்ளே நுழைவேன்!’ என்று இருவரும் நின்று கொண்டு தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். விளைவு& இரண்டு பேருமே செல்ல முடியவில்லை.
 
இவர்கள் போடுகிற சத்தத்தைக் கேட்டு டாக்டர் வெளியே ஓடி வந்து பார்க்கிறார். அந்த இரண்டு பேருமே உள்ளே படுத்திருக்கிற தலைவலிக்காரருக்காக மருந்து வாங்கப் போனவர்கள்.
 
இருவரின் கையில் இருப்பதும் ஒரே நோய்க்கான மருந்துதான் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.
 
உள்ளே படுத்திருப்பவரோ, தலைவலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கான மருந்தை வைத்திருப்பவர்களோ வெளியே சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
 
விளைவு? தலைவலி தொடர்ந்து கொண்டிருக்கிறது! இதுதான் இன்றைய ஆன்மிகம்!
 
மனித குலம்தான் அந்த நோயாளி. கடவுள்தான் அந்த மருத்துவர். மதவாதிகள்தாம் அங்கே சண்டை போடுகிறவர்கள்.
 
சரி... இப்போது கதையைத் தொடரலாம். டாக்டர் அவசரமாக வெளியே ஓடி அவர்கள் கையில் இருந்த இரண்டு மருந்தையும் வாங்கிக் கொண்டு உள்ளே ஓடுகிறார்.
 
ஒரு பாட்டில் மருந்தை அந்த நோயாளிக்குக் கொடுக்கிறார். இன்னொரு பாட்டில் மருந்தை அவசரமாகத் தானே சாப்பிட்டு விடுகிறார்! 
ஆமாம்!
 
இப்போது டாக்டருக்கும் தலைவலி!
 
மதவாதிகளே!
 
தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!
 
நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்




நம் தேசம் எதிர்நோக்கியிருக்கும் மிகப்பெரிய பிரச்சனை இதுதான். இங்கு கடவுள் இல்லை என்று சொல்பவர்களால் கூட எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் கடவுள் இருக்கிறார் என்று சொல்லும் மதவாதிகளால்தான் அதிகமான பிரச்சனைகள் ஏற்ப்பட்டுக்கொண்டிருக்கிறது.


தன் கடவுள்தான் இந்த சமூதாயத்தில் சிறந்ததாகக் கருதப்படவேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் உழைக்கும் உழைப்பு இருக்கிறதே. முடியவில்லை. தற்போது இவர்களின் விளம்பரம் செயற்கைகோளையும் தாண்டி விரிவடைந்துக் கொண்டிருக்கிறது. விளம்பரப்படுத்தி கடவுளை வளர்க்க அவர் என்ன உற்பத்திபொருளா...?


இந்த பதிவு மதவாதிகளை இழிவுப்படுத்தவோ அல்லது குறைகூறவோ அல்ல... கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் என்று அறிவுரைக்கூறத்தான்... நமக்கு ஏன் இந்த வம்பு என்று ஒதுங்கிக்கொள்ளலாம்... அநத பாதிப்பு சமுதாயத்திற்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றால்.

5 comments:

  1. அருமையான பதிவு! சமயத்திற்கேற்ற கருத்து! நன்றி!

    ReplyDelete
  2. சிறப்பான கருத்தை சொன்ன பகிர்வு.

    ReplyDelete
  3. மிக அருமை. ஆனால் கடவுளை பற்றிக் கொண்டால் மூளை மழுங்கிவிடும், பின்னே எவ்வாறு இதை எல்லாம் உணர்வார்கள்.

    ReplyDelete
  4. கடவுளை வளர்க்க அவர் என்ன உற்பத்திபொருளா...?//கேள்வி?

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...